Published : 01 Apr 2021 10:48 AM
Last Updated : 01 Apr 2021 10:48 AM
கோவையில் தங்கியுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், நடந்து சென்று திமுக கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்காக வாக்குச் சேகரித்தார்.
திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளத்தில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தை முடித்துக் கொண்டு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று (மார்ச் 31) இரவு கோவைக்கு வந்தார். இன்று (ஏப்.1) கோவை மேட்டுப்பாளையத்தில், மேட்டுப்பாளையம், நீலகிரி மாவட்டத்தின் குன்னூர், உதகை, கூடலூர் தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ளும் மு.க.ஸ்டாலின், மதியம் கவுண்டம்பாளையம், கோவை தெற்கு, கோவை வடக்கு, சிங்காநல்லூர் தொகுதி வேட்பாளர்களை ஆதரித்தும் கவுண்டம்பாளையத்தில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
நேற்று இரவு கோவைக்கு வந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தொண்டாமுத்தூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆர்.எஸ்.புரத்துக்குச் சென்றார். அங்கு தொண்டாமுத்தூர் தொகுதி திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாபதிக்கு ஆதரவாகப் பொதுமக்களிடம் வாக்குச் சேகரித்தார். 'ஸ்டாலின் தான் வாராரு, விடியல் தரப் போறாரு' பாடல் ஒலிக்க, டி.பி.சாலையில் நடந்து சென்றபடி மு.க.ஸ்டாலின் பொதுமக்களிடம் வாக்குச் சேகரித்தார். அப்போது, பொதுமக்கள் ஆர்வத்துடன் மு.க.ஸ்டாலினுக்கு வணக்கம் தெரிவித்தனர். அவருடன் புகைப்படம் எடுக்கவும் ஆர்வம் காட்டினர். அங்கு பிரச்சாரத்தை முடித்துக்கொண்டு அவிநாசி சாலையில் உள்ள ஹோட்டலில் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு தங்கினார்.
ரேஸ்கோர்ஸில் நடைப்பயிற்சி
பின்னர், இன்று காலை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தங்கியிருந்த ஹோட்டலில் இருந்து ரேஸ்கோர்ஸுக்கு வந்தார். அங்கு நடைப்பயிற்சி மேற்கொண்ட அவர், கோவை தெற்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மயூரா ஜெயக்குமாருக்கு ஆதரவாக பொதுமக்களிடம் வாக்குச் சேகரித்தார். திமுக வேட்பாளர்கள் கார்த்திக் (சிங்காநல்லூர்), கார்த்திகேய சிவசேனாபதி (தொண்டாமுத்தூர்) ஆகியோர் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
திமுகவில் இணைந்தனர்
கோவையில் நேற்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், அமமுக மாநில சிறுபான்மைப் பிரிவுச் செயலாளர் இஸ்மாயில், தேமுதிக கோவை வடக்கு மாவட்டச் செயலாளர் கே.டி.ஆர் என்ற தியாகராஜன், அமமுக உயர்மட்டக் குழு உறுப்பினர் முருகன், கோவை வடக்கு மாவட்டத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் ஆர்.பழனிசாமி, மாவட்ட மகளிரணிச் செயலாளர் சிவாத்தாள், மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் சக்திவேல், சூலூர் தொகுதி அதிமுக வேட்பாளர் கந்தசாமியின் சகோதரியும், ஊராட்சித் தலைவருமான சிவகாமி வேலுசாமி ஆகியோர் திமுகவில் இணைந்தனர். இந்நிகழ்வின்போது திமுகவின் முக்கிய நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT