Published : 30 Mar 2021 05:50 PM
Last Updated : 30 Mar 2021 05:50 PM
திமுக, காங்கிரஸ் கட்சியின் கலாச்சாரம் என்பதே பெண்களை அவமானப்படுத்துவதாக உள்ளது என பிரதமர் மோடி விமர்சித்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் போட்டியிடும் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், மற்ற பாஜக, அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து, இன்று (மார்ச் 30) தாராபுரம் - உடுமலை சாலையில், கவுண்டச்சி புதூர் ஊராட்சிக்கு உட்பட்ட மாருதி நகர் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். இதில், முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில், பிரதமர் மோடி பேசியதாவது:
"ஒருபுறம் தேசிய ஜனநாயக கூட்டணி வளர்ச்சிக்கான திட்டங்களை உங்கள் முன்னால் வைக்கிறது. இன்னொருபுறம் திமுக - காங்கிரஸ் கூட்டணி அவர்களின் குடும்ப வாரிசு அரசியல் திட்டத்தை உங்கள் முன்பாக வைத்திருக்கிறது.
அந்த கட்சியில் கூட்டணியில் இருக்கக்கூடிய தலைவர்களின் பேச்சிலே அவர்களுக்கென்று ஒரு செயல்திட்டமோ, மக்களுக்கு நேர்மறையாக கொடுக்கக்கூடிய செய்திகளோ இல்லை. அவை எல்லாமே அடுத்தவர்களை அவமானப்படுத்துகின்ற அல்லது பொய் கூறுகின்ற செய்திகளாகவே இருந்து வருகின்றது.
இப்போது திமுக - காங்கிரஸ் புதிதாக ஒரு ஏவுகணை தாக்குதலை தொடங்கியிருக்கிறது. அந்த 2 ஜி ஏவுகணை என்பது ஒரேயொரு நோக்கத்திற்காக ஏவப்பட்டிருக்கிறது. அது தமிழகத்தின் பெண்களை இழிவுபடுத்த ஏவப்பட்ட ஏவுகணையாக இருக்கிறது.
சிறிது நாட்களுக்கு முன்பாக அந்த கட்சி தலைவர்கள் தமிழகத்தின் பெண் சக்தியை இழிவுபடுத்தும் ஏவுகணையை ஏவியிருக்கின்றனர். நான் இன்று தாராபுரத்தில் இருக்கிறேன். இந்த தாராபுரத்தின் ஆண்களும் பெண்களும் மகனும் மகளுமான நீங்கள் ஒருபோதும் உங்களுடைய லட்சியத்தை சமரசம் செய்துகொண்டதில்லை. எப்போதும் அநீதிக்கு எதிராகவே நீங்கள் வாழ்ந்துகொண்டிருக்கிறீர்கள், போராடிக்கொண்டிருக்கிறீர்கள்.
காங்கிரஸுக்கும் திமுகவுக்கும் நான் இந்த மேடையிலிருந்து சொல்கிறேன். உங்களுடைய தலைவர்களை கட்டுப்படுத்துங்கள். தமிழகத்தில் இருக்கக்கூடிய மக்கள், நீங்கள் பெண்களை இம்மாதிரி இழிவுபடுத்துவதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க மாட்டார்கள்.
இன்று காங்கிரஸ் மற்றும் திமுக கூட்டணியில் இருக்கக்கூடிய கட்சிகள், தமிழக முதல்வர் பழனிசாமியின் தாயாரை இழிவாக பேசியிருக்கிறார்கள். கடவுளே, ஒருவேளை இவர்கள் அரசுக்கு வந்துவிட்டால் தமிழக பெண்களுடைய நிலைமையை நினைத்துப் பாருங்கள். அவர்கள் இன்னும் பெண்களை அவமானப்படுத்துவார்கள், இழிவு செய்வார்கள்.
திமுக, காங்கிரஸ் கட்சியின் கலாச்சாரம் என்பதே பெண்களை அவமானப்படுத்தாக உள்ளது. சில நாட்களுக்கு முன்பு திமுகவின் திண்டுக்கல் ஐ.லியோனி பெண்கள் குறித்து அருவருக்கத்தக்க சில வார்த்தைகளை பேசியிருந்தார். திமுக ஒருபோதும் அவரை தடுக்கவில்லை.
திமுகவின் இளவரசர் அக்கட்சியில் இருக்கக்கூடிய பல்வேறு மூத்த தலைவர்களையெல்லாம் ஓரம்கட்டிவிட்டு இன்று நடுநாயகமாக இருக்கின்ற அவரும் அருவருக்கத்தக்க வகையில் பெண்களை பற்றி பேசியிருக்கிறார். ஆனால், திமுக ஒருபோதும் இவர்களை தடுக்கவில்லை.
1989, மார்ச் 25-ம் தேதியை மறந்துவிடாதீர்கள். ஜெயலலிதாவை அன்று சட்டப்பேரவையில் திமுக எப்படி நடத்தியது என்பதை மறந்துவிடக்கூடாது. திமுகவும் காங்கிரஸும் ஒருபோதும் பெண்களுடைய வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்க போவதில்லை.
அவர்களுடைய ஆட்சிக்காலத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் எப்போதும் அதிகரித்துக்கொண்டே இருந்தது. அவர்களுடைய உள்ளூர் தலைவர்கள் அனைவரும் அமைதிக்கு எதிராகவே இருந்து வந்துள்ளனர்.
இவர்களின் நட்பு கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் மேற்குவங்கத்தில் சில நாட்களுக்கு முன்பு சோனா மாலிக் என்ற வயதான பெண்மணியை தாக்கிய நிலையில் அவர் உயிரிழந்திருக்கிறார். அதற்கு முன்பும் அவர் தாக்கப்பட்டதை நாம் ஊடகங்களில் பார்த்தோம். பெண்களை அவமானப்படுத்துவதில் திரிணாமுல் காங்கிரஸும் திமுக, காங்கிரஸ் கட்சிகளைப் போலவே உள்ளது. இவர்களுடைய நட்பு, கூட்டணி என்பது எப்போதும் பெண்களுக்கு எதிராகவே உள்ளது.
தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள அத்தனை பேரும் மிகச்சிறந்த பெண்மணிகளான ஆண்டாள், ஔவையாருடைய லட்சியத்தால் உத்வேகம் பெற்றிருக்கிறோம். இந்த சமுதாயத்தின் வளர்ச்சி என்பது பெண்களுடைய வளர்ச்சி இல்லாமல் இல்லை என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.
அதனால்தான் எங்களின் அத்தனை திட்டங்களும் பெண்களை வலிமைப்படுத்தும் வகையில் அமைக்கிறோம். தூய்மை பாரதம் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட கழிப்பிடங்கள் பெண்களுக்கு மிக உதவிகரமாக இருந்து வந்துள்ளன. தமிழகத்தில் மட்டும் 32 லட்சம் பெண்களுக்கு உஜ்வாலா திட்டத்தின்கீழ் சமையல் எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டிருக்கிறது.
பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின்கீழ் கிராமப்புறங்களில் 3 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. நகர்ப்புறங்களில் 3.8 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. இந்த வீடுகள் எல்லாம் பெண்கள் பெயரில் இருக்க வேண்டும் என நாங்கள் ஊக்கப்படுத்துகிறோம். இது எதற்காக என்றால், பெண்களின் மரியாதையை, வளர்ச்சியை மேம்படுத்தும் என நாங்கள் நம்புகிறோம். பிரதம மந்திரி மாத்ரூ வந்தனா யோஜனா திட்டத்தின்கீழ், 10 லட்சம் மகளிர் கர்ப்ப கால நிதியுதவி பெற்றுள்ளனர்".
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT