Published : 01 Apr 2021 05:56 PM
Last Updated : 01 Apr 2021 05:56 PM
ஏப்ரல் 6-ம் தேதி பாஜகவின் ஸ்தாபன தினம் என்பதால் இத்தேர்தலில் பாஜக, அதிமுக, பாமக கூட்டணி வேட்பாளர்கள் மகத்தான வெற்றி பெறுவார்கள் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
திருக்கோவிலூரில் இன்று கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியதாவது:
’’திருக்கோவிலூர் விஷ்ணு, சிவன் கோயில் ஒன்றாக அமைந்த இடம். 108 திவ்ய தரிசன இடங்களில் ஒன்றான திருக்கோவிலூரை வணங்குகிறேன். சட்டப்பேரவைத் தேர்தலைத் தேர்தல் ஆணையம் நடத்துகிறது. தேர்தல் நடக்கும் ஏப்ரல் 6-ம் தேதி பாஜகவின் ஸ்தாபன தினம் என்பதால் இத்தேர்தலில் பாஜக, அதிமுக, பாமக கூட்டணி வேட்பாளர்கள் மகத்தான வெற்றி பெறுவார்கள்.
தமிழக முதல்வர் விவசாயக் குடும்பத்தில் இருந்து வந்தவர். அவர் தமிழக மக்கள் கரோனாவில் இருந்து மீண்டு வரச் சிறப்பாகச் செயல்பட்டதற்கு என் வாழ்த்துக்கள். தமிழக மக்களுக்குப் பல திட்டங்களை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நிறைவேற்றியுள்ளனர். 5 ஆண்டில் 2 முறை விவசாயிகள் கடனைத் தள்ளுபடி செய்துள்ளனர். ஜெயலலிதாவின் 70-வது பிறந்த நாளில் மோடி கையால் பெண்களுக்கு மோட்டார் சைக்கிள் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது. மூன்றரை லட்சம் பெண்கள் இந்தத் திட்டத்தால் பயனடைந்துள்ளனர். 100 யூனிட் மின்சாரம் இலவசம், அம்மா மினி கிளினிக் திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன.
மோடி தமிழகத்துக்குப் பல திட்டங்களைக் கொண்டு வந்துள்ளார். பட்ஜெட்டில் சாலை மேம்பாட்டுக்கென தமிழகத்துக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் ஒதுக்கப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் விரிவாக்கத்துக்கு ரூ.63 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. எம்ஜிஆருக்குப் பெருமை சேர்க்க சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு எம்ஜிஆர் பெயரை மோடி சூட்டினார். ராணுவத் தளவாடம் உற்பத்தி செய்ய நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மதுரை எய்ம்ஸ் அமைக்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
லஞ்ச ஊழலில் திளைக்கும் காங்கிரஸ், திமுக கூட்டணி எந்தத் திட்டத்தையும் கொண்டு வராது. மோடியின் வழிகாட்டுதல்படி தமிழகத்தின் வளர்ச்சிக்கு முதல்வர், துணை முதல்வர், பாமக, பாஜக கூட்டணி பங்காற்றும். இங்கே போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவரையும் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும். பிரதமர் மோடியின் வெற்றி யாத்திரை, சங்கல்ப யாத்திரையில் தமிழக மக்களும் பங்கேற்க வேண்டும்’’.
இவ்வாறு அமித் ஷா பேசினார்.
இக்கூட்டத்தில் மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி, தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், எம்எல்ஏ குமரகுரு, முன்னாள் அமைச்சர் மோகன், முன்னாள் எம்.பி. தன்ராஜ், முன்னாள் எம்எல்ஏ ஏ.ஜி.சம்பத், பாஜக நிர்வாகிகள் கே.டி.ராகவன், கார்த்திகாயினி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
1980-ம் ஆண்டு ஏப்ரல் 6-ம் தேதி பாஜக தோற்றுவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT