Published : 01 Apr 2021 11:29 AM
Last Updated : 01 Apr 2021 11:29 AM

எம்பிபிஎஸ் முடித்த மாணவர்களின் பயிற்சிக் காலம் கால வரையின்றி நீட்டிப்பு: டிஎம்இ அறிவிப்பால் மருத்துவ மாணவர்கள் அதிர்ச்சி

போராடும் மருத்துவ மாணவர்கள்

சென்னை

ஓராண்டு பயிற்சி முடித்த பயிற்சி மருத்துவர்களுக்குப் பணி நிறைவுச் சான்றிதழ் வழங்கப்படும் நிலையில், கரோனாவைக் காரணம் காட்டி அவர்களின் பயிற்சிக் காலத்தைக் கால வரையின்றி நீட்டித்து அரசு அறிவித்துள்ளது. இதை மாணவர்கள் கண்டித்துப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழ்நாட்டின் மருத்துவக் கல்வி இயக்குநரகம் (DME), 2015ஆம் ஆண்டு MBBS படிப்பில் சேர்ந்து 29.3.2021இல் ஓராண்டு பயிற்சி முடித்த பயிற்சி மருத்துவர்களுக்குப் பணி நிறைவுச் சான்றிதழ் வழங்கப்படும் என்று உறுதியளித்து, ஒரு அறிவிப்பை 26.3.2021 அன்று வெளியிட்டது. ஆனால், திடீரென ஒரு அறிவிப்பை மருத்துவக் கல்வி இயக்குநரகம் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில், “2016ஆம் ஆண்டு எம்பிபிஎஸ் படிப்பில் சேர்ந்த மருத்துவ மாணவர்கள் தற்போது ஏப்ரல் மாதம் 8ஆம் தேதி முதல் இறுதியாண்டுத் தேர்வு எழுத இருக்கிறார்கள். அவர்கள் தேர்வு முடிந்து, தேர்வு முடிவுகள் வெளியாகி பயிற்சி மருத்துவராகச் சேரும் வரை, 29.03.2020 முதல் 28.3.2021 வரை ஓராண்டு பயிற்சி முடித்த பயிற்சி மருத்துவர்களுக்குப் பணி நீட்டிப்பு காலவரையின்றி செய்யப்பட்டுள்ளது” என்று அந்தச் சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

முன்னுக்குப் பின் முரணான நடவடிக்கைகளை மருத்துவக் கல்வி இயக்குநரகம் எடுப்பது சரியல்ல. இது இளம் மருத்துவர்களின் உழைப்பைக் குறைந்த ஊதியத்தில் சுரண்டுவதாகும் எனத் தமிழ்நாடு மருத்துவ மாணவர்கள் சங்கம் கண்டித்தது.

மேலும், இந்த அறிவிப்பு பட்ட மேற்படிப்பு (PG) தேர்வுக்கும், இதர போட்டித் தேர்வுகளுக்கும் இந்த மாணவர்கள் தயாராவதில் பாதிப்பை ஏற்படுத்தும். இம்மாணவர்களின் எதிர்காலத்தை பாதிக்கும் என மாணவர்கள் தரப்பில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x