Published : 31 Mar 2021 10:32 AM
Last Updated : 31 Mar 2021 10:32 AM
வாக்குச்சாவடி மையங்களில் அடிப்படை வசதிகள் கூட செய்து கொடுக்கப்படாததால் வாக்குச்சாவடி அலுவலர்கள் சிரமத்துக்கு உள்ளாவது தொடர்கதையாகி வருகிறது.
தேர்தல் பணியில் 2 நாட்கள் தங்கியிருந்து ஈடுபட வேண்டிய உள்ளதால் வாக்குச்சாவடி மையங்களில் இரவு தங்குவதற்கும், குளிக்க, குடிக்க தண்ணீர் வசதி, கழிவறை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை முழுமையாக தேர்தல் ஆணையம் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு தேர்தல் பணியில் ஈடுபடும் வாக்குச்சாவடி அலுவலர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
மதுரை மாவட்டத்தில் கடந்த கால தேர்தல்களில் 2 ஆயிரத்து 716 வாக்குச்சாவடிகள் வரை அமைக்கப்பட்டன. ஒரு வாக்குச்சாவடிக்கு 1,500 பேர் வீதம் வாக்களித்தனர்.
தற்போது கரோனா காரணமாக வாக்காளர்கள் சமூக இடைவெளிட்டு வாக்களிக்க வசதியாக வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது. அதனால், மதுரை மாவட்டத்தில் தற்போது புதிதாக 1,321 வாக்குச்சாவடிகள் கூடுதலாக ஏற்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி மொத்தம் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகள் அமைத்து அதில் பணிபுரியும் வாக்குச்சாவடி அலுவலர்கள் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
வரும் ஏப்ரல் 6ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் ஒரே கட்டமாக தமிழகம் முழுவதும் நடைபெறுகிறது. தேர்தல் பணியில் ஈடுபடுவதற்காக அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு தேர்தலுக்கு முந்தைய நாளான 5ம் தேதி காலையே வாக்குச்சாவடி தலைமை அலுவலரும், மற்ற வாக்குச்சாவடி அலுவலர்களும் செல்ல வேண்டும்.
அவர்கள் அன்று இரவு வாக்குச்சாவடி மையங்களிலே தங்க வேண்டும். மறுநாள் தேர்தல் நாளில் வாக்குப்பதிவு முடிந்து நள்ளிரவு வரை தேர்தல் அலுவலர்கள் வாக்குப்பதிவு இயந்திரங்களை எடுத்துச் செல்லும் வரை அந்தந்த வாக்குச்சாவடி மையங்களிலேயே இருக்க வேண்டும்.
வாக்குப்பதிவு இயந்திரங்களை எடுத்துச் சென்றபிறகே வாக்குச்சாவடி அலுவலர்கள் வீட்டிற்குச் செல்ல முடியும். அதனால், வாக்குச்சாவடிகளில் இரண்டு நாள் இரவு தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்கள் தங்கியிருக்க வேண்டும்.
ஆனால், கடந்த காலங்கள் வரை வாக்குச்சாவடி மையங்களிலேயே தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு எந்த அடிப்படை வசதிகளும் தேர்தல் ஆணையம் செய்துகொடுக்கவில்லை.
ஓரளவு நல்ல நிலையில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளிகளில் மட்டுமே தேர்தல் பணியாளர்கள் தங்குவதற்கும் மின் விசிறியும், கழிப்பறை வசதியும், குளியல் அறையும் உள்ளது. பெரும்பாலான அரசுப் பள்ளிகளில் கழிவறை வசதி கூட இல்லை.
அப்படியே இருந்தாலும் அது மோசமானநிலையில் உள்ளது. அதனால், வாக்குச்சாவடிகளில் தங்கும் ஊழியர்கள், இரவு தூங்க முடியாமல் சிரமப்படுவார்கள். குறிப்பாக பெண் ஊழியர்கள் கழிப்பிட அறை செல்வதற்கும், குளிப்பதற்கும் செல்ல முடியாமல் மிகவும் சிரமப்படுகிறார்கள். சில பள்ளிகளில் மின்சார வசதி சரியாக இல்லாததால் இரவு வாக்குப்பதிவு நீடிக்கும்போது டார்ச் லைட் வெளிச்சம், செல்போன் வெளிச்சத்தில் வாக்குப்பதிவுகள் தொடர்கதையாக நடக்கிறது.
பல பள்ளி வகுப்பறைகள் மின் விளக்குகள் கூட இல்லை. பழுதடைந்த பல்புகள் மாற்றப்படாமலேயே வாக்குப்பதிவு நடப்பதால் வாக்குப்பதிவு அறைக்குள் போதிய வெளிச்சம் இல்லாமல் வாக்காளர்கள் வாக்களிக்க திணறுவார்கள். மதுரையில் தற்போது இரவில் கடும் புழுக்கமும், கொசுக்கடியும் மக்களை வாட்டி வதைக்கிறது.
அதனால், வாக்குச்சாவடி மையங்களில் வாக்குச்சாவடி அலுவலர்கள் தங்குவதற்கு போதிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று தேர்தல் பணியில் ஈடுபடும் வாக்குச்சாவடி அலுவலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
ஒவ்வொரு முறையும் தேர்தல் நடக்கும்போது, வாக்குப்பதிவை மட்டும் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் நடத்த நினைக்கும் தேர்தல் ஆணையம், அடிப்படை வசதிகளுடன் வாக்குச்சாவடிகளை அமைப்பதற்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை.
அதனால், எந்த ஒரு அடிப்படை வசதிகளும் இல்லாமல் வாக்குச்சாவடி மையங்கள் அவசரக் கோலத்தில் அமைக்கப்படுவதாலேயே இப்பணிக்கு வருவதற்கு அரசு ஊழியர்கள் தயக்கம் காட்டுகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT