Published : 31 Mar 2021 02:33 PM
Last Updated : 31 Mar 2021 02:33 PM
தேர்தலுக்குப் பின்னர் ஊரடங்கு அமல்படுத்தப்படுமா என்ற கேள்விக்கு, ஊகத்தின் அடிப்படையில் எதையும் சொல்ல முடியாது என்று தமிழக சுகாதாரத் துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
மார்ச் மாதத் தொடக்கம் முதலே தமிழகத்தில் கரோனா தொற்று படிப்படியாக உயர்ந்து வருகிறது. சென்னை, கோவை, தஞ்சை ஆகிய மாவட்டங்களில் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. நேற்று (மார்ச் 30) மட்டும் 2,342 பேருக்கு தமிழகம் முழுவதும் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 16 பேர் கரோனா தொற்றுக்கு நேற்று உயிரிழந்தனர். அதிகபட்சமாக சென்னையில் 874 பேருக்கும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 242 பேருக்கும், கோயம்புத்தூர் மாவட்டத்தில் 207 பேருக்கும், தஞ்சாவூர் மாவட்டத்தில் 114 பேருக்கும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 100 பேருக்கும் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த ஏப். 30 வரை தளர்வுகளுடன் ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு இன்று (மார்ச் 31) உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், தேர்தலுக்குப் பின்னர் ஊரடங்கு அமல்படுத்தப்படுமா என, சென்னையில் செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு தமிழக சுகாதாரத் துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், "எப்போதும் ஊகத்தின் அடிப்படையில் சொல்லக் கூடாது. பொதுமக்களுக்குப் பதற்றம் ஏற்படாத வகையில் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
கடந்த ஆண்டு கரோனா தொற்றை எதிர்கொள்வதற்கு உலக அளவில் போதுமான மருத்துவ வசதிகள் இல்லை. கூட்டு மருந்துகள், தடுப்பூசி இல்லை. இப்போது தடுப்பூசியை உரியவர்களுக்குச் செலுத்த வேண்டும். நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டும்.
தடுப்பூசி போட்டுக்கொள்ள தகுதி பெற்ற மக்கள் முழுமையாக முன்வருவதில்லை. 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், விரும்பியவர்கள் வந்து போட்டுக்கொள்கின்றனர். 5,000க்கும் மேற்பட்ட தடுப்பூசி மையங்கள் இருக்கின்றன. யாரெல்லாம் தகுதி பெற்றவர்களோ அவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.
கலாச்சாரக் கூட்டம், பிரச்சாரக் கூட்டங்கள் என எந்த வித்தியாசத்தையும் கரோனா பார்க்காது. தள்ளுவண்டியில் சாப்பிடும்போது உணவை வாங்கிவிட்டுத் தள்ளி நின்று சாப்பிட வேண்டும். கரோனா வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். பதற்றம் அடையக் கூடாது. ஆக்கபூர்வமாகச் செயல்பட வேண்டும்" எனத் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT