Published : 01 Apr 2021 03:16 AM
Last Updated : 01 Apr 2021 03:16 AM
காஞ்சிபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில் பாமக-திமுக இடையே கடும் இழுபறி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தங்கள் செல்வாக்கை அதிகரிக்க மறைந்த வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டு குருவின் மகளை அழைத்து வந்து திமுகவினர் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
காஞ்சிபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக கூட்டணியில் பாமக சார்பில் மகேஷ்குமார் போட்டியிடுகிறார். திமுக சார்பில் தற்போதைய சட்டப்பேரவை உறுப்பினர் சி.வி.எம்.பி.எழிலரசன் போட்டியிடுகிறார். கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 90 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்று இவர் வெற்றி பெற்றார். பலமான கூட்டணியில் போட்டியிடும் திமுகவினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த தேர்தலில் பாமக தனித்து போட்டியிட்டு 30 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்றது. அதிமுக சார்பில் போட்டியிட்ட மைதிலி திருநாவுக்கரசு 82 ஆயிரம் வாக்குகளை பெற்றிருந்தார். தற்போது அதிமுக-பாமக கூட்டணியாக போட்டியிடுவதால் இவர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கிராமப்புறங்களில் அதிமுக-பாமக கூட்டணி வலுவாக உள்ளது.
இச்சூழலில், மறைந்த வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குருவின் மகள் விருதாம்பிகை திமுக வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அந்தத் தொகுதிக்கு உட்பட்ட கீழம்பி, திருப்பருத்திக்குன்றம், கோவிந்தவாடி அகரம், காரை உள்ளிட்ட பகுதிகளில் தீவிர பிரச்சாரம் செய்தார். குறிப்பாக வன்னியர்கள் அதிகம் வாழும் பகுதிகளில் இவரை திமுகவினர் பிரச்சாரத்தில் ஈடுபடுத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது. இவருடன், இவரது கணவர் மனோஜும் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். திமுக மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் பலரும் இந்தப் பிரச்சாரத்தில் பங்கேற்றனர்.
பாமக வேட்பாளர் மகேஷ்குமார் காஞ்சிபுரம் நகரில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இவர் மார்க்கெட் பகுதிக்குச் சென்று, அங்கு வணிகர்களுடன் இணைந்து வியாபாரத்தில் ஈடுபட்டவாறு பிரச்சாரம் செய்தார். மார்க்கெட் பகுதிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தித் தருவதாக அவர்களிடம் உறுதி அளித்தார். காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையை மேம்படுத்துவது, சுத்தமான குடிநீர் வழங்குவது உள்ளிட்ட வாக்குறுதிகளை கூறி இவர் வாக்கு சேகரித்து வருகிறார். அதிமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் இவருக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன.
காஞ்சிபுரத்தில் அமமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மனோகரன் காஞ்சிபுரம் நகரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அவருக்கு ஆதரவாக தேமுதிகவினர் பிரச்சாரத்தில் இணைந்துள்ளனர்.
மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடும் கோபிநாத் காஞ்சிபுரம் நகரில் வீதி வீதியாகச் சென்று வாக்கு சேகரித்தார். தேர்தல் நெருங்கி வருவதால் சுயேச்சை வேட்பாளர்கள் உள்ளிட்ட பலரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT