Published : 01 Apr 2021 08:44 PM
Last Updated : 01 Apr 2021 08:44 PM

வாக்காளர்களுக்கு கூகுள் பே, போன் பே, பேடிஎம் மூலம் பணப் பட்டுவாடா: தேர்தல் ஆணையத்தில் திமுக புகார்

சென்னை

வாக்காளர்களுக்கு கூகுள் பே, போன் பே, பேடிஎம் மூலம் பணப் பட்டுவாடா செய்யப்படுகிறது. வாக்காளர்களிடம் இருந்து வாக்காளர் அட்டை மற்றும் செல்பேசி எண் தகவல்களைப் பெறும் அதிமுகவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தமிழகத் தலைமைத் தேர்தல் அலுவலரிடம் திமுக புகார் அளித்துள்ளது.

இதுகுறித்து திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையருக்கும், தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரியிடமும் அளித்த புகார்:

“தமிழகத்தில் உள்ள பல்வேறு தொகுதிகளில் அதிமுகவைச் சேர்ந்தவர்கள் ஒவ்வொரு வாக்காளர் வீட்டிற்கும் சென்று அவர்களது வாக்காளர் அட்டை நகல்களையும் - அவர்களின் செல்பேசி எண்களையும் பெற்று வருகிறார்கள். குறிப்பாக திமுக தலைவர் ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில், நேற்று இரவு பல்வேறு இடங்களில் அதிமுகவினர் வாக்காளர்களிடம் இருந்து அவர்களது அடையாள அட்டை விவரங்களையும், அவர்களது செல்பேசி எண்களையும் பெற்று வருகின்றனர்.

வாக்காளர்களுக்கு கூகுள் பே, போன் பே, பேடிஎம் ஆன்லைன் மூலமாக பணப் பட்டுவாடா செய்வதற்காக அவர்களது தொலைபேசி எண்களின் விவரங்கள் அதிமுகவினரால் பெறப்பட்டு வருகின்றன. மேலும், தொகுதிக்கு வெளியே வாக்காளர்களை அழைத்து வந்து அவர்களுக்குப் பணப் பட்டுவாடா செய்வதற்கும் அதிமுக முயற்சி செய்து வருகிறது. இதுபோன்று தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு தொகுதிகளில் அதிமுகவினர் முறைகேட்டில் ஈடுபட்டு வருகின்றனர்.

தேர்தல் ஆணையத்தின் பறக்கும் படை மற்றும் சோதனைச் சாவடிகளில், ஒருவரிடம் இருந்து பணத்தைக் கைப்பற்றுவதற்காக மட்டுமே சோதனை நடத்துவதோடு அல்லாமல் அவர்களிடம் வாக்காளர்களின் அடையாள அட்டை தகவல்கள் மற்றும் அவர்களது செல்பேசி எண் தகவல்கள் இருந்தால் அதனையும் கைப்பற்ற வேண்டும் என்று அவர்களுக்கு உரிய வழிமுறைகளை அறிவுறுத்த வேண்டும்.

அதிமுகவினரின் இதுபோன்ற தேர்தல் முறைகேடுகளைத் தடுக்காவிட்டால், அது நேர்மையான மற்றும் நியாயமான தேர்தலை பாதிக்கும். ஆகவே, இந்தப் புகார் மீது உடனடியாக சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும். தேர்தல் ஆணைய அலுவலர்களுக்கு உரிய உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும்''.

இவ்வாறு புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x