Published : 01 Apr 2021 03:15 AM
Last Updated : 01 Apr 2021 03:15 AM
சென்னை ராயபுரம் தொகுதிக்கு இதுவரை நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தல்களில் திமுக 7 முறையும், அதிமுக 5 முறையும், காங்கிரஸ் 2 முறையும் வெற்றி பெற்றுள்ளது. அதிக வெற்றிகளின் அடிப்படையில் பார்த்தால் ராயபுரம் தொகுதியில் திமுகவுக்கு செல்வாக்கு இருப்பதுபோல் தெரிகிறது. திமுக தொடங்கப்பட்ட இடம் ராயபுரம். திமுகவின் முதல் தலைமை அலுவலகமும் ராயபுரத்தில்தான் உள்ளது.
ஆனால், 2001-ம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக நடந்த 4 சட்டப்பேரவை தேர்தல்களிலும் அதிமுகவே வெற்றி பெற்றுள்ளது. அதுவும், தற்போதைய மீன்வளத்துறை அமைச்சரான டி.ஜெயக்குமாரே 4 முறையும் களம் கண்டு வெற்றி பெற்றுள்ளார். 1996-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்ட ஜெயக்குமார், திமுக வேட்பாளர் மதிவாணனிடம் தோற்று விட்டார். தற்போது மீண்டும் திமுக வேட்பாளர் மூர்த்தியை எதிர்த்து போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.
ராயபுரம் தொகுதியில் அமமுக சார்பில் ராமஜெயம், மக்கள் நீதி மய்யம் சார்பில் குணசேகரன், நாம் தமிழர் கட்சி சார்பில் கமலி மற்றும் சுயேட்சைகள் 21 பேர் உட்பட மொத்தம் 26 பேர் போட்டியிடுகின்றனர். ஆனால் அதிமுகவுக்கும், திமுகவுக்கும் இடையே மட்டுமே இங்கு நேரடி போட்டி நிலவுகிறது. பிரசார வேகம், மக்களை சந்திப்பது போன்றவற்றில் திமுகவை விடவும் அதிமுகவினரே முன்னிலையில் உள்ளனர். 1996-ல் தமிழகம் முழுவதுமான அதிமுகவிற்கு எதிரான அலையில் ஜெயக்குமார் தோற்றார். அதேப்போல தற்போது மு.க.ஸ்டாலினுக்கு ஆதரவான அலை வீசினால் மட்டுமே திமுக வெற்றி பெறும் என்ற சூழ்நிலை ராயபுரம் தொகுதியில் உள்ளது. ஏனென்றால், ராயபுரம் தொகுதியில் ஒவ்வொரு இடத்தையும் ஜெயக்குமார் அறிந்து வைத்துள்ளார். மக்களுடன் நெருங்கிய தொடர்பிலும் இருக்கிறார். இதனால் ஜெயக்குமார் எளிதாக வெற்றி பெறலாம் என்ற தோற்றம் உருவாகியுள்ளது.
ஜெயக்குமார் பிரசாரத்தில், தான் தொகுதிக்கு செய்து கொடுத்த வசதிகளை கூறி வாக்கு சேகரித்து வருகிறார். ‘எனக்கு ராயபுரத்தில் போட்டியே இல்லை. நான் வெற்றி பெறுவது உறுதி’ என்றும் கூறிவருகிறார். ஜெயக்குமாருக்கு நேரடி போட்டியாக திமுக வேட்பாளர் மூர்த்தியும் பிரசாரம் செய்கிறார். ராயபுரத்தில் விளையாட்டு வீரர்கள் அதிகம். அதுபோன்ற விளையாட்டு வீரர்களை தேர்ந்தெடுத்து உதவி செய்து வருவதால், குறிப்பிட்ட பகுதி இளைஞர்களிடம் மூர்த்திக்கும் அதிக செல்வாக்கு உள்ளது.
சுத்தமான குடிநீர் கிடைக்காதது, தெருக்களில் குப்பைகள் கிடப்பது, ஸ்டான்லி மருத்துவமனையின் மருத்துவக் கழிவுகளை முறையாக அழிக்காதது, கன்டெய்னர் லாரிகளால் போக்குவரத்து நெரிசல் போன்றவை இத்தொகுதியின் முக்கிய பிரச்சினைகளாக உள்ளன. தொகுதியில் உள்ள இதுபோன்ற பிரச்சினைகளை சரிசெய்வேன் என்றுக்கூறி மட்டுமே பிற கட்சியினர் பிரசாரம் செய்து வருகின்றனர். மேலும், அதிமுக-திமுக கட்சிகளை புறக்கணித்தால் தான் புதிய மாற்றத்தை உருவாக்க முடியும் என்ற கோஷமும் பிற கட்சிகளின் பிரசாரத்தில் முக்கிய அம்சமாக உள்ளன.
ஆனால் இந்த கோஷங்கள் அனைத்தும் மக்களிடம் சென்று சேர்ந்ததுபோல தெரியவில்லை. தொகுதியில் அதிமுக-திமுக தீவிர பிரசாரம் செய்யும் நிலையில், பிற கட்சியினர் பெயரளவிற்கு மட்டுமே பிரசாரம் செய்து வருகின்றனர்.
குறிப்பிட்ட ஒரு சிலருக்கு மட்டுமே திமுக-அதிமுக கட்சிகளை தவிர பிற கட்சி வேட்பாளர்களின் பெயரும், சின்னங்களும் தெரிந்துள்ளன. இதனால் திமுக-அதிமுக இடையே மட்டுமே இங்கு நேரடி போட்டி உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT