Published : 31 Mar 2021 06:17 PM
Last Updated : 31 Mar 2021 06:17 PM
பிரியாணி, மதுபானம் மற்றும் பணத்துக்காக வாக்குகளை விற்பனை செய்துவிட்டு, நல்ல அரசியல் தலைவர்களை எப்படி எதிர்பார்க்க முடியும்? என உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் சட்டப்பேரவைத் தொகுதியை பொது தொகுதியாக அறிவிக்கக் கோரி கடையநல்லூரைச் சேர்ந்த சந்திரமோகன், உயர் நீதிமன்றக் கிளையில் பொது நலன் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வு இன்று பிறப்பித்த உத்தரவு:
தற்போதைய தேர்தலில் ஒவ்வொரு கட்சிகளும் ஏராளமான வாக்குறுதிகளை அளித்துள்ளன. ஒரு கட்சி குடும்ப தலைவிக்கு மாதம் ரூ.1000 தருவதாகம், இன்னொரு கட்சி ரூ.1500 தருவதாகவும் அறிவித்துள்ளது. கடன்களை தள்ளுபடி செய்யும் கட்சிக்கே ஓட்டு என முடிவு செய்து மக்கள் தங்களைத் தாங்களே ஊழல்வாதியாக மாற்றிக்கொள்கின்றனர்.
அரசியல் கட்சிகளின் வாக்குறுதிகளில் நல்ல உள் கட்டமைப்புகளை செய்வது, மருத்துவ வசதிகளை ஏற்படுத்துதல், கல்வி, வேளாண் முன்னேற்றங்களை உருவாக்குதல் போன்றவை இடம் பெறுவது நல்லது. இது தான் நாட்டு மக்களின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது. மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்யும் வகையில் கட்சிகள் தேர்தல் வாக்குறுதிகளை வழங்கினால் ஏற்கலாம்.
இலவசங்களைக் கொடுத்து மக்களை சோம்பேறிகளாக மாற்றாமல், மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதில் கட்சிகள் கவனம் செலுத்த வேண்டும். தமிழகத்தில் கடைகள், சலூன்கள், கட்டிடத் தொழில்கள் என எல்லாவற்றிலும் வட மாநிலத்தவர்களின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது.
தமிழகத்தில் பொறியியல், முதுநிலைப் பட்டம் பெற்றவர்கள் துப்புரவு தொழிலாளி பணிக்கும், அலுவலக உதவியாளர் பணிக்கும் விண்ணப்பிக்கின்றனர். இந்த நிலை தொடர்ந்தால் புலம் பெயர் தொழிலாளர்கள் முதலாளிகளாகும் நிலை வந்தாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை.
கடந்த 20 ஆண்டுகளாக கட்சிகளின் தேர்தல் வாக்குறுதிகளில் இலவசங்கள் பிரதான இடம் பிடித்து வருகின்றன. பொதுவாக அரசியல் கட்சிகள் மாநில முன்னேற்றத்துக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அதை செய்யாமல் இலவசங்களை அறிவித்து, அதை நிறைவேற்ற கடன் பெறுவதால் நிதிச்சுமை அதிகரிக்கும்.
நிதிப்பற்றாக்குறையை சரி செய்ய மதுக்கடைகள் அதிகரிக்கப்படுகின்றன. இதனை மக்கள் உணர வேண்டும். பிரியாணி, மது பாட்டிலுக்கும், பணத்துக்காகவும் வாக்குகளை விற்பனை செய்யக்கூடாது. வாக்குகளை விற்பனை செய்து விட்டு நல்ல அரசியல் தலைவர்களை எப்படி எதிர்பார்க்க முடியும்?
இதனால் அரசியல் கட்சிகளின் தேர்தல் வாக்குறுதிகளை முறைப்படுத்த, குறிப்பாக இலவசங்கள் வழங்குவது தொடர்பாக சுப்பிரமணியபாலாஜி வழக்கில் 2013-ல் உச்ச நீதிமன்றத்தின் அறிவுறுத்தல்களை பின்பற்ற நடவடிக்கை எடுத்துள்ளதா? இந்த அறிவுறுத்தல்கள் தேர்தல் ஆணையம் எத்தனை தேர்தல்களில் பின்பற்றியது?
எந்த தேர்தல் வாக்குறுதிகளுக்கு தேர்தல் ஆணையம் அதிருப்தி தெரிவித்தது? தேர்தல் ஆணையத்தின் அதிருப்திக்கு பிறகு அந்த வாக்குறுதிகள் நீக்கம் செய்யப்பட்டதா? எந்தெந்த அரசியல் கட்சிகளின் தேர்தல் வாக்குறுதிகள் நீக்கம் செய்யப்பட்டன?
அரசியல் கட்சிகள் தேவையற்ற, காரணம் இல்லாத வாக்குறுதிகளை வழங்கக்கூடாது என தேர்தல் ஆணையம் ஏன் அறிவுறுத்தக்கூடாது?, சமூக நலத்திட்டங்கள் என்ற பெயரில் மக்களை சோம்பேறிகளாக்கும் அறிவிப்புகளை வழங்கும் அரசியல் கட்சிகளின் அங்கீகாரத்தை தேர்தல் ஆணையம் ஏன் ரத்து செய்யக்கூடாது?
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியுமா என்பது குறித்து வல்லுனர்களின் கருத்து பெறப்படுமா? அதற்கான வருவாய் ஆதாரங்கள் உள்ளதா? இவை ஆராயப்படுகிறதா?, தேர்தலில் வெற்றிப்பெற்று அரசு அமைத்த பிறகு அந்தக்கட்சி தேர்தல் வாக்குறுதியை முறையாக நிறைவேற்றுகிறதா? நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை வழங்கும் அரசியல் கட்சிகளின் அங்கீகாரத்தை தேர்தல் ஆணையம் ஏன் ரத்து செய்யக்கூடாது?
கடந்த 4 சட்டப் பேரவை மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களில் அரசியல் கட்சியினர் வழங்கிய எத்தனை வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன? ஒவ்வொரு தொகுதியிலும் பட்டியல் வகுப்பு மற்றும் பழங்குடியின மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தி, அந்த எண்ணிக்கை அடிப்படையில் தனி தொகுதியை சுழற்சி முறையில் ஏன் மறு சீரமைப்பு செய்யக்கூடாது? ஆகிய கேள்விகளுக்கு தேர்தல் ஆணையம் பதிலளிக்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். பின்னர், விசாரணை ஏப். 26-க்கு ஒத்திவைக்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT