Published : 01 Apr 2021 01:40 PM
Last Updated : 01 Apr 2021 01:40 PM

பிரச்சாரத்தில் பிரதமரின் பேச்சு அவரது பதவிக்குப் பெருமை சேர்ப்பதாக இல்லை: கே.எஸ்.அழகிரி விமர்சனம்

சென்னை

தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட பிரதமர் மோடி பேசியவை ஏற்றுக்கொள்ளத்தக்கவை அல்ல. இந்தியாவின் பிரதமராக இருப்பவருக்குச் சில சம்பிரதாய மரபுகள் உள்ளன. அதனை முற்றிலும் புறக்கணிக்கிற வகையில் அவரது தமிழக தேர்தல் சுற்றுப்பயணப் பேச்சு அமைந்தது. இது தேர்தலில் தோல்வி பயம் ஏற்பட்டதையே காட்டுகிறது என கே.எஸ்.அழகிரி விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி இன்று வெளியிட்ட அறிக்கை:

“தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட பிரதமர் மோடி, தமிழக வளர்ச்சிக்கான பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து விரிவாகப் பேசுவார் என்று அனைவரும் எதிர்பார்த்தார்கள். ஆனால், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பிரதமர் தமது தகுதிக்குக் குறைவான பல்வேறு கருத்துகளைக் கூறியது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

குறிப்பாக, மக்களவை திமுக உறுப்பினர் ஆ.ராசா கூறிய கருத்துக்குக் கண்டனத்தைத் தெரிவிக்கிற வகையில் பிரதமர் பேசியது அவரது பதவிக்குப் பெருமை சேர்ப்பதாக இல்லை. ஏற்கெனவே, ஆ.ராசா, தான் கூறிய கருத்துக்கு மனப்பூர்வமான மன்னிப்பை வெளிப்படுத்தியுள்ளார். அதேபோல, திமுக தலைவர் ஸ்டாலினும் அந்தக் கருத்துக்குக் கண்டனத்தைப் பதிவு செய்திருக்கிறார்.

இந்நிலையில் பிரதமர் மோடி, ஆ.ராசா பற்றிக் குறிப்பிட்டுப் பேசியதோடு நில்லாமல், திமுக பேச்சாளர் திண்டுக்கல் லியோனி குறித்தும் பேசியது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இந்தியாவின் பிரதமராக இருப்பவருக்குச் சில சம்பிரதாய மரபுகள் உள்ளன. அதனை முற்றிலும் புறக்கணிக்கிற வகையில் அவரது தமிழக தேர்தல் சுற்றுப் பயணப் பேச்சு அமைந்தது பாஜக, அதிமுக கூட்டணிக்கு தேர்தலில் தோல்வி பயம் ஏற்பட்டதையே உறுதி செய்கிறது”.

இவ்வாறு கே.எஸ்.அழகிரி விமர்சித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x