Last Updated : 31 Mar, 2021 12:43 PM

 

Published : 31 Mar 2021 12:43 PM
Last Updated : 31 Mar 2021 12:43 PM

தேர்தல் நாளன்று கடும் வெயில் இருக்குமா? குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலையால் தமிழகத்துக்கு மழை கிடைக்குமா?- தமிழ்நாடு வெதர்மேன் தகவல்

பிரதிநிதித்துவப் படம்.

சென்னை

வங்கக் கடலில் உருவாக இருக்கும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலையால் தமிழகத்துக்கு மழை கிடைக்குமா, அடுத்துவரும் நாட்களில் வெயில் அதிகரிக்குமா என்பது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் விளக்கம் அளித்துள்ளார்.

தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தெற்கு அந்தமான் பகுதியில் வளிமண்டலச் சுழற்சி நிலவுகிறது. ஆழ்ந்த காற்றழுத்தப் பகுதியாகவும் உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கணித்துள்ளது.

ஆனால், கடந்த சில நாட்களாகத் தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள், உள்மாவட்டங்களில் வெயில் வாட்டி வருகிறது. மார்ச் மாதத்தில் இதுவரை இல்லாத அளவு சென்னை மீனம்பாக்கத்தில் 41.3 டிகிரி செல்சியஸ் வெப்பம் நேற்று பதிவானது. இதற்கு முன் 2014-ம் ஆண்டு 39.2 டிகிரி செல்சியஸ் பதிவானது. அதன்பின் அதிகபட்சம் நேற்று பதிவானது.

கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு திருச்சியில் மார்ச் மாதத்தில் 40.8 டிகிரி வெப்பம் நேற்று பதிவானது. தமிழகத்தில் நேற்று மட்டும் 10 மாவட்டங்களில் வெயில் சதம் அடித்துள்ளது.

அதேசமயம் தெற்கு அந்தமான் பகுதியில் உருவாக இருக்கும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலையில் வெயில் குறைந்து மழை பெய்யுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன் எனும் பெயரில் முகநூலில் எழுதி வரும் பிரதீப் ஜான், 'இந்து தமிழ் திசை' இணையதளத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

பிரதீப் ஜான்

அந்தமான் தெற்குப் பகுதியில் உருவாக இருக்கும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலையால் தமிழகத்துக்கு மழை இருக்குமா?

தமிழகத்துக்கும் இந்தக் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இதனால் மழையும் இருக்காது. தமிழகத்துக்கு எந்த பாதிப்பும் இருக்காது. இந்தக் காற்றழுத்தத் தாழ்வு நிலை மேல்நோக்கி நகர்ந்து மியான்மர் நோக்கி நகரக்கூடும். ஆதலால், தமிழகத்துக்கு மழை வாய்ப்பு இல்லை. மியான்மர் நோக்கிச் செல்லும்போது வலுகுறைந்ததாகவே செல்ல வாய்ப்புள்ளது.

அடுத்துவரும் நாட்களில் தமிழகத்தில் வெயில் அதிகரிக்குமா?

நிச்சயமாக. அடுத்துவரும் 4 நாட்களுக்கு தமிழகத்தில் வெப்பம் அதிகரிக்கும். மேற்கு வடமேற்கு திசையிலிருந்து வரும் காற்று, நிலப்பகுதி காற்றும் வலுவாக இருக்கிறது. கடல் காற்றும் வலுவாக இருப்பதால், அடுத்துவரும் 4 முதல் 5 நாட்கள் வெயில் அதிகரிக்கும்.

ஆந்திரா, ராயலசீமா பகுதியிலிருந்து வறண்ட காற்று தமிழகம் நோக்கி வரும் என்பதால் வடதமிழகத்தில் கடும் வெப்பம் நிலவும். குறிப்பாக வடதமிழக உள்மாவட்டங்களில் வெப்பம் அதிகரிக்கும். சராசரி வெப்பநிலையைவிட 2 அல்லது 3 டிகிரி வெப்பம் அதிகரிக்கும்.

சென்னையில் வெயில் எந்த அளவு அதிகரிக்கும்?

சென்னையில் சராசரி வெப்பநிலையைவிட 2 அல்லது 3 டிகிரி அதிகரிக்கும். 40 டிகிரி வரை உயருமா என்பது கடினம்தான். ஆனால், கடற்கரையை ஒட்டிய உள்மாவட்டங்கள், வேலூர், திருவண்ணாமலை, திருவள்ளூர், விழுப்புரம், கடலூரில் சில பகுதிகள், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்துவரும் 4 நாட்களுக்கு வெயில் 40 டிகிரி வரை உயர வாய்ப்புள்ளது.

கடலோர மாவட்டங்களில் வெப்பம் அதிகரிக்குமா?

கடற்கரையை ஒட்டி இருக்கும் மாவட்டங்களில் வெயில் பெரிய அளவுக்கு அதிகரிக்க வாய்ப்பு இருக்காது. குறிப்பாக சென்னை, நாகை போன்றவற்றில் வெயில் கடுமையாக இருக்காது. ஆனால், உள்மாவட்டங்களில் வெப்பம் கடுமையாக அதிகரிக்கும்.

எத்தனை நாட்களுக்கு இந்த வெயில் அதிகரிப்பு இருக்கும்?

ஏப்ரல் 3 அல்லது 4-ம் தேதிவரை உள்மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும். அதன்பின் படிப்படியாக வெயில் குறைந்து இயல்பு நிலைக்கு வந்துவிடும்.

அடுத்துவரும் நாட்களில் தமிழகத்துக்கு மழை வாய்ப்பு இருக்கிறதா?

தமிழகத்துக்கு தற்போதுள்ள நிலையில் தென்மாவட்டங்களுக்குத்தான் மழை வாய்ப்புள்ளது. குறிப்பாக மேற்குத் தொடர்ச்சி மலையோர மாவட்டங்களான தென்காசி, தேனி, வால்பாறை, நீலகரி, கூடலூர், பாந்தலூர், பொள்ளாச்சியில் சில பகுதிகள், திண்டுக்கல் மலைப்பகுதிகளில் இடியுடன் கூடிய மழை, வெப்பச்சலன மழை இருக்கும். கடந்த சில நாட்களாகவே இந்த மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. அடுத்துவரும் நாட்களுக்கும் இந்த மழை தொடரும்.

தேர்தல் வாக்குப்பதிவு நடக்கும் ஏப்ரல் 6-ம்தேதியன்று வெயிலின் தாக்கம் அதிகரிக்க வாய்ப்புள்ளதா?

வெயில் அதிகரிக்க வாய்ப்பில்லை. இந்த வெப்ப அதிகரிப்பு என்பது அடுத்த 3 அல்லது 4 நாட்களுக்கு மட்டும்தான். ஏப்ரல் 4-ம் தேதி முதல் வெயில் குறையத் தொடங்கி இயல்பு நிலைக்கு வந்துவிடும். தேர்தல் நாளன்று உள்மாவட்டங்களில் வெயில் சற்று அதிகரிக்க வாய்ப்புள்ளது.

கத்திரி வெயில் போன்றெல்லாம் இருக்காது. இயல்பிலிருந்து சற்று அதிகரிக்கும். ஆனால், பெரும்பாலான மாவட்டங்கள், கடலோர மாவட்டங்களில் ஏப்ரல் 6-ம் தேதியன்று வெயிலின் தாக்கம் பெரிதாக இருக்க வாய்ப்பில்லை.

இந்தக் கடும் வெப்பம் தொடர்ந்து நீடிக்குமா?

இல்லை. இது தற்காலிகமான வெப்ப அதிகரிப்புதான். தொடர்ந்து 40 டிகிரி வெப்பம் இருக்கும் எனச் சொல்ல முடியாது. அடுத்துவரும் 4 நாட்களுக்கு வெயில் இயல்பை விட 3 அல்லது 4 டிகிரி அதிகரிக்கும். அதன்பின் இயல்பு நிலைக்குத் திரும்பிவிடும்.

இவ்வாறு பிரதீப் ஜான் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x