Published : 01 Apr 2021 06:16 PM
Last Updated : 01 Apr 2021 06:16 PM
சோழவந்தான் பகுதியில் வாக்காளர்களுக்கு பணம் விநியோகித்ததாக அத்தொகுதி அதிமுக எம்எல்ஏ மீது வழக்கு பதியப்பட்டது.
மதுரை மாவட்டத்திலுள்ள சோழவந்தான் சட்டப்பேரவை தொகுதியில் எம்எல்ஏவாக இருப்பவர் மாணிக்கம். அதிமுக சார்பில், அதே தொகுதியில் போட்டியிட மீண்டும் அவருக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. தொகுதி முழுவதும் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்.
இந்நிலையில் மார்ச் 31ம் தேதி தொகுதிக்கு உட்பட்ட முதலியார் கோட்டை 3வது வார்டு பகுதியில் பொது மக்களிடம் ஆதரவு திரட்டினார். அப்போது, அவர் , தேர்தல் விதிமுறையை மீறி வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்யவதாக புகார் எழுந்தது.
இதைத்தொடர்ந்து பறக்கும் படை அலுவலர் அப்துல் ரகுமான் உள்ளிட்ட போலீஸார் அங்கு சென்றனர். விசாரணையில், அவர் தன்னை வரவேற்று ஆரத்தி எடுத்த பெண்களுக்கு பணம் வழங்கியதாக தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து பறக்கும் படை அதிகாரி கொடுத்த புகாரின் அடிப்படையில் அவர் மீது சோழவந்தான் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
அதிமுகவினரிடம் கேட்டபோது, ‘‘ வாக்காளர்களுக்கு பணமெல்லாம் விநியோகம் செய்யவில்லை. ஆரத்தி எடுத்த பெண்களுக்கு ஏதாவது தட்டில் பணம் போட்டிருக்கலாம். ஓட்டுக்கென யாருக்கும் பணம் விநியோகிக்கவில்லை,’’ என்றனர்.
மதுரை ஊமச்சிகுளம் சந்திப்புப் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் நேற்று தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்பகுதியில் வாக்காளர்களுக்கு வேட்டி, வேலைகளை இருவர் விநியோகித்தனர்.
விசாரணையில், அவர்கள் ஊமச்சிக்குளம் அதிமுக கிளைச் செயலர் ரவி மற்றும் அக்கட்சியைச் சேர்ந்த சுப்பையா என்பது தெரியவந்தது.
இது தொடர்பாக பறக்கும் படை அலுவலர் பூமாயி கொடுத்த புகாரின்பேரில், ஊமச்சிகுளம் போலீஸார் இருவரும் மீது வழக்குப் பதிவு செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT