Published : 01 Apr 2021 12:43 PM
Last Updated : 01 Apr 2021 12:43 PM
தேர்தல் வெற்றிக்காக சித்தானந்தர் கோயிலில் வழிபாடு முடித்து அஸ்வ பூஜை, கோ பூஜை செய்து புதுச்சேரியில் அமித் ஷா சாலையில் பேரணியாகச் சென்று 'ரோட் ஷோ' நடத்தினார். நெரிசலில் சிலாப் உடைந்து வாய்க்காலில் விழுந்ததில், ஐந்து பெண்கள் வரை காயம் அடைந்தனர். கடும் வெயிலால் பேரணியின் பாதியிலேயே அமித் ஷா புறப்பட்டார்.
புதுவை சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக, என்.ஆர்.காங்கிரஸ், அதிமுக கூட்டணி அமைத்துப் போட்டியிடுகிறது. பாஜக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி, தேசிய தலைவர் நட்டா, மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், நிதின் கட்கரி, கிரிராஜ் சிங் ஆகியோர் தேர்தல் பிரச்சாரம் செய்துள்ளனர். காரைக்கால் மாவட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுப் பேசினார்.
இந்நிலையில், இன்று (ஏப். 1) மத்திய அமைச்சர் அமித் ஷா, 'ரோட் ஷோ' நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்காக லாஸ்பேட்டை சுபாஷ் சந்திரபோஸ் சிலையிலிருந்து சிவாஜி சிலை வரை திறந்த வேனில் மக்களைச் சந்தித்து வேட்பாளர்களுக்கு வாக்குச் சேகரித்தபடி செல்வதற்கான திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
சிவாஜி சிலை அருகில் அலங்காரம் செய்யப்பட்ட திறந்த வேன் தயாராக நிறுத்தப்பட்டிருந்தது. காலை 8 மணி முதல் பாஜக தொண்டர்கள் லாஸ்பேட்டை உழவர் சந்தை முன்பு குவியத் தொடங்கினர். புதுவையின் பல்வேறு தொகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கானோர் அங்கு குவிந்தனர்.
காலை 10.30 மணிக்கு சென்னையிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் புதுவை விமான நிலையத்துக்கு அமித் ஷா வந்தார். அங்கிருந்து கார் மூலம் கருவடிக்குப்பம் சித்தானந்தர் கோயிலுக்கு வந்தார். அங்கு சாமி தரிசனம் செய்தார். பின்னர், கார் மூலம் 10.45 மணிக்கு லாஸ்பேட்டை உழவர் சந்தை எதிரே உள்ள சுபாஷ் சந்திரபோஸ் சிலைக்கு வந்தார். அங்கு தேர்தல் வெற்றிக்காக அஸ்வ பூஜை, கோ பூஜை செய்து பின்னர் சுபாஷ் சந்திரபோஸ் சிலைக்கு மாலை அணிவித்தார்.
பின்னர் திரண்டிருந்த மக்கள் கூட்டத்தைப் பார்த்து கை அசைத்தார். பின்னர், அலங்கார வேனில் ஏறி 'ரோட் ஷோ' சென்றார். அமித் ஷா வாகனத்தில் மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால், மேலிடப் பார்வையாளர் நிர்மல்குமார் சுரானா, வேட்பாளர்கள் முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் உடனிருந்தனர்.
அப்போது ஏற்பட்ட நெரிசலின்போது பலரும் சாலையோர வாய்க்கால் சிலாபில் ஏறினர். அதனால் சாலையோர வாய்க்கால் சிலாப் உடைந்தது. ஐந்து பெண்கள் உள்ளிட்டோர் வாய்க்காலில் விழுந்து காயமடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
1 கி.மீ. தொலைவுக்குப் பேரணி
லாஸ்பேட்டை கல்லூரி மெயின்ரோடு முழுவதும் அலங்கார வாகனத்தில் நின்றபடி இருபுறமும் இருந்து மக்களைப் பார்த்துக் கையசைத்தபடி வாக்குச் சேகரித்தும், இரு விரலை 'வி' வடிவில் காட்டிக்கொண்டே வந்தார். அமித் ஷாவைப் பார்க்க வீடுகளின் மாடியில் இருந்த மக்கள் அவர் மீது மலர்களைத் தூவினர். வண்டியில் வைக்கப்பட்டிருந்த பூக்களை எடுத்துப் பொதுமக்கள் மீது அமித் ஷா வீசினார். ஏராளமானோர் பேரணியில் பங்கேற்றனர்.
சுமார் ஒரு கி.மீ. தொலைவு ஊர்வலம் வந்தது. மகாவீர் நகர், பாரதி நகர் வீதிக்கு ஊர்வலம் வந்தபோது வாகனம் நிறுத்தப்பட்டது. அமித் ஷா சிவாஜி சிலை வரை செல்ல ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், அரை கி.மீ. முன்னதாகவே ஊர்வலம் நிறுத்தப்பட்டது.
கடும் வெயில் காரணமாக பேரணியின் பாதியிலேயே இறங்கி காரில் ஏறி அமித் ஷா புறப்பட்டுச் சென்றார். அமித் ஷா பேசுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் எங்கும் பேசவில்லை. அமித் ஷா வருகையையொட்டி லாஸ்பேட்டை மெயின்ரோடு முழுவதும் போலீஸார், துணை ராணுவத்தினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். வீட்டின் மாடியிலும் போலீஸார் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அமித் ஷா வருகையையொட்டி லாஸ்பேட்டை பகுதியில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டிருந்தது. ஈசிஆரில் கடும் நெரிசல் ஏற்பட்டது
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT