Last Updated : 26 Jun, 2014 08:30 AM

 

Published : 26 Jun 2014 08:30 AM
Last Updated : 26 Jun 2014 08:30 AM

இளம் வாக்காளர்களின் எண்ணிக்கை குறைவு: கல்லூரிகளுக்கு கடிதம் எழுத தேர்தல் துறை திட்டம்

தமிழகத்தில் 18, 19 வயதுள்ளவர்களில் 50 சதவீதத்துக்கும் குறைவாகவே வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். அடுத்த தேர்தலுக்குள் இளம் வாக்காளர் களின் எண்ணிக்கையை அதிகரிக்க பல்வேறு திட்டங்களை தேர்தல் துறை வகுத்து வருகிறது.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. ஆனால், 18 முதல் 30 வயதுடைய இளம் வாக்காளர்களின் எண்ணிக்கை மட்டும் அதிகரிப்பதில்லை. குறிப்பாக 18, 19 வயதுடையவர்களில் சுமார் 51 சதவீதத்தினர் வாக்காளர் பட்டியலில் இடம்பெறவில்லை. 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இந்த வயதுடைய வாக்காளர்கள் 24.46 லட்சம் பேர் இருக்க வேண்டும். ஆனால், சுமார் 12 லட்சம் பேரே பட்டியலில் உள்ளனர். இது மொத்த வாக்காளர்களில் 2.3 சதவீதம் மட்டுமே.

இந்த வயதுக்குட்பட்டவர்கள் பெரும்பாலும் கல்லூரி மாணவர்களே ஆவர். அதை கருத்தில் கொண்டு, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் கல்லூரி

களில் ‘மாணவர் தூதர்’ என்ற திட்டம் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப் பட்டது. அதன்படி, ஒவ்வொரு கல்லூரியிலும் ஒரு மாணவரைத் தேர்ந்தெடுத்து, அவர் மூலம் வாக்காளர் பட்டியல் பெயர் சேர்ப்புக்கான மனுக்களை விநியோகித்தல், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்துதல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த திட்டத்துக்கு ஓரளவு பலன் கிடைத்தாலும், எதிர்பார்த்த அளவுக்கு எண்ணிக்கை அதிகரிக்கவில்லை என்று தேர்தல் துறையினர் தெரிவித்தனர்.

இதுகுறித்து அவர்கள் ‘தி இந்து’விடம் கூறியதாவது: கல்லூரிகளில் ‘மாணவர் தூதர்’ திட்டத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. தமிழகத்தில் சுமார் 2,300 கலை, அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரிகள் உள்ளன. சுமார் 1,100 கல்லூரிகளிலேயே இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. விடுபட்டுள்ள மற்ற கல்லூரிகளிலும் ‘மாணவர் தூதர்’ நியமிக்க நட வடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இவற்றில் பல கல்லூரிகள், அரசியல் பிரமுகர்களால் நடத்தப்படுபவை. அந்தக் கல்லூரிகளை அணுகுவதில் தயக்கமும் சிரமும் உள்ளன. எனினும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதன் அவசியத்தை வலியுறுத்தி அந்தக் கல்லூரி நிர்வாகங்களுக்கு கடிதம் எழுத திட்டமிட்டுள்ளோம்.

சில குறிப்பிட்ட மாவட்டங்களில் 18, 19 வயதுடைய வாக்காளர்களின் எண்ணிக்கை 45 சதவீதத்துக்கும் குறைவாகவே உள்ளது. அத்தகைய மாவட்டங்களைக் கண்டறிந்து, இளம் வாக்காளர்களை அதிகரிப் பது பற்றி சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்களுடன் விரைவில் ஆலோசனை நடத்தப்பட உள்ளது. அடுத்த தேர்தலுக்குள் இந்த எண்ணிக்கையை கணிசமாக உயர்த்த தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x