Published : 30 Mar 2021 06:29 PM
Last Updated : 30 Mar 2021 06:29 PM

எல்லாவற்றையும் தாங்கிக்கொண்டு மக்களுக்குக் கொடுப்பேன்; யாராலும் தடுக்க முடியாது: ஐடி ரெய்டு குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் பேச்சு

விராலிமலை

எல்லாவற்றையும் தாங்கிக்கொண்டு மக்களுக்குக் கொடுப்பதை யாராலும் தடுக்க முடியாது என்று ஐடி ரெய்டு குறித்து அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தின் முக்கியத் தொகுதிகளில் ஒன்றாக விராலிமலை அமைந்துள்ளது. அதிமுக சார்பில் அமைச்சர் சி.விஜயபாஸ்கரும், திமுக சார்பில் எம்.பழனியப்பனும் போட்டியிடுவதால் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.

தேர்தலுக்கு முன்னதாகவே தொகுதி மக்களுக்கு அரிசி, காய்கறி, மளிகைப் பொருட்கள் போன்ற நிவாரணப் பொருட்கள், வேட்டி, சேலை, பித்தளைப் பானையுடன் பொங்கல் பரிசுப் பொருட்கள் என ஏராளமான பொருட்களை அமைச்சர் விஜயபாஸ்கர் வழங்கினார். தேர்தல் சமயத்தில் வாக்காளர்களுக்குப் பரிசுப் பொருட்கள் வழங்க உள்ளதாகவும், அளவுக்கு அதிகமாகச் செலவு செய்து வருவதாகவும் வருமான வரித்துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து, விராலிமலை வடக்கு ஆசாரி தெருவில் உள்ள மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் ஆதரவாளரான வீரபாண்டியனின் அடுக்குமாடி வீட்டில் மார்ச் 26-ம் தேதி வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில் பல லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும், அமைச்சரின் சகோதரர் உதயகுமாருக்குச் சொந்தமான கல்லூரியில் இருந்து சுமார் 650 பித்தளைப் பானைகள் பறிமுதல் செய்யப்பட்டன. 9 ஏ நத்தம்பண்ணை ஊராட்சி அலுவலகத்தில் இருந்து அமைச்சர் விஜயபாஸ்கர் படங்களுடன் கூடிய மூட்டை மூட்டையாக பரிசுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்நிலையில் இதுகுறித்து மக்களிடம் பேசிய அமைச்சர் சி.விஜயபாஸ்கர், ''புகார் கொடுத்து கல்லூரியில் வருமான வரித்துறை சோதனை செய்து, மறுபடியும் புகார் கொடுத்து வீட்டில் சோதனை செய்து... எனக்கு எவ்வளவு தொந்தரவு கொடுத்தாலும் நான் அன்போடு சொல்கிறேன்.

விஜயபாஸ்கர் எல்லாவற்றையும் தாங்கிக்கொண்டு மக்களுக்குக் கொடுப்பதை யாராலும் தடுக்க முடியாது. மக்களுக்கு நன்மை செய்வதையும் யாராலும் தடுக்க தடுக்க முடியாது'' என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x