Published : 30 Mar 2021 08:23 PM
Last Updated : 30 Mar 2021 08:23 PM

வாஷிங் மெஷினும் வராது; இலவச கேஸ் சிலிண்டரும் வராது; அதிமுக ஆட்சியும் வராது: கனிமொழி பேச்சு

சென்னை

''அதிமுக தேர்தல் அறிக்கையில் ஸ்கூட்டி கொடுக்கிறேன் என்றார்கள், கொடுக்கவில்லை. செல்போன் கொடுக்கிறேன் என்றார்கள் கொடுக்கவில்லை. செட்டாப்பாக்ஸ் கொடுக்கிறேன் என்றார்கள், கொடுக்கவில்லை. எதுவும் வரவில்லை. அதுபோலத்தான் இலவச கேஸ் சிலிண்டரும், வாஷிங் மெஷினும் வராது. அவர்கள் ஆட்சிக்கும் வர மாட்டார்கள்'' என கனிமொழி பேசினார்.

சென்னை மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் மயிலை வேலுவை ஆதரித்து திமுக மகளிரணிச் செயலாளர் கனிமொழி பேசியதாவது:

“நான் தமிழ்நாடு முழுவதும் சென்று பார்த்துவிட்டு வந்துவிட்டேன். எங்கே பார்த்தாலும் சாலை பிரச்சினைதான். எட்டுவழிச் சாலை குறைந்து எதையும் போடமாட்டார் பழனிசாமி. ஏனென்றால் அதில்தான் டெண்டர் விட்டால் அவருக்கு லாபம். அடிக்கல் நாட்டுவார். அதன்பின் ஒரு செங்கல்லைக் கூட எடுத்துவைக்க மாட்டார்.

அவர் தொகுதிக்கே போனேன். பல திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியிருக்கிறார். அவ்வளவுதான் அதற்கு மேல் ஒன்றும் செய்யவில்லை. அதனால்தான் அவரை அடிக்கல் நாயகன் என்று அழைக்கிறோம். தமிழ்நாடு முழுவதும் அடிக்கல்தான் நாட்டியிருக்கிறாரே தவிர, எந்தத் திட்டமும் செயல்படுத்தப்படவில்லை. இவர்கள் ஆட்சி நடத்தவில்லையே? பாஜகதானே ஆட்சி நடத்துகிறார்கள்.

தமிழ்நாட்டையே கொண்டுபோய் டெல்லியில் அடகு வைத்தாயிற்று. பாஜகவினருக்குத் தமிழகத்தின் கோரிக்கைகள், தேவைகள் எல்லாம் புரியாது. அவர்களுக்குத் தொடர்ந்து இந்தியைத் திணிக்க வேண்டும், சமஸ்கிருதத்தைத் திணிக்க வேண்டும். அதில்தான் அவர்களுக்கு அக்கறை. நம் வீட்டுப் பிள்ளைகள் படிப்பதற்காக தலைவர் கருணாநிதி தொடங்கிய அரசு மருத்துவக் கல்லூரிகளில் இன்று சாதாரண வீட்டுப் பிள்ளைகள், நம் வீட்டுப் பிள்ளைகள் படிக்க முடியாத நிலை.

காரணம் நீட் தேர்வு. இதைவிட புதிய கல்விக் கொள்கையைக் கொண்டு வந்திருக்கிறார்கள். அதன்படி எல்லா கல்லூரிகளிலும் நுழைவுத் தேர்வு எழுதிதான் உள்ளே செல்ல முடியும். மருத்துவக் கல்லூரிக்கு நீட் தேர்வு மாதிரி எல்லா கல்லூரிகளிலும் நுழைவுத் தேர்வு என்பதை இந்த ஆட்சி எதிர்த்துக் கேட்கவில்லை. நம் வீட்டுப் பிள்ளைகள் கல்லூரி சென்று டிகிரி வாங்கக் கூடாதா? இவர்கள் ஆட்சியில் இருந்தால் நம் பிள்ளைகளுக்கு நிச்சயமாக எதிர்காலம் இல்லை.

ஒவ்வொரு வீட்டிலும் வேலையில்லா இளைஞர்கள் இருக்கிறார்கள். இரு முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தினார்கள். ஆனால், ஒரு தொழிற்சாலை வந்ததா? இந்த ஆட்சி யாருக்கும் பயனற்ற ஆட்சி. வேலை வாய்ப்பில்லை. ரேஷன் கடைக்குப் போனால் கை ரேகை வை என்கிறார்கள். கைரேகை ஏறவில்லை என்கிறார்கள். ஸ்டாக் இல்லை என்கிறார்கள். ஸ்டாக் இருந்தால் முத்திரை போட்டிருப்பதால் உங்களுக்கு இல்லை என்பார்கள்.

அப்படியே பொருட்களை வாங்கினாலும் அளவு சரியாக இருக்காது. தமிழ்நாடு முழுவதும் எல்லா ரேஷன் கடைகளிலும் இதே கதைதான். சில இடங்களில் அரிசியை ரேஷன் கடை வாசலிலேயே கொட்டிப் போராட்டம் நடத்தியிருக்கிறார்கள். துறை அமைச்சரே ரேஷன் அரிசியை வெளிமார்க்கெட்டில் விற்றுவிட்டதால் தமிழகம் முழுவதும் இதுதான் நிலைமை.

ரேஷன் கடைகளில் இப்படி என்றால் ஒரு குடம் தண்ணீருக்காக மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டிய நிலைமை. அதுவும் காசு கொடுத்து வாங்கும் தண்ணீருக்காக. லாரி தண்ணீர் ஒரு குடம் பத்து ரூபாய் வரைக்கும் விற்கிறார்கள்.

கேஸ் சிலிண்டர் விலை ஒவ்வொரு நாளும் ஏறிக்கொண்டே இருக்கிறது. கேஸ் சிலிண்டருக்கு மானியத்தை உங்கள் வங்கிக் கணக்கிலேயே போடுகிறேன் என்று மோடிசொன்னார். ஆனால், மானியத்தை எல்லாம் நிறுத்திவிட்டார்கள். இன்னொரு பக்கம் பெட்ரோல், டீசல் விலையும் ஏறிக் கொண்டே இருக்கிறது.

அதிமுக தேர்தல் அறிக்கையில் ஸ்கூட்டி கொடுக்கிறேன் என்றார்களே, கொடுத்தார்களா? செல்போன் கொடுக்கிறேன் என்றார்களே, கொடுத்தார்களா? செட்டாப் பாக்ஸ் கொடுக்கிறேன் என்றார்களே, வந்ததா? இது எதுவும் வரவில்லை. அதுபோலதான் இலவச கேஸ் சிலிண்டரும், வாஷிங் மெஷினும் வராது. அவர்கள் ஆட்சிக்கும் வர மாட்டார்கள். இப்படி மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டுமென்ற எண்ணம் இல்லாத ஆட்சிதான் அதிமுக ஆட்சி. மோடி 15 லட்சம் வங்கிக் கணக்கில் போடுகிறேன் என்றார். மக்களை ஏமாற்றியே அவர்களுக்கு வழக்கம்.

நம் வீட்டுப் பிள்ளைகள் படிக்க வேண்டும் என்று பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகிய தலைவர்கள் போராடினார்கள். அடித்தட்டு மக்களுக்கும் மரியாதை கிடைக்க வேண்டுமென்று போராடியது திராவிட இயக்கம். நம் மொழியை, பண்பாட்டை டெல்லியில் அடகு வைக்கப்பட்டதை மீட்க வேண்டும்.

தமிழ்நாட்டில் ஐபிஎஸ் பெண் அதிகாரிக்கே பாதுகாப்பில்லை. மாநில அரசே கட்டவிழ்த்துவிடும் வன்முறைகளுக்கு இந்த அரசே உதாரணம். அரசாங்கத்தை எதிர்த்துப் பேசினால் தாக்கப்படுகிறார்கள், சுடப்படுகிறார்கள். இதையெல்லாம் புரிந்து நீங்கள் வாக்களிக்க வேண்டும்”.

இவ்வாறு கனிமொழி பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x