Published : 01 Apr 2021 08:52 AM
Last Updated : 01 Apr 2021 08:52 AM

அதிமுக - பாஜக கூட்டணி வெற்றி பெற்றால் தமிழகத்தில் மதுக்கடைகள் முற்றிலுமாக தடை செய்யப்படும்: பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங் திட்டவட்டம்

கெலமங்கலத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி பிரச்சார கூட்டத்தில் மாவட்ட தலைவர் நாகராஜ் வழங்கிய வெற்றி வேலை பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் பெற்றுக்கொண்டார். - படங்கள - ஜோதி ரவிசுகுமார்.

ஓசூர்

அதிமுக பாஜக கூட்டணி ஆட்சி ஏற்பட்டதும் தமிழ்நாட்டில் மதுக்கடைகள் முற்றிலுமாக தடை செய்யப்படும் என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் வாக்குறுதி அளித்தார்.

தேன்கனிக்கோட்டை கெலமங்கலம் அருகே தளி தொகுதி பாஜக வேட்பாளர் நாகேஷ்குமார் மற்றும் ஓசூர் தொகுதி அதிமுக வேட்பாளர் ஜோதி பாலகிருஷ்ணாரெட்டி ஆகியோரை ஆதரித்து தேர்தல் பிரச்சாரக்கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் பாஜக மாவட்ட தலைவர் நாகராஜ் தலைமை தாங்கினார்.

இதில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் கலந்து கொண்டு பேசியதாவது:

தமிழ்நாட்டின் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியும், ஓ.பன்னீர் செல்வமும் தேசிய நீரோட்டத்தில் இணைவதற்காக பாஜகவுடன் கூட்டணி வைத்து மிகப்பெரிய பங்களிப்பை வழங்கி வருகின்றனர். கரோனா வைரஸ் நோயிலிருந்து இந்திய நாட்டு மக்களுக்கு கரோனா தடுப்பூசி வழங்கி பாதுகாத்தது மட்டுமன்றி உலக மக்களுக்கும் கரோனா தடுப்பூசி வழங்கி பிரதமர் மோடி சாதனை படைத்துள்ளார்.

மேலும் வெண்டிலேட்டர் மற்றும் பி.பி.கிட் ஆகியவை தட்டுப்பாடு ஏற்படுவதை தடுக்க இந்திய அளவில் மற்றும் உலகளவில் வழங்கி உலகையே காப்பாற்றிய பெரிய தலைவராக மோடி உயர்ந்துள்ளார். திமுக தலைவர் ஸ்டாலின் தமிழ்நாட்டில் மக்களை பிரித்தாளும் செயலை நிறுத்தவேண்டும். நல்ல தேர்ந்த அரசியல்வாதியாக நடந்து கொள்ள வேண்டும்.

இந்த தேசத்தில் உள்ள ஒவ்வொரு பெண்களையும் தாயாக பார்க்க வேண்டும். திமுக அப்படி பார்க்கவில்லை. தமிழக மக்கள் இந்த தேர்தலில் திமுகவுக்கு தக்க பாடம் புகட்டவேண்டும். தமிழகத்தில் வேலையில்லா திண்டாட்டம் மிகப்பெரிய பிரச்சினையாக உள்ளது.

தமிழகத்தில் அடுத்த 5 ஆண்டுகளில் 50 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும் திட்டத்தை பிரதமர் மோடி உருவாக்கி உள்ளார். சுமார் 1140கோடி மதிப்பில் தமிழ்நாட்டில் ராணுவ தளவாடங்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் நிறுவப்பட்டு அதன் மூலமாக 50லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.

அதிமுக,பாஜகவை தேர்தலில் வெற்றி பெற வைத்தால் புதிய தொழிற்சாலைகள் கொண்டு வரப்பட்டு புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும். பாஜக அரசு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கி வருகிறது.

அதேபோல மீனவர்களுக்கும் ஆண்டுக்கு ரூ.6ஆயிரம் வழங்கப்படும். ஜல்ஜீவன் திட்டம் மூலமாக 2024-ம் ஆண்டுக்குள் நாட்டிலுள்ள அனைவருக்கும் குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டு குடிநீர் வழங்கப்படும்.

பாஜக ஆட்சியில் காங்கிரஸ் ஆட்சியில் நடந்தது போல 2ஜி, 3ஜி என்ற ஊழல் நடக்கவில்லை. இனிமேலும் நடக்கப்போவது இல்லை. காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் இடைத்தரகர்களின் ஆதிக்கம் அதிகமாக இருந்தது. பாஜக ஆட்சியில் இடைத்தரகர்களின் ஆதிக்கம் ஒழிக்கப்பட்டுள்ளது. மதுக்கடைகள் மூலமாக தமிழ்நாட்டு மக்கள் மிகப்பெரிய சீரழிவை சந்தித்து வருகிறார்கள்.

அதிமுக பாஜக கூட்டணி ஆட்சி ஏற்பட்டதும் தமிழ்நாட்டில் மதுக்கடைகள் முற்றிலுமாக தடை செய்யப்படும். பிரதமர் நரேந்திரமோடி ஆட்சியில் தற்போதைய கரோனா பாதிப்பிலும் நாட்டின் பொருளாதாரம் வேகமாக வளர்ச்சியடைய தொடங்கி உள்ளது.

தளி தொகுதியில் பாஜக வேட்பாளர் நாகேஷ்குமாரையும், ஓசூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் ஜோதி பாலகிருஷ்ணாரெட்டி ஆகிய இருவரையும் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x