Published : 31 Mar 2021 06:43 PM
Last Updated : 31 Mar 2021 06:43 PM
திமுக - காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு வந்தால், பெண்களின் பாதுகாப்பு கேலிக் கூத்தாகி விடும் என உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கோவையில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் பேசினார்.
கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனை ஆதரித்துப் பிரச்சாரம் செய்ய, உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் இன்று (31-ம் தேதி) காலை கோவை வந்தார்.
கோவை விமான நிலையத்தில் இருந்து புலியகுளத்துக்கு வந்த அவர், வேட்பாளர் வானதி சீனிவாசனுடன் புலியகுளம் விநாயகர் கோயிலுக்குச் சென்று வழிபட்டார். அதன் பின்னர், பிரச்சார வேனில் ஏறிய யோகி ஆதித்யநாத் பொதுமக்களைப் பார்த்துக் கையசைத்துவிட்டு, கீழே இறங்கினார்.
பின்னர், பாஜகவினர் நடத்திய இருசக்கர வாகனப் பேரணியில் கலந்துகொண்ட அவர், புலியகுளத்தில் இருந்து ராமநாதபுரம், சுங்கம் சந்திப்பு, அரசு மருத்துவமனை சந்திப்பு, டவுன்ஹால் வழியாக ராஜவீதி தேர்முட்டி பிரச்சாரக் கூட்டம் நடக்கும் திடலை வந்தடைந்தார்.
பிரச்சாரக் கூட்டத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசியதாவது:
''நம் தமிழக மண், பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கக்கூடியது. கன்னியாகுமரியில் தொடங்கி பல்வேறு மாவட்டங்களில் பார்த்தாலும், எண்ணற்ற இயக்கங்கள், கட்சிகள் வந்தாலும், அனைவரின் கருத்தும் பெண்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்பதை மையப்படுத்தியுள்ளது. அதிமுக- பாஜக கூட்டணி மட்டுமே இக்கருத்தை முன்னெடுத்துச் செல்லும். திமுக - காங்கிரஸ் கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வந்தால், அனைத்துத் திட்டங்களும் பாழாகிவிடும்.
பெண்களின் பாதுகாப்பு கேலிக் கூத்தாகிவிடும். அவர்கள் பெண்களுக்கு எதிரான நபர்கள். அவர்களுக்கு இத்தேர்தலில் தக்க பாடத்தைப் புகட்ட வேண்டும். பெண்களுக்கு எதிராகச் செயல்படும் திமுக- காங்கிரஸ் கூட்டணியை என்றைக்கும் ஆட்சிக்கு வரவிடக் கூடாது. நாம் அவர்களுக்கு எதிராகக் களத்தில் இறங்க வேண்டும். நம் வேட்பாளரை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும்.
ஊழல் கூட்டணி
மேலும், திமுக - காங்கிரஸ் கூட்டணி ஊழல் கூட்டணி. உள் கட்டமைப்பு, பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்பு பற்றியெல்லாம் அவர்களுக்குக் கவலையில்லை. தொடர்ந்து ஊழல் செய்வது மட்டுமே திமுக- காங்கிரஸ் கூட்டணியின் நோக்கம். காமன்வெல்த், 2 ஜி, நிலக்கரி ஊழல்களை அதற்கு உதாரணமாகக் கூறலாம்.
கரோனா காலத்தில், பிரதமர் மோடியின் தலைமையிலான அரசு சிறப்பாகச் செயல்பட்டு, கரோனா பரவலைக் குறைத்துள்ளது. கோவை மண் முன்னேற வேண்டும் என்றால், பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனை வெற்றி பெற வைக்க வேண்டும்''.
இவ்வாறு யோகி ஆதித்யநாத் பேசினார்.
யோகியின் காலில் விழுந்து வாழ்த்து பெற்ற வானதி சீனிவாசன்
முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசும்போது, 'பாரத் மாதா கி ஜெ', 'வந்தே மாதரம்', 'ஜெய் ஸ்ரீராம்' ஆகியவற்றை தலா மூன்று முறை கூறினார். தனது பேச்சை முடிக்கும் போது 'ஜெய் ஸ்ரீராம்' என்று கூறினார். 'கோவை மக்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்' எனத் தமிழில் தனது உரையைத் தொடங்கினார்.
முழுக்க முழுக்க இந்தியில் முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசினார். அவரது இந்தி பேச்சை, தமிழக பாஜக துணைத் தலைவர் ஏ.பி.முருகானந்தம் தமிழில் மொழிபெயர்த்தார். மேலும், முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் காலில் விழுந்து, பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் வாழ்த்து பெற்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT