Published : 01 Apr 2021 01:54 PM
Last Updated : 01 Apr 2021 01:54 PM
சோழிங்கநல்லூர் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் நேரத்தை மிச்சப்படுத்தும் வகையில் பிரச்சாரத்தின்போது உணவருந்தினர்.
சோழிங்கநல்லூர் தொகுதியில் திமுக சார்பில் 'சிட்டிங்' எம்எல்ஏ அரவிந்த் ரமேஷ், அதிமுக சார்பில் முன்னாள் எம்எல்ஏ கந்தன், தேமுதிக சார்பில் முருகன், மக்கள் நீதி மய்யம் சார்பாக ராஜீவ்குமார், நாம் தமிழர் சார்பில் ச.மைக்கேல் வின்சென்ட் சேவியர் உள்ளிட்ட 26 பேர் போட்டியிடுகின்றனர்.
மக்கள் நீதி மய்யம் சார்பாகப் போட்டியிடும் வேட்பாளர் ராஜீவ்குமார் பாலவாக்கம், கொட்டிவாக்கம் பகுதியில் கொளுத்தும் வெயிலில் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டார். ஒவ்வொரு வீட்டுக்கும் தூய குடிநீர் வழங்கப்படும், அனைத்துத் தெருக்களுக்கும் வடிகால் மற்றும் கழிவுநீர் அமைப்பு செய்யப்படும், ஏரிகள், அனைத்து நீர்நிலைகளும் சீரமைத்துப் பாதுகாக்கப்படும், சுங்கச்சாவடிகள் அகற்றப்படும், சோழிங்கநல்லூர் உள்ளிட்ட அனைத்து முக்கியச் சந்திப்புகளிலும் மேம்பாலம் கட்டப்படும் உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களை விநியோகம் செய்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
இதேபோல் திமுக வேட்பாளர் அரவிந்த் ரமேஷ், வேங்கைவாசல், சந்தோஷபுரம் உள்ளிட்ட பகுதிகளில் வாக்குச் சேகரித்தார். அப்போது, வேங்கைவாசலில் இறைச்சிக் கடையில் கோழி இறைச்சியை வெட்டி விற்பனை செய்து பிரச்சாரம் மேற்கொண்டார். அதர்மத்திற்கும், தர்மத்திற்கும், நல்லவனுக்கும், கெட்டவனுக்கும் நடக்கின்ற தேர்தல் என திமுக வேட்பாளர் அரவிந்த் ரமேஷ் மக்களிடையே பேசி வாக்குச் சேகரித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், திமுக ஆட்சிக்கு வந்தவுடன் கருணாநிதி பிறந்த நாள் அன்று அனைத்துக் குடும்பங்களுக்கும் ரூ. 4,000 கரோனா நிவாரணம் வழங்கப்படும் என்றும், வேங்கைவாசல் ஊராட்சியை மாநகராட்சிக்கு இணையாகத் தரம் உயர்த்தப்படும் என்றும் கூறி வாக்குச் சேகரித்தார்.
இதேபோல் தேமுதிக வேட்பாளர் முருகன், தொகுதியில் போக்குவரத்து நெரிசல் போக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை வாக்குறுதிகளாகத் தெரிவித்து தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டார்.
பிரச்சாரம் முடிய குறைந்த நாட்கள் உள்ளதாலும், வெயிலின் தாக்கம் அதிகம் என்பதாலும் வேட்பாளர்கள் அதிகாலையிலேயே பிரச்சாரம் மேற்கொள்கின்றனர். இந்தத் தீவிரப் பிரச்சாரத்தில் வேட்பாளர்கள் உணவு சாப்பிடக்கூட நேரம் இருப்பதில்லை. மேலும், அந்த நேரத்தை வீணடிக்கக் கூடாது என்பதற்காக பிரச்சாரம் செய்துகொண்டே தேமுதிக மற்றும் திமுக வேட்பாளர்கள் உணவு உண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT