Published : 01 Apr 2021 12:03 PM
Last Updated : 01 Apr 2021 12:03 PM
தன்பாலின ஈர்ப்புக்கு ஆளான இரு பெண்கள் சேர்ந்து வாழும் முடிவால் பாதுகாப்பு கேட்டு உயர் நீதிமன்றத்தை அணுகிய வழக்கில், சம்பந்தப்பட்ட பெண்களுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் உளவியல் ஆலோசகரை நியமித்து அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரையைச் சேர்ந்த இரு பெண்கள் நட்புடன் பழகத் தொடங்கி, தன்பாலின ஈர்ப்புக்கு ஆட்பட்டதால் பிரிய மனமில்லாமல் சேர்ந்து வாழ விரும்பியுள்ளனர். இருவரின் பெற்றோருக்கும் இந்த முடிவு அதிர்ச்சியைக் கொடுத்ததால் இருவரையும் பிரிக்க முயன்ற நிலையில், அந்த இளம்பெண்கள் மதுரையிலிருந்து கிளம்பி சென்னை வந்துவிட்டனர்.
தொண்டு நிறுவனக் காப்பகத்தில் தங்கி இருவரும் வேலை தேடி வரும் நிலையில், தங்களுக்குப் பாதுகாப்பு கோரி இருவரும் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். கடந்த மாதம் தொடரப்பட்ட இந்த வழக்கில் அனைத்துத் தரப்பிற்கும் இடையே சுமுக உடன்பாடு ஏற்படாததால், இரு பெண்கள், பெற்றோர், காவல்துறை என அனைத்துத் தரப்பையும் நேரில் ஆஜராக உத்தரவிட்டு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் நேற்று விசாரித்தார்.
பின்னர் அவர் பிறப்பித்துள்ள உத்தரவில், தன்பாலின ஈர்ப்பாளர்கள் ஒன்றாகச் சேர்ந்து வாழ்வது தொடர்பான வழக்குகளில் இந்திய அளவிலும், சர்வதேச அளவிலும் நீதிமன்றங்கள் வழங்கியுள்ள தீர்ப்புகளை ஆராய்ந்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில் மனுதாரர்கள் மற்றும் அவர்களது பெற்றோரின் கருத்துகளை விவரமாகத் தீர்ப்பில் சேர்க்க ஏதுவாக, அனைவரிடமும் உளவியல் கருத்துகளைப் பெற வேண்டியது அவசியம் என்பதால், உளவியல் நிபுணர் வித்யா தினகரன் என்பவரை நியமித்து, உளவியல் ரீதியாக அணுகி அதன் அறிக்கையை மூடி முத்திரையிட்ட உறையில் ஏப்ரல் 26ஆம் தேதி தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஏப்ரல் 28ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT