Published : 01 Apr 2021 03:47 PM
Last Updated : 01 Apr 2021 03:47 PM

ஆடுகளுக்குக் கம்பளி தரும் நரி: உச்சி வெயிலில் சீமான் சொன்ன குட்டிக் கதை

சென்னை

ஆடுகளுக்குக் கம்பளி தரும் நரி குறித்து வெயில் நேரத்தில் சீமான் வில்லிவாக்கம் தொகுதியில் குட்டிக் கதை சொன்னது அங்கிருந்த மக்களிடம் சிரிப்பலையை ஏற்படுத்தியது.

2021 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக, திமுக உள்ளிட்ட பிரதான கட்சிகள் கூட்டணி அமைத்துக் களம் காணும் சூழலில், சீமானின் நாம் தமிழர் கட்சி கடந்த தேர்தல்களைப் போல இந்தத் தேர்தலிலும் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுகிறது. சீமான், திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.

வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் வேட்பாளர் இரா.ஸ்ரீதரை ஆதரித்து, வில்லிவாக்கம் பேருந்து நிலையம் அருகே சீமான் இன்று பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது:

''ஒரு ஊரில் ஒரு நரி இருந்ததாம். அந்த நரி செம்மறி ஆடுகளிடம் பேசியதாம். என்னைத் தலைவராக்கி விடுங்கள். உங்கள் எல்லோருக்கும் குளிர்காலம் வரும்போது கம்பளி தருகிறேன் என்றதாம். அப்போது ஆடுகள் அனைத்தும் மண்டையை ஆட்டிக்கொண்டே நரி பின்னால் சென்றன.

அதுபோலத்தான் என்னைத் தலைவராக்கி விடுங்கள், உங்களுக்கு ரூ.1000 தருகிறேன், என்னை முதல்வராக்கி விடுங்கள் ரூ1500 தருகிறேன், வாஷிங் மெஷின் கொடுக்கிறேன் என்கிறார்கள். மக்களும் செவிசாய்க்கிறார்கள்.

கம்பளி செய்ய ஆட்டின் முடியைத்தான் நரி எடுக்கும் என்று தெரியாமல் ஆடுகளும், மக்களின் காசைத் திருடித்தான் இலவசங்களைத் தர முடியும் என்று தெரியாமல் மக்களும் இருக்கிறார்கள்.

பாட்டில்தான் தமிழகம் வெற்றி நடை போடுகிறது; நாட்டில் போடவில்லை. ஸ்டாலின்தான் வர்றாரு; கொள்ளையடிக்கப் போறாரு என்று சிறுமிகள் பாடுகிறார்கள்.

இருக்கும் வரை பாரதியாரைப் பைத்தியக்காரன் என்றார்கள். இறந்ததும் மகா கவி ஆகிவிட்டார். இன்று கத்திக் கொண்டிருக்கிறேன். என்னுடைய அருமை புரியவில்லை. ஒருநாள் நீங்கள் தேடும்போது, நான் இருப்பேனா என்று தெரியவில்லை.

நான் ஆட்சிக்கு வந்தால் கடன் இருக்கிறது; தமிழ்நாடு அரசு திவாலாகிவிட்டது என்று மஞ்சள் நோட்டீஸ் கொடுப்பேன். தனி மனிதருக்குச் சலுகை காட்டும் அரசு, வங்கிகள், 8 கோடி தமிழ் மக்களுக்குச் சலுகை அளிக்காதா?

இந்த நாட்டைக் காப்பாற்ற வேண்டும் என்று நினைத்தால் உங்களுக்கு ஒன்றே ஒன்றுதான் இருக்கிறது. அது விவசாயி சின்னம். நாடும் நாட்டு மக்களும் நாசமாய்ப் போகட்டும் என நினைத்தால் உதயசூரியனுக்கும் இரட்டை இலைக்கும் வாக்களியுங்கள். திமுக, அதிமுகவைப் புறக்கணிக்காவிட்டால் ஊழலை அகற்ற முடியாது''.

இவ்வாறு சீமான் பேசினார்.

ஆடுகளுக்குக் கம்பளி தரும் நரி குறித்து வெயில் நேரத்தில் சீமான் வில்லிவாக்கம் தொகுதியில் குட்டிக் கதை சொன்னது அங்கிருந்த மக்களிடம் சிரிப்பலையை ஏற்படுத்தியது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x