Published : 01 Apr 2021 01:36 PM
Last Updated : 01 Apr 2021 01:36 PM
நாராயணசாமிக்குத் தேர்தலை நேரடியாகச் சந்திப்பது பிடிக்காது. பின்வழியாகவே வருபவர் அவர் என்று என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி விமர்சித்துள்ளர்.
புதுச்சேரியில் கிராமப் பகுதிகளில் இன்று என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி பிரச்சாரம் செய்தார்.
பொதுமக்கள் மத்தியில் ரங்கசாமி பேசியதாவது:
''புதுச்சேரியில் 10 ஆயிரம் அரசுப் பணியிடங்கள் காலியாக உள்ளன. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் உடனே அவை நிரப்பப்படும். அதற்கான மனது நமக்கு உள்ளது. எந்தவிதப் பாகுபாடுமின்றி, தகுதி அடிப்படையில் அந்த வேலை வீடு தேடி வரும்.
புதிய தொழிற்கொள்கை கொண்டுவந்து தொழில் தொடங்குவதற்கான வசதியை ஏற்படுத்தலாம். இதன் மூலம் மேலும் பல இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கிக் கொடுக்க முடியும். சுற்றுலாவை மேம்படுத்தி வேலைவாய்ப்பை உருவாக்கலாம். கடந்த ஆட்சியில் எல்லாப் பொதுத்துறை நிறுவனங்களையும் முடக்கி விட்டார்கள். பாப்ஸ்கோ, பாசிக், ரேஷன் கடை ஊழியர்களுக்கு சம்பளம் போடவில்லை. ரேஷன் கடையே இல்லாத நிலையை உருவாக்கி விட்டார்கள்.
கூட்டுறவு சர்க்கரை ஆலை, பஞ்சாலையை மூடிவிட்டனர். இப்படி இருந்தால் எப்படி வேலை கிடைக்கும்? கடந்த ஆட்சியில் எதுவும் செய்யவில்லை. மறுபடியும் வந்தால் என்ன செய்துவிடப் போகிறார்கள்? நாராயணசாமிக்கு ஆளும் திறமையில்லை. எதற்கெடுத்தாலும் ஆளுநர், மத்திய அரசு, எதிர்க்கட்சியினர் தடையாக இருக்கிறார்கள் என்று மட்டும் கூறுவார்கள். நான் 12 ஆண்டுகள் முதல்வராக இருந்தேன். ஆளுநர் தடையாக இருக்கிறார் என்று கூறியிருப்பேனா? கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் செய்து கொடுத்தேன்.
ஆட்சிக்கு வந்தால் முன்னுதாரணத் திட்டங்களைக் கொண்டுவந்து செயல்படுத்த வேண்டும். அதுதான் ஆட்சியாளர்களின் கடமை. எதுவும் செய்ய முடியவில்லை என்று மற்றவர்கள் மீது பழி போடுவது அல்ல. மற்றவர்கள் மீது பழியைப் போட்டே நாராயணசாமி 5 ஆண்டுகள் ஆட்சியை நடத்தியுள்ளார். இதனால் காங்கிரஸ் கட்சியில் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் யாரும் இல்லை. முன்னாள் முதல்வர் நாராயணசாமி மட்டும் தனியாக இருக்கிறார். அவர் கூடத் தேர்தலில் நிற்கவில்லை. அவருக்குக் கட்சி தலைமை சீட் கொடுக்கவில்லை. அத்துடன் நாராயணசாமிக்குத் தேர்தலை நேரடியாகச் சந்திப்பது பிடிக்காது. பின்வழியாகவே வருபவர் அவர்.
யூனியன் பிரதேசமான புதுச்சேரிக்கு எப்போதும் அதிகாரம் கிடையாது. இதனை நீதிமன்றம் வரை சென்று வெட்ட வெளிச்சமாக்கியது நாராயணசாமிதான். கடந்த ஆட்சியில் ஒன்றும் செய்யவில்லை. மறுபடியும் வந்தால் செய்வார்களாம். அப்போது மத்திய அரசு ஒத்துழைப்பு, ஆளுநர் அனுமதி தேவைப்படும். ஆனால், இவர்கள் எப்படிச் செய்வார்கள். எதுவும் செய்ய மாட்டார்கள். நாங்கள் மீண்டும் ஆட்சி அமைப்போம். மறுபடியும் முதல்வராக வந்து புதுச்சேரி வளர்ச்சியில் மிகுந்த அக்கறை எடுத்துக் கொள்வேன்".
இவ்வாறு ரங்கசாமி பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT