Published : 01 Apr 2021 12:29 PM
Last Updated : 01 Apr 2021 12:29 PM
பொதுமக்களையும், போக்குவரத்தையும் தடை செய்யாமல் அரசியல் கட்சியினர் தேர்தல் பிரச்சாரம் செய்ய வேண்டுமென உத்தரவிடக் கோரிய வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் இன்று விசாரணைக்கு எடுக்க உள்ளது.
வழக்கறிஞர் எம்.ஞானசேகர் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். அவர் தொடர்ந்துள்ள வழக்கில், “சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு முதல்வர் பழனிசாமி, அமைச்சர்கள் பொதுக்கூட்டம் மற்றும் கூட்டங்களுக்குச் செல்லும் இடங்களில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு, பொதுமக்கள் நடமாட்டமும் தடுக்கப்படுகிறது.
கரோனா பரவலைத் தடுக்கும் நோக்கில் பள்ளி, கல்லூரிகள், நீதிமன்றம் ஆகியவற்றில் மக்கள் கூடத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், மதுபானக் கடை, திரையரங்கம், மால் ஆகியவற்றில் மக்கள் கூடி வருகின்றனர். அதேபோல பிரச்சாரக் கூட்டங்களிலும் கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிக்காமல் அரசியல் கட்சியினரும், பொதுமக்களும் ஒன்று கூடுகின்றனர்.
பொதுமக்கள் மற்றும் போக்குவரத்தைத் தடுத்து நிறுத்தாமல் பிரச்சாரங்களை மேற்கொள்ள அரசியல் கட்சிகளுக்கு உத்தரவிட வேண்டும்” என மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.
இந்த வழக்கை அவசர வழக்காக எடுத்து விசாரிக்க வேண்டுமென தலைமை நீதிபதி அமர்வில் வழக்கறிஞர் ஞானசேகர் முறையீடு செய்தார். அவரது முறையீட்டை ஏற்ற நீதிமன்றம், இன்று மதியம் விசாரிப்பதாக ஒப்புதல் அளித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT