Published : 01 Apr 2021 12:56 PM
Last Updated : 01 Apr 2021 12:56 PM
'இந்தியன் 2' படத்தை முழுமையாக முடித்துக் கொடுக்காமல் இயக்குநர் ஷங்கர் பிற படங்களை இயக்கக் கூடாது எனத் தொடரப்பட்ட வழக்கில், இயக்குநர் ஷங்கர் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் ‘இந்தியன் 2’ திரைப்படத்தை லைகா நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் ஷங்கர் இயக்கி வருகிறார். இதன் படப்பிடிப்பு ஆரம்பித்ததிலிருந்தே பல தடைகளைச் சந்தித்து வருகிறது. கரோனா பரவல், படப்பிடிப்பில் விபத்து, உயிரிழப்பு, அதனால் போலீஸ் வழக்கு எனப் பல தடைகளைத் தாண்டி படம் நகர்கிறது.
இந்நிலையில் லைகா நிறுவனம் இயக்குநர் ஷங்கருக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கைத் தொடர்ந்துள்ளது. அந்த வழக்கில், தங்கள் நிறுவனத்தின் 'இந்தியன் 2' படத்தை முடித்துக் கொடுக்காமல் வேறு நிறுவனங்களின் படங்களை இயக்குவதற்கு இயக்குநர் ஷங்கருக்குத் தடை விதிக்க வேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
அவர்கள் தாக்கல் செய்த மனுவில், “படத்திற்கு 150 கோடி ரூபாய் வரை பட்ஜெட் போடப்பட்டிருந்த நிலையில், அதைத் தாண்டி 236 கோடி ரூபாய் வரை செலவு செய்துள்ளோம். ஆனாலும், 80 சதவீதப் பணிகள் மட்டுமே முடிந்துள்ளன. 'இந்தியன் 2' படத்தின் மீதம் உள்ள பகுதிகளை முடித்துத் தர வேண்டுமென ஷங்கருக்கு உத்தரவிட வேண்டும்.
இயக்குநர் ஷங்கருக்கு 40 கோடி ரூபாய் சம்பளம் பேசிய நிலையில், இதுவரை 14 கோடி ரூபாய் கொடுத்திருக்கிறோம். மீதமுள்ள 26 கோடி ரூபாயை நீதிமன்றத்தில் வைப்புத் தொகையாகச் செலுத்தவும் தயாராக இருக்கிறோம். ஆகவே, எங்கள் படத்தை முடித்துக் கொடுக்க இயக்குநர் ஷங்கருக்கு உத்தரவிட வேண்டும். அதுவரை அவர் வேறு படங்களை இயக்குவதற்குத் தடை விதிக்க வேண்டும்” எனக் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இந்த மனு நீதிபதி பி.டி.ஆஷா முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இயக்குனர் ஷங்கரின் விளக்கத்தைக் கேட்காமல் எந்த இடைக்கால உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என்று கூறிய நீதிபதி, பிற படங்களை இயக்கக் கூடாது என இயக்குநர் ஷங்கருக்கு இடைக்காலத் தடை விதிக்க மறுத்துவிட்டார்.
வழக்கு குறித்து இயக்குநர் ஷங்கர் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி, வழக்கை ஏப்ரல் 15ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT