Published : 31 Mar 2021 11:40 AM
Last Updated : 31 Mar 2021 11:40 AM
பிரச்சாரக் கூட்டங்களுக்கு வருபவர்களைக் கட்டாயம் முகக்கவசம் அணியச் செய்ய வேண்டும் என, அரசியல் கட்சிகளுக்கு சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கிண்டியில் உள்ள அரசு கரோனா மருத்துவமனையில் சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் இன்று (மார்ச் 31) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியதாவது:
"கடந்த ஜூலை மாதத்தில் ராயபுரத்தில் 100 பேரைப் பரிசோதித்தால் 30 பேருக்கு கரோனா தொற்று ஏற்படும். தமிழ்நாடு முழுவதும் 65 ஆயிரம் பேரைப் பரிசோதித்தால் 6,500 பேருக்கு அதாவது 10% பேருக்குத் தொற்று ஏற்படும். அந்த நிலைமை இல்லை என்றாலும், பல இடங்களில் தொற்று பாதிப்பு இரட்டிப்பு ஆகியுள்ளது.
சென்னையில் 3 சதவீதமாக இருந்த தொற்று பாதிப்பு 3.6%, கோயம்புத்தூரில் 4%, தஞ்சையில் 3.5%, திருவாரூரில் 3.4%, நாகப்பட்டினத்தில் 3%, திருவள்ளூர், ராணிப்பேட்டை, கடலூர் ஆகிய மாவட்டங்களில் ஒரு விழுக்காடுக்கும் குறைவாக உள்ளது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சேலம், தூத்துக்குடி மாவட்டங்களில் தொற்று பாதிப்பு 1.5% ஆக அதிகரித்துள்ளது. இது குறைவாக இருந்தாலும் ஏற்கெனவே உள்ள பதிவுகளைவிடக் கொஞ்சம் இரட்டிப்பாகியுள்ளது.
கடந்த ஆண்டைவிட குறைவாக இருக்கிறது என மக்கள் கருதக்கூடாது. அப்படி நாங்கள் சொல்லலாம். ஆனால் நாங்கள் சொல்ல விரும்பவில்லை. எல்லோருடைய ஒத்துழைப்பும் தேவை. நமக்கு சாதகமாகப் புள்ளிவிவரத்தைச் சொல்ல விரும்பவில்லை. மிகச் சிறப்பான சிகிச்சை அளிக்கப்படுகிறது.
அரசு மருத்துவமனைகளைப் பொறுத்தவரையில் கிங் மருத்துவமனையில் 476 பேரும், ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் 312 பேரும், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 46 பேரும், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் 85 பேரும், ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் 205 பேரும் என, 1,124 பேர் சிகிச்சையில் உள்ளனர். 4,368 படுக்கை வசதிகள் உள்ளன.
எந்தவொரு மாவட்டத்திலும் ஒரேயொரு மருத்துவமனைக்கு வருவதை மக்கள் தவிர்க்க வேண்டும். தீவிர சிகிச்சை தேவைப்படுபவர்கள், வீட்டு சிகிச்சையில் உள்ளவர்களுக்கென வழிகாட்டு நெறிமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளன.
தனிப்பட்ட நபர்கள் முகக்கவசம் அணிந்து, முடிந்தவரை 6 அடி தனிநபர் இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும். பாதிப்பு உள்ளவரும் பாதிப்பில்லாதவரும் முகக்கவசம் அணிந்தால் தொற்று பாதிப்பிலிருந்து தப்பிக்கலாம். முன்களப் பணியாளர்கள், போர் வீரர்கள் போன்று உயிரைப் பணயம் வைத்து மக்களுக்காகப் பணியாற்றிக் கொண்டிருக்கின்றனர்.
தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களைத் தவிர்க்க முடியாது, அது ஜனநாயகக் கடமை. பிரச்சாரக் கூட்டங்களுக்கு வருபவர்களைக் கட்டாயம் முகக்கவசம் அணியச் செய்ய வேண்டும் என, அரசியல் கட்சிகளுக்கு ஒரு முறையீடாக வைக்கிறேன். பொது இடங்களில் கூட்டம் கூடச்செய்யும் மத நிகழ்ச்சிகளைத் தவிர்க்க வேண்டும். போட்டி போட்டு மத நிகழ்ச்சிகளை நடத்த வேண்டாம்.
கரோனா உருமாறினாலும் அதன் தன்மையில் எந்த மாற்றமும் இல்லை. 600க்கும் மேற்பட்ட இடங்கள் நோய்த்தடுப்புப் பகுதிகளாக மாறியிருக்கின்றன. கடந்த ஏப்.1-ம் தேதி அந்த எண்ணிக்கை 18 ஆக இருந்தது. ஒரு பகுதியில் 3 பேருக்கு மேல் தொற்று உள்ளவர்கள் இருந்தால் அவை நோய்த்தடுப்புப் பகுதிகளாக அறிவிக்கப்படுகின்றன. நோய் உள்ளவர்கள், தொடர்பில் உள்ளவர்களைக் கட்டாயம் பரிசோதிக்கிறோம். சளி, காய்ச்சல் உள்ளவர்களைப் பரிசோதிக்கிறோம். அப்படிச் செய்யும்போது தொற்று எண்ணிக்கை உயரலாம். அவர்களைப் பரிசோதிக்காமல் இருந்தால் அவர்கள் இன்னும் அதிகமானோருக்குப் பரப்பிவிடுகின்றனர்.
ஏற்கெனவே எப்படி 56 ஆயிரம் படுக்கைகள் மருத்துவமனைகளில் தயாராக இருக்கிறதோ, இன்னும் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படுக்கைகள் கோவிட் கேர் சென்டர்களில் உள்ளன. எனவே, அதனை மீண்டும் செயல்படுத்த ஆணையிட்டுள்ளோம்.
அதிகமாக தொற்று வரும் பகுதிகளில் ஆய்வுகள் மேற்கொள்கிறோம். மாவட்டவாரியாக திட்டங்களை வகுக்கச் சொல்லியிருக்கிறோம். தஞ்சையில் பள்ளி, கல்லூரிகளில் தொற்று ஏற்படுகிறது. சென்னை மற்றும் கோவையில் பணியிடங்கள், குடும்ப நிகழ்ச்சிகளில் ஏற்படுகிறது".
இவ்வாறு ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT