Published : 30 Mar 2021 06:53 PM
Last Updated : 30 Mar 2021 06:53 PM
ஐ.நா. சபையில் தமிழில் பேசியது என் வாழ்க்கையின் மகிழ்ச்சியான தருணம் என, பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் போட்டியிடும் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், மற்ற பாஜக வேட்பாளர்களை ஆதரித்து, இன்று (மார்ச் 30) தாராபுரம் - உடுமலை சாலையில், கவுண்டச்சி புதூர் ஊராட்சிக்கு உட்பட்ட மாருதி நகர் அருகே 68 ஏக்கரில் ஏற்படுத்தப்பட்டுள்ள பிரச்சாரக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். இதில், முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில், பிரதமர் மோடி பேசியதாவது:
"தமிழகத்தின் மிகப் பழமையான இந்த நகரத்திற்கு வந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். சுவாமி அகஸ்தீஸ்வரர் அருளாசி அளவிடற்கரியது. உலகம் முழுவதும் மக்கள் அந்தக் கோயிலுக்கு வந்து கொண்டிருக்கிறார்கள். இந்தப் பகுதி மிகச்சிறந்த மனிதர்களான திருப்பூர் குமரன், தீரன் சின்னமலை, தளபதி கொல்லன், காளிங்கராயர் போன்றவர்களைக் கொடுத்த பூமி.
தமிழகத்தின் கலாச்சாரத்தில் இந்தியா பெருமை கொள்கிறது. என்னுடைய வாழ்க்கையின் மகிழ்ச்சியான தருணமாக, ஐ.நா. சபையில் பேசியபோது ஒருசில தமிழ் வார்த்தைகளைக் கூறியதை நான் பெருமையாகக் கருதுகிறேன்.
இன்னும் ஒருசில நாட்களில் நாம் புதிய சட்டப்பேரவை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க இருக்கிறோம். தேசிய ஜனநாயகக் கூட்டணியின் இந்தக் குடும்பம் தமிழக மக்களுக்குச் சேவை செய்வதற்காக உங்கள் ஆசீர்வாதத்தை வேண்டி நிற்கிறது.
நாங்கள் ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்டத்தை அடிப்படையாக வைத்து உங்களிடம் வாக்கு கேட்கிறோம். எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் லட்சியத்தால் உத்வேகப்படுத்தப்பட்டு, இங்கிருக்கும் விவசாயிகள், பெண்கள், ஏழைகள் மற்றும் இந்தச் சமுதாயத்தின் அடித்தட்டு மக்களுக்குச் சேவை செய்வதற்காக அந்த உத்வேகத்தைப் பெற்றிருக்கிறோம்.
இந்தப் பகுதியின் மிகச்சிறந்த இணைப்புகளை மேம்படுத்துவதற்கும், இங்கு சிறந்த வாய்ப்புகளை உருவாக்குவதற்கும் நாங்கள் உங்கள் முன்னே நிற்கிறோம். இந்தப் பகுதி மக்கள் ஒரு ரயில்வே இணைப்புக்காக நெடுங்காலமாகக் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியும். நிச்சயம் மத்திய அரசு அந்தக் கோரிக்கையை கனிவுடன் பரிசீலிக்கும்.
நாங்கள் தமிழகத்தின் மொழி மற்றும் கலாச்சாரத்தைப் பாதுகாப்பதில் உறுதி கொண்டிருக்கிறோம். அதனால்தான் தொழில்நுட்பக் கல்வி, மருத்துவக் கல்வி ஆகியவற்றைத் தாய்மொழியில் பயிற்றுவிப்பதற்காக முயற்சிகளை எடுத்துக் கொண்டிருக்கிறோம்.
இங்கு இந்தக் கூட்டணிக்கு நீங்கள் அளிக்கும் வாக்கு நெடுங்காலமாகத் தீர்க்கப்படாமல் இருக்கக்கூடிய பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அளிக்கக்கூடிய வாக்காகப் பாருங்கள். தேவேந்திர குல வேளாளர்களின் கோரிக்கையை நிறைவேற்றித் தருவதில் நாங்கள் எவ்வளவு உறுதியாக இருந்தோம் என்பது உங்களுக்குத் தெரியும்".
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT