Published : 01 Apr 2021 07:23 PM
Last Updated : 01 Apr 2021 07:23 PM

தொழில்துறை வளர்ச்சி சமநிலை இல்லாததால் பின்தங்கும் தென்மாவட்டங்கள்; வேலைவாய்ப்பு உருவாக்காததால் இடம்பெயரும் இளைஞர்கள்- மதுரை வரும் பிரதமர் கவனிப்பாரா?

படம்: எம்.சாம்ராஜ்

மதுரை

கடந்த கால் நூற்றாண்டாக தென் மாவட்டங்கள் தொழில்துறையில் பெரிய வளர்ச்சிப் பெறாததால் படித்த, படிக்காத இளைஞர்கள் வேலைவாய்ப்பிற்காக கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட இரண்டாம் நிலை நகரங்களுக்கு இடம்பெயரும் அவலம் ஏற்பட்டுள்ளது.

மதுரையை மையமாகக் கொண்ட தென் மாவட்டங்கள், சிறு, சிறு நகரங்களையும், கிராமங்களையும் அதிகம் கொண்டது. விவசாயமும், அதனைச் சார்ந்த துணைத்தொழில்களும் மட்டுமே முக்கியத் தொழிலாக உள்ளன.

சென்னை, சேலம், ஓசூர், கோவை, திருச்சி, திருப்பூர் போன்ற தொழில் நகரங்களை போல் தென் மாவட்டங்களில் தொழில் நகரங்கள் இல்லை.

சிறிய அளவிலான சிறு, குறு தொழில் நிறுவனங்கள், கால்நடை வளர்ப்பு, விருதுநகர் பட்டாசு ஆலைகள், ஹோட்டல்கள், ஜவுளி நிறுவனங்கள் மற்றும் விவசாயம் உள்ளிட்டவைதான் மக்களுக்கான வேலைவாய்ப்பு அளிக்கக்கூடிய தொழில்களாக உள்ளன.

மதுரையில் மட்டும் சில ஐ.டி நிறுவனங்கள் உள்ளன. அதிலும் அதிக ஊதியத்தில் வேலைபார்க்கக்கூடிய நிபுணத்துவம் வாய்ந்தவர்கள் பணிபுரியக் கூடியளவிற்கு பெரிய வேலைவாய்ப்புகள் இல்லை. அதனால், கல்லூரி படிக்கும் புதியவர்களுக்கான பயிற்சிக் களமாக இந்த ஐடி நிறுவனங்கள் செயல்படுகின்றன. கடந்த சில ஆண்டாக மழை பெய்து ஒரளவு விவசாயம் நடந்தாலும், போதிய விலை கிடைக்காததால் இந்த தொழிலும் லாபகரமாக இல்லை.

அதனால், விளைநிலங்கள் வீட்டுமனைகளாக மாறிக் கொண்டிருக்கின்றன. தமிழகத்தில் புதிய தொழில் முதலீடுகளும், தொழிற்சாலைகளும் ஏற்கெனவே தொழில்துறையில் வளர்ச்சிப்பெற்ற சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களுக்கும், கோவைக்குமே செல்கின்றன.

மதுரைக்கு முக்கியத்துவம் கொடுத்து தொழில் முதலீடுகள், தொழில்பேட்டைகள் எதுவும் அமைக்கப்படவில்லை. வேலைவாய்ப்பு இல்லாததால் படித்த, படிக்காத தென் மாவட்ட இளைஞர்கள், வேலை தேடி சென்னை, பெங்களூரு, கோவை, திருப்பூர் நகரங்களுக்கும் இடம்பெயரும் அவலம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு தொழில் வளர்த்தக சங்கத் தலைவர் ஜெகதீசன் கூறுகையில், ‘‘தொழில் வளர்ச்சி தமிழகம் முழுவதும் சமநிலையாக இல்லை. மேற்கு, வடக்கு, மத்திய மாவட்டங்களை ஒப்பிடும்போது தென் மாவட்டங்களில் பெரிய தொழிற்சாலைகள் இல்லை.

ஒரு பெரிய தொழிற்சாலை அமையும்பட்சத்தில், அதற்கு தேவையான உபகரணங்கள் தயாரித்து கொடுக்க 200க்கும் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் உருவாகும்.

அதுவும், ஓசூர், கோவை, சென்னை போன்று மிகப்பெரிய தொழிற்பேட்டைகள் மதுரையில் அமைந்தால் மதுரை மட்டுமில்லாது தென் மாவட்டமே தொழில்துறையில் ஏற்றம்பெறும்.

இப்படிதான் சென்னை, ஓசூர், கோவை, நகரங்கள் வளர்ச்சிப்பெற்றன. உயர் நீதிமன்றம், எய்ம்ஸ் போன்ற மிகப்பெரிய கட்டுமைப்பு திட்டங்கள் வரும்போதுதான் அதனை சார்ந்து மற்ற தொழில்கள், மக்கள் வாழ்வாதாரம் மேம்படும்.

மதுரை விமானநிலையம் விரிவாக்கப்பணிக்கு 2009ம் ஆண்டு முதல் தற்போது வரை நிலத்தை கையகப்படுத்தம் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது, ’’ என்றார்.

மதுரை 4 ஆயிரம் ஆண்டிற்கு மேற்பட்ட வரலாறு கொண்ட பாரம்பரிய நகரமாக இருந்தும் இன்னமும் சுற்றுலாவை மட்டுமே நம்பியிருக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.

கரோனா மட்டுமில்லாது மீனாட்சியம்மன் கோயிலிலும் தற்போது செல்போன் கட்டுப்பாடு, பாதுகாப்பு கெடுபிடியால் முன்போல் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள், வெளிமாநில சுற்றுலாப்பயணிகள் வருவதில்லை. அதனால், சுற்றுலாப்பயணிகளை நம்பி செயல்படக்கூடிய சதாரண ஆட்டோ, டாக்ஸி தொழிலாளர்கள் முதல் சுற்றுலா சேவை நிறுனங்கள், நட்சத்திர ஹோட்டல்கள், ரிசார்ட்கள், தங்கும் விடுதிகள் வரை பாதிக்கப்பட்டுள்ளன. விமானநிலையத்தை மேம்படுத்தவும், தென் மாவட்ட தொழில்துறையை மேம்படுத்தவும் யாரும் அக்கறை காட்டுவதாக தெரியவில்லை, ’’ என்றார்.

மதுரை, ராமேசுவரம், கொடைக்கானல், கன்னியாகுமரியை இணைக்கும் விமான சுற்றுலா திட்டம் அறிவித்து 6 ஆண்டிற்கு மேலாகியும் இன்னும் ஆய்வுநிலையிலே உள்ளது.

மதுரை விமானம் நிலையம் இன்னும் சுங்கவரி விமான நிலையமாகவே உள்ளன. துபாய், இலங்கை மற்றும் சிங்கப்பூர் உள்ளிட்ட மிகச் சிறிய நமாடுகளுக்கு மட்டுமே இங்கிருந்து விமானங்கள் இயக்கப்படுகிறன்றன.

24 மணி நேரமும் இந்த விமானநிலையம் இயங்காததால் பிற நாட்டு விமானச் சேவை தடைப்பட்டுள்ளது. மத்திய, மாநில அரசுகள், இந்த விமானநிலையத்தை பன்னாட்டு விமானநிலையமாக மாற்ற நடவடிக்கை எடுத்தால் தென் மாவட்ட பயணிகள் மற்ற நகரங்களுக்கு செல்லாமல் எளிதாக வெளிநாடுகளுக்கு சென்று வருவதோடு தொழில்துறை, விவசாயத்துறை வளர்ச்சிப்பெற வாய்ப்புள்ளது. இதற்கு உள்ளூர் மக்கள் பிரதிநிதிகள் எந்த முயற்சியும் செய்யவில்லை.

கிடப்பில் கிடக்கும் தலையாய திட்டங்கள்

மத்திய அரசு துணையுடன் நிறைவேற்ற வேண்டிய ‘எய்ம்ஸ்’, மெட்ரோ ரயில் திட்டம், சிப்காட் தொழிற்பேட்டைகள், மதுரை-இன்டஸ்ட்ரியல் காரிடர் திட்டம், மதுரை-போடி ரயில் திட்டம், திண்டுக்கல்-சபரிமலை ரயில் திட்டம், பழனி-கொடைக்கானல் ரோப்கார் திட்டம் போன்றவை இன்னும் நிறைவேற்றப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளன. அதுபோல், தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கும், நாட்டின் பிற நகரங்களுக்கும் மக்கள் பஸ்களில் செல்வதற்கு போதிய இருக்கைகள் இல்லாமல் சிரமப்படுகின்றனர்.

அதனால், தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட முக்கிய பண்டிகை நாட்களில் வெளியூர்களில் இருந்து சொந்த ஊர்களுக்கு திரும்ப முடியாமல் கஷ்டப்படுகின்றனர். அதனால், தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு கூடுதல் ரயில் வசதிகள் ஏற்பாடுகள் செய்ய வேண்டும். இதுபோன்ற தென் மாவட்ட வளர்ச்சிக்கான தலையாய திட்டங்களை செயல்படுத்துவதற்கு கடந்த கால்நூற்றாண்டாக எந்த அரசுகளும் நடவடிக்கை எடுக்கவில்லை. இன்று மதுரை தேர்தல் பிரச்சாரத்திற்கு வரும் பிரதமர் மோடி, இந்த திட்டங்களின் நிலை, அதனை செயல்படுத்துவதை பற்றி உறுதியளித்தால் தென் மாவட்ட மக்கள் மகிழ்ச்சியடைவார்கள்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x