Published : 01 Apr 2021 03:23 PM
Last Updated : 01 Apr 2021 03:23 PM

செல்போன் மூலம் ஒரு லட்சம் மனுக்கள்; ஸ்டாலின் நாடகத்துக்கு முற்றுப்புள்ளி: முதல்வர் பழனிசாமி பேச்சு

குன்னூர்

செல்போன் மூலம் ஒரு லட்சம் மனுக்கள் பெற்று ஸ்டாலின் நாடகத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தோம் என முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.

தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி குன்னூர் அதிமுக வேட்பாளர் கப்பச்சி டி.வினோத், உதகை தொகுதி பாஜக வேட்பாளர் மு.போஜராஜன் ஆகியோரை ஆதரித்து குன்னூரில் பேசியதாவது:

"அதிமுக அரசு ஏழை மாணவர்களுக்கு ரூ.7300 கோடி மதிப்பில் மடிக்கணினி கொடுத்துள்ளது. உயர் கல்வியில் தமிழகம் முதல் மாநிலமாக உள்ளது. 49% பேர் உயர்கல்வி படிக்கின்றனர்.

2006 மற்றும் 2007-ம் ஆண்டு திமுகவின் இருண்ட ஆட்சி இருந்தது. ஜெயலலிதா ஆட்சி வந்தபோது தடையில்லா மின்சாரம் வழங்கப்பட்டது. இப்போது மின்மிகை மாநிலமாக உள்ளது. புதுப்புது தொழிற்சாலைகள் தமிழகம் வருகின்றன. அதிமுக அரசு 304 தொழிற்சாலைகளிடம் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டுள்ளது.

திமுக கட்சி குடும்ப உறுப்பினர்களுக்கு மட்டுமே பதவி வழங்கும். அதிமுகவில் சாதாரணத் தொண்டன் கூட முதல்வர் ஆகலாம். ஸ்டாலின் 70 வயது வரை இளைஞரணித் தலைவராக இருந்தார். திமுக குடும்பம் மக்களைக் கொள்ளையடிக்கும் கும்பல். ஸ்டாலின் பொய் பேசி மக்களை ஏமாற்றி முதல்வராக கனவு காண்கிறார். பெட்டியில் போடும் பெட்டிசனுக்குத் தீர்வு காண்பதாக கதை விடுகிறார். கொஞ்ச நேரம் திமுகவினரிடம் பேசினால் ஆளையே மாற்றி விடுவார்கள். 9 லட்சம் மனுக்களைப் பெற்று 5 லட்சத்துக்குத் தீர்வு கண்டுள்ளோம். செல்போன் மூலம் ஒரு லட்சம் மனுக்கள் பெற்று ஸ்டாலினின் நாடகத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தோம்.

இந்த ஊர் எம்.பி. எப்படிப் பேசுவார் என்று உங்களுக்குத் தெரியும். அடுத்தவரைப் புண்படுத்தி மகிழ்ச்சி காண்பது அவர்களது பழக்கம். திமுக வந்தால் பெண்களுக்குப் பாதுகாப்பு இருக்காது. இஸ்லாமிய, கிறிஸ்தவர்களுக்குப் பல நன்மைகள் செய்துள்ளோம். அரசு செலவில் நிலம் வாங்கி அனைத்து ஏழைகளுக்கும் கான்கிரீட் வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும்''.

இவ்வாறு முதல்வர் பழனிசாமி பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x