Published : 01 Apr 2021 03:15 AM
Last Updated : 01 Apr 2021 03:15 AM

அரசியலில் எனது பலம், தந்திரம் இரண்டும் நேர்மைதான்: ம.நீ.ம. தலைவர் கமல்ஹாசன் கருத்து

அரசியலில் எனது பலம் மற்றும் தந்திரம் இரண்டும் நேர்மைதான் என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார்.

இதுகுறித்து கோவையில் நேற்று மாலை செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

எங்கள் கட்சியில் உள்ளவர்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்தால் செய்ய முடியும் என்ற நம்பிக்கையில் உருவானதே மக்கள் நீதி மய்யம். அது இன்னும் கட்டுமானத்தில்தான் உள்ளது. நான் ஒரு அரசியல்வாதியின் மகன். 1947-க்கு முந்தைய காலகட்டஅரசியல்வாதி எனது தந்தை. இதுதான் அரசியல் என்றிருந்த காலத்தில்,அதுவாகவே கற்பிக்கப்பட்டு வளர்ந்தவன் நான். அப்போது இருந்ததுதான் அரசியல். தற்போது இருப்பதெல்லாம் எனக்கு தெரிந்து நரித்தந்திரம். அக்காலத்து அரசியலை நாம் மீட்டெடுக்க வேண்டும். இதனால் அரசியல் எனது கடமையாக மாறியுள்ளது. அரசியலில் எனது தந்திரம், பலம் இரண்டும் நேர்மை தான்.

துக்கடா என்ற வார்த்தை தவறானதில்லை. துக்கடா, துக்கடாவாக இருந்த ராஜ்ஜியங்கள் சேர்ந்ததுதான் இந்தியா. துக்கடா என்ற வார்த்தையை அவமானமாக எடுத்துக் கொண்டால் அது அவமானம்தான். துக்கடா என்ற வார்த்தையை தரம் குறைவானது என எடுத்துக் கொண்டவர்கள், அந்த தரத்துக்கான தகுதியை தங்களது தரம் தாழ்ந்த விமர்சனங்கள் மூலமாக நிரூபிக்கிறார்கள்.

கோவையில் சிறு, குறு தொழில்களை மேம்படுத்த குறுந் தொழில்பேட்டைகள் நிச்சயமாக அமைக்கப்படும். மல்டி மில்லியன் நிறுவனங்கள் 50 இருக்கும் இடத்தில் 5 லட்சம் சிறு,குறு தொழில் நிறுவனங்கள் இருந்தால், இரண்டுமே நிகரான லாபத்தை தேசத்துக்கு ஈட்டிக் கொடுக்கும் என நம்புகிறவர்கள் நாங்கள். இதனால் சிறு, குறுதொழில் நிறுவனத்தினர் பாதுகாக்கப்பட வேண்டியவர்கள். ஏழை குறுந்தொழில் செய்பவருக்கு அன்றாடம்கடன் அளிக்க நிறுவனத்தை ஏற்படுத்துவோம். இந்த நடவடிக்கையால் சிறு, குறு தொழில் செய்வோர் கந்து வட்டி பிரச்சினையிலிருந்து தப்பிப்பார்கள்.

மிகப்பெரிய திறமைசாலிகள் கூட, கந்து வட்டி பிரச்சினையில் சிக்கி மாண்டுபோயுள்ளனர். இதுபோன்ற பிரச்சினைகளில் இருந்து சிறு, குறுதொழில் செய்வோரை காப்பாற்றுவதற்கான திட்டங்கள் எங்களிடம் உள்ளன. அதற்கு எங்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும். தேர்தல் தொடர்பாக வரும் கருத்து கணிப்புகள் அனைத்தும் கருத்து திணிப்புகள் ஆகும். இவ்வாறு அவர் தெரிவித்தார். கட்சியின் துணைத் தலைவர் ஆர்.மகேந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x