Published : 01 Apr 2021 02:28 PM
Last Updated : 01 Apr 2021 02:28 PM
நான் உங்களில் ஒருவன், எப்போது வேண்டுமானாலும் என்னை சந்திக்கலாம், ஸ்டாலின் வீட்டின் ட்டை கூட தொட முடியாது என, கூடலூரில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி பேசினார்.
நீலகிரி மாவட்டம் கூடலூர் சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் பொன்.ஜெயசீலனை ஆதரித்து முதல்வர் பழனிசாமி இன்று (ஏப். 1) கூடலூரில் பிரச்சாரம் செய்தார்.
அப்போது அவர் பேசியதாவது:
"அதிமுக வேட்பாளரை ஆதரித்து நடக்கும் கூட்டம் வெற்றி கூட்டமாக காட்சியளிக்கிறது. மக்கள் ஆதரவு அமோகமாக உள்ளது. இம்முறை கூடலூரில் அதிமுக கண்டிப்பாக வெற்றி பெறும். அதிமுக ஆட்சி அமைந்தவுடன் கூடலூர் மக்களின் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும்.
ஜெயலலிதாவுக்கு பிடித்தமான மாவட்டம் நீலகிரி. இதை தனது சொந்த மாவட்டமாக கருதியதால், இது பெருமையான மாவட்டமாகும். ஜெயலலிதாவும் இந்த மாவட்டத்துக்கு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியுள்ளார்.
நீலகிரிக்கு மருத்துவக் கல்லூரி வேண்டும் என்ற 45 ஆண்டு கோரிக்கை, ரூ.447 கோடி செலவில் நிறைவேற்றப்பட்டு வருகிறது. இதனால், மக்கள் மேல் சிகிச்சைக்காக வெளிமாவட்டங்களுக்கு செல்ல வேண்டியதில்லை. சில பிரச்சினைகளால் இப்பணிகள் தாமதமானது. விரைவில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை நானே வந்து திறந்து வைப்பேன்.
தாயகம் திரும்பிய தமிழர்களின் கோரிக்கை நிறைவேற்றப்பட்டு வருகிறது. இதில், 800 பசுமை வீடுகள் கட்டி தரப்பட்டுள்ளன. வீடில்லாத, நிலமில்லாத தாயகம் திரும்பிய மக்கள் அனைவருக்கும் அரசே நிலம் வாங்கி, கான்கிரீட் வீடுகள் கட்டி தரப்படும்.
1,519 பழங்குடியினருக்கு 468 ஹெக்டேர் பரப்பளவில் விவசாய நிலம் வழங்கப்பட்டுள்ளது. கூடலூரில் மட்டும் 8 மினி கிளினிக்கள் திறக்கப்ப்டடுள்ளன.
37 ஆயிரத்து 500 சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு ரூ.162 கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. நெடுஞ்சாலை துறை மூலம் ரூ.600 கோடி செலவில் 705 கி.மீ. சாலைகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.
ரூ.11 கோடி செலவில் பள்ளி கட்டிடங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன. உப்பட்டி, கூடலூர், தேவர்சோலை, நடுவட்டம் பகுதிகளில் பேருந்து நிலையங்கள் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளன.
நெலாக்கோட்டையில் ரூ.1 கோடியில் அரசு மருத்தவமனையும், தெப்பக்காட்டில் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையமும் அமைக்கப்பட்டுள்ளன.
சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.8 கோடி கடனுதவி வழங்கப்பட்டுளளது. சுற்றுலா மாவட்டமான நீலகிரியில் கூடலூரை மேம்படுத்த இம்முறை அதிமுகவுக்கு வாய்ப்பளிக்க வேண்டும்.
நீலகிரி மாவட்டத்தில், முதன்மை தொகுதியாக கூடலூரை மாற்றினால் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும்.
பிரிவு 17 நிலப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கான கோப்பும் தயாராக உள்ளது. அரசு பரிசீலித்து நடவடிக்கை எடுக்கும்.
அதே போல, தனியார் காப்பு காடுகள் சட்டத்தில் தளர்வு அளிக்கப்படும். டான்டீ தொழிலாளர்களுக்கு பணி ஓய்வுக்குப் பின்னர் சொந்த குடியிருப்பு கட்டி தரப்படும்.
தமிழகத்தல் உள்ள ஏழைகளுக்கு வீடு கட்டி தருவதே அரசின் முதன்மை கடமை. பந்தலூரில் அரசு கல்லூரி அமைக்கப்படும். வன விலங்கு பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில் அகழி, சூரிய மின் வேலி அமைக்கப்படும்.
மின் பிரச்சினையை தீர்க்க 110 கே.வி. துணை மின் நிலையம் அமைக்கப்படும் . கூடலூரில் வாசனை திரவிய தொழிற்சாலை அமைக்கப்படும்.
சுற்றுலா வேலைவாய்ப்புகள் அதிகரிக்கப்படும். ஊசிமலை சுற்றுலா தலம் மேம்படுத்தப்படும். மரவக்கண்டியில் படகு இல்லம் அமைக்கப்படும். மக்களின் அடிப்படை தேவைகள் அனைத்து நிறைவேற்றப்படும்
தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சி நடந்து வருகிறது. இதனால், சாதி, மத மோதல்கள் இல்லை. பிரச்சினைகள் வந்தால் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படுகிறது.
திமுக ஆட்சியில் கடுமையான மின் வெட்டு, அதனால் வேளாண் உற்பத்தி பாதிக்கப்பட்டது. ஆனால், தற்போது தமிழகம் மின் மிகை மாநிலமாக மாறியுள்ளது
கல்வி தரம் உயர்ந்துள்ளது. திமுக இதை எல்லாம் செய்யவில்லை. சிறந்த நிர்வாகம், ஏராளமான புதிய திட்டங்களால் தமிழகம் வெற்றி நடை போடுகிறது. இதனால் நாட்டிலேயே தமிழகம் முன் மாதிரி மாநிலமாக திகழ்கிறது.
ஹஜ் யாத்திரைக்கு மானியம் ரூ.10 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. ஹஜ் யாத்திரைகளுக்கு தங்கி செல்ல சென்னையில் ரூ.15 கோடி செலவில் ஹஜ் இல்லம் கட்டப்பட்டுள்ளது. நாகூர் தர்காவுக்கு பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. நோன்பு கஞ்சிக்கு இலவசமாக அரிசி வழங்கப்படுகிறது. உலமாக்களுக்கு ஊதிய உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. காயிதே மில்லத் பெயரில் இஸ்லாமிய பல்கலைக்கழகம் உருவாக்கப்படும். குடியரசு தலைவராக அப்துல் கலாமுக்கு அதிமுக வாக்களித்தது. திமுக எதிர்த்து வாக்களித்தது.
நேரத்துக்கு தகுந்தாற்போல் மாற்றிக்கொள்ளும் கட்சி திமுக. உலமாக்களுக்கு அரசு நிலம் வாங்கி வீடு கட்டி தரப்படும். ஈழுவ தீயர் மக்களுக்கு சாதி சான்றிதழ் வழங்கி 40 ஆண்டு கனவை அதிமுக அரசு நிறைவேற்றியுள்ளது.
நான் உங்களில் ஒருவன், எப்போது வேண்டுமானால் என்னை சந்திக்கலாம். ஸ்டலின் வீட்டின் கேட்டை கூட தொட முடியாது".
இவ்வாறு அவர் பேசினார்.
பிரச்சாரத்தின் போது, அமைச்சர் எஸ்.பி,வேலுமணி, வேட்பாளர் பொன்.ஜெயசீலன் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டார். பிரச்சாரத்துக்கு காலை கோவையிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் கூடலூர் வந்த முதல்வர், பின்னர் கூடலூரிலிருந்து குன்னூருக்கு ஹெலிகாப்டரில் சென்று, அங்கு வாகனத்தில் வேட்பாளர்கள் கப்பச்சி டி.வினோத் மற்றும் மு.போஜராஜனுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT