Published : 01 Apr 2021 05:52 PM
Last Updated : 01 Apr 2021 05:52 PM

சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்க முடியாமல் பிரச்சினையை திசை திருப்பி பேசுகிறார்கள்: மோடி, யோகிக்கு கே.எஸ்.அழகிரி கண்டனம்

சென்னை

''சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்கத் தயாராக இல்லாத நிலையில், தேர்தல் பிரச்சாரத்தை திசை திருப்பி அரசியல் ஆதாயம் தேடலாம் என்ற கனவு நிச்சயம் நிறைவேறாது. தமிழக வாக்காளர்கள் பாஜக, அதிமுக கூட்டணியைத் தோற்கடித்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு அமோக வெற்றி வழங்குவது உறுதியாகிவிட்டது'' என்று கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி இன்று விடுத்துள்ள அறிக்கை:

“‘திமுக, காங்கிரஸ் பெண்களுக்கு எதிரான இயக்கம் என்று பிரதமர் மோடியும், திமுக ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்குப் பாதுகாப்பு இருக்காது என்று உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் பேசியிருப்பது மிகுந்த கண்டனத்திற்குரியது. காங்கிரஸ், திமுக, கம்யூனிஸ்ட் போன்ற மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக் கட்சிகள் நீண்டகாலமாகப் பெண்களின் மேம்பாட்டிற்காக, உரிமைகளுக்காக கடுமையாகப் போராடியிருக்கிறது.

விடுதலைப் போராட்டக் காலத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னணித் தலைவர்களாக அன்னிபெசன்ட் அம்மையார், சரோஜினி நாயுடு, சுசேதா கிருபளானி, அருணா ஆசப் அலி, துர்காபாய் தேஷ்முக், சாவித்ரி புலே, இந்திரா காந்தி ஆகியோர் தீவிரப் பங்காற்றியதை எவரும் மறுக்க முடியாது.

இந்தியாவின் பிரதமராக உலகம் போற்றும் வகையில் 15 ஆண்டுகாலம் பதவி வகித்து பெருமை சேர்த்தவர் இந்திரா காந்தி. அதேபோல, 20 ஆண்டு காலம் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்று 2004 மக்களவைத் தேர்தலில் வகுப்புவாத பாஜகவைத் தோற்கடித்து, மதச்சார்பற்ற ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியை 10 ஆண்டு காலம் பாதுகாத்தவர் சோனியா காந்தி.

இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவராக காங்கிரஸ், திமுக கூட்டணி சார்பில் 2007இல் பிரதீபா பாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்டதை நினைவுகூர விரும்புகிறேன். இந்திய வாக்காளர்களில் 49 சதவிகிதமாக இருக்கிற பெண்களுக்கு உரிய பொறுப்புகள் மக்களவையிலும், சட்டப்பேரவையிலும் வழங்கப்படாமல் இருக்கிற அநீதியைப் போக்குவதற்காக ராஜீவ் காந்தி, சோனியா காந்தி ஆகியோர் எடுத்த முயற்சிகளை இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.

நாடாளுமன்ற, சட்டப்பேரவைக்கு அடுத்து மக்கள் பங்கேற்கிற ஜனநாயகத்தை உருவாக்குகிற வகையில் பஞ்சாயத்து ராஜ், நகர்பாலிகா சட்டத்தை நிறைவேற்றுவதற்குக் காரணமாக இருந்தவர் ராஜீவ் காந்தி. 1993இல் நகர்பாலிகா, பஞ்சாயத்துராஜ் சட்டம் கொண்டு வந்து அனைத்துப் பொறுப்புகளிலும் பெண்களுக்கு 33 சதவிகிதம் ஒதுக்கப்பட்டு, அதன் காரணமாக, இன்றைக்கு பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளில் 13 லட்சத்து 45 ஆயிரம் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் பிரதிநிதிகள் பொறுப்பேற்று மிகச் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறார்கள்.

பெண்கள் பங்கேற்கிற ஜனநாயகம் உள்ளாட்சி அமைப்புகளில் செழித்தோங்கி, சிறப்பாக நடைமுறையில் இருந்து வருவதற்குக் காரணம் காங்கிரஸ் கட்சிதான். மக்களவையிலும், சட்டப்பேரவையிலும் 33 சதவிகிதம் பெண்களுக்கு ஒதுக்க வேண்டுமென்ற மசோதாவை நிறைவேற்றுகிற வகையில், 108-வது அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தை 2010 மார்ச் 9ஆம் தேதி சோனியா காந்தியின் தீவிர முயற்சியால் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது.

ஆனால், பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்பு இல்லாத காரணத்தால் மக்களவையில் நிறைவேற்றப்படாமல் கடந்த 11 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. மக்களவையிலும், சட்டப்பேரவையிலும் பெண்களுக்கு 33 சதவிகித இட ஒதுக்கீடு நிறைவேற்றப்பட்டிருந்தால் பெண்களுக்கான மேம்பாடு உயர்ந்து சம உரிமை, சமவாய்ப்பு பெற்றிருப்பார்கள். ஆனால், அந்த மசோதாவை மக்களவையில் நிறைவேற்ற பாஜக முயற்சி செய்யவில்லை.

2014 மக்களவைத் தேர்தலில் 62 பெண்களும், 2019 மக்களவைத் தேர்தலில் 78 பெண்களும், அதாவது, 14.31 சதவிகிதம்தான் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். இத்தகைய குறைவான பிரதிநிதித்துவம் மேலும் உயர்ந்து 33 சதவிகிதமாக சோனியா காந்தியின் முயற்சி வெற்றி பெற்றிருந்தால் பெண்களுக்குக் கூடுதல் வாய்ப்பு கிடைத்திருக்கும். அந்த வாய்ப்பை பாஜக முடக்கியது என்பதைக் குற்றச்சாட்டாகக் கூற விரும்புகிறேன்.

விடுதலைப் போராட்டக் காலத்திலிருந்து மகாத்மா காந்தி தலைமையில், பெண்களுக்கு உரிய முக்கியத்துவம் வழங்கிய பெருமை இந்திய தேசிய காங்கிரஸுக்கு உண்டு. ஆனால், இன்றைய பாஜகவின் தாய் ஸ்தாபனமாக இருக்கிற ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் இதுவரை ஒரு பெண் உறுப்பினராகவோ, தலைமைப் பொறுப்பிற்கோ வந்ததில்லை. ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் தலைவர் கோல்வால்கர் சித்தாந்தமே பெண்களுக்கு எதிரானது.

இந்த இயக்கம் எப்பொழுதுமே பெண்கள் உரிமையை ஏற்றுக் கொண்டதில்லை. ஆனால், காங்கிரஸ் இயக்கத்தில் இன்றைக்கும் பல பெண்கள் தலைமைப் பொறுப்புகளுக்கு வருவதைப் பார்க்க முடிகிறது. எனவே, ஆதாரமற்ற அவதூறு கருத்துகளைக் கூறி, திமுக, காங்கிரஸ் பெண்களுக்கு எதிரான இயக்கம் என்று உண்மைக்குப் புறம்பான கருத்துகளை பெரியார், காமராஜர் பிறந்த மண்ணில், பிரதமர் மோடி உள்ளிட்ட எவர் கூறினாலும், அதைத் தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்கத் தயாராக இல்லாத நிலையில், தேர்தல் பிரச்சாரத்தை திசை திருப்பி அரசியல் ஆதாயம் தேடலாம் என்ற கனவு நிச்சயம் நிறைவேறாது. தமிழக வாக்காளர்கள் பாஜக, அதிமுக கூட்டணியைத் தோற்கடித்து மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு அமோக வெற்றி வழங்குவது உறுதியாகிவிட்டது”.

இவ்வாறு கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x