Published : 30 Mar 2021 03:24 PM
Last Updated : 30 Mar 2021 03:24 PM
தாராபுரம் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி வெற்றி வேல்... வீர வேல்... என முழக்கமிட்டார். முன்னதாகப் பிரதமருக்கு தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் வேல் பரிசளித்தார்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தனித் தொகுதியில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் போட்டியிடுகிறார். அவரையும் மற்ற பாஜக வேட்பாளர்களையும் ஆதரித்து, பிரதமர் நரேந்திர மோடி இன்று (மார்ச் 30) தாராபுரம் - உடுமலை சாலையில் பிரச்சாரம் செய்தார். இந்த பிரச்சாரக் கூட்டம் கவுண்டச்சி புதூர் ஊராட்சிக்கு உட்பட்ட மாருதி நகர் அருகே 68 ஏக்கரில் ஏற்படுத்தப்பட்டிருந்தது. இதில், பாஜக வேட்பாளர்களுடன் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசும்போது, ''கடுமையான பணிகளுக்கு இடையே தமிழகத்திற்குப் பிரச்சாரம் செய்ய வந்த பிரதமர் மோடிக்கு நன்றி. உங்களின் முழு ஆதரவுடன் தமிழகத்தில் நம் கூட்டணி அமோக வெற்றியை பெறும். அந்த வெற்றியின் மூலம் ஜெயலலிதா ஆட்சி மீண்டும் தமிழகத்தில் அமையும்'' என்று பேசினார்.
முதல்வர் பழனிசாமி கூறும்போது, ''தமிழகத்தின் மீது பேரன்பு கொண்டவர் பிரதமர் மோடி. 234 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வேட்பாளர்கள் வெற்றிவாகை சூடுவர்'' என்று தெரிவித்தார்.
அதைத் தொடர்ந்து பிரதமர் மோடியைப் பேச வருமாறு, ''இன்று உலகத்தையே காக்கும் ஒப்பற்ற மைந்தன் நம் ஊருக்கு வந்திருக்கிறார். கங்கையின் மைந்தன் அமராவதி மண்ணுக்கு வந்துள்ளார்'' என்றுகூறி அழைப்பு விடுக்கப்பட்டது. அப்போது பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் பிரதமர் மோடிக்கு வேல் பரிசளித்தார்.
பிரதமர் மோடி பேசச் செல்லும்போது, 'வெற்றி வேல்', 'வீர வீர வீர வேல்' என்று கோஷங்கள் எழுப்பப்பட்டன. பிரதமர் மேடைக்கு அருகில் சென்றதும் பொதுமக்கள் ஆரவாரம் செய்தனர். தொடர்ந்து பேசத் தொடங்கிய மோடி, 'வெற்றி வேல்... வீர வேல்' என்று முழக்கமிட்டார். பாஜக தொண்டர்களும் முழக்கமிட்டனர்.
'வெற்றி வேல்... வெற்றி வேல்... வெற்றி வெற்றி வெற்றி வேல்' என்று கூறி, தனது உரையைத் தொடங்கினார்.
பாஜகவின் வேல்யாத்திரை கடந்த ஆண்டு நவம்பர் 6-ம் தேதி திருத்தணியில் தொடங்கியது. அப்போது தொடர்ந்து வெற்றி வேல்... வீர வேல்... என முழக்கங்கள் எழுப்பப்பட்டன. பல்வேறு மாவட்டங்கள் வழியாக நடத்தப்பட்ட இந்த யாத்திரை திருச்செந்தூரில் டிசம்பர் 7-ம் தேதி நிறைவு பெற்றது. நிறைவு விழாவில் மத்தியப் பிரதேச மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் உள்ளிட்ட முக்கிய பாஜக நிர்வாகிகள் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT