Published : 30 Mar 2021 02:41 PM
Last Updated : 30 Mar 2021 02:41 PM
ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கிய பெருமை பிரதமர் மோடியையே சாரும் என, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் போட்டியிடும் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், மற்ற பாஜக வேட்பாளர்களை ஆதரித்து, இன்று (மார்ச் 30) தாராபுரம் - உடுமலை சாலையில், கவுண்டச்சி புதூர் ஊராட்சிக்கு உட்பட்ட மாருதி நகர் அருகே 68 ஏக்கரில் ஏற்படுத்தப்பட்டுள்ள பிரச்சாரக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். இதில், முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
இந்நிகழ்ச்சியில் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:
"கடுமையான பணிகளுக்கு இடையே தமிழகத்திற்கு பிரச்சாரத்திற்கு வந்ததற்கு பிரதமர் மோடிக்கு நன்றி. உங்களின் முழு ஆதரவுடன் தமிழகத்தில் நம் கூட்டணி அமோக வெற்றியை பெறும். அந்த வெற்றியின் மூலம் ஜெயலலிதா ஆட்சி மீண்டும் தமிழகத்தில் அமையும்.
சுதந்திரத்துக்குப் பின் இந்தியாவை சீர்குலைத்த அரசு காங்கிரஸ் அரசு. நமது நாட்டை பல ஆண்டுகள் பின்னோக்கி கொண்டு சென்றுவிட்டது. எவ்வித வளர்ச்சிப் பணிகளும் இல்லாமல், இந்தியாவை மிகுந்த இருளுக்குள் தள்ளிய கட்சி காங்கிரஸ். காங்கிரஸுடன் சேர்ந்து ஆட்சி செய்தது திமுக. காங்கிரஸும் திமுகவும் சேர்ந்து கிட்டத்தட்ட 16 ஆண்டுகள் ஆண்டன. ஆனால், அவ்விரு கட்சிகளும் இந்தியாவுக்கு எவ்வித பிரம்மாண்டமான திட்டங்களையும் கொண்டு வந்து சேர்க்கவில்லை. தமிழகத்துக்கும் எந்த திட்டத்தையும் கொண்டு வந்து சேர்க்கவில்லை.
ஆனால், பாஜக ஆட்சி, தமிழகத்துக்கு தேவையான நிதியை தாராளமாக கொடுக்கிறது. ஒரு மருத்துவக்கல்லூரிக்கே அனுமதி பெற காங்கிரஸ் ஆட்சியில் நாங்கள் பட்டபாடு எங்களுக்குத்தான் தெரியும். ஆனால், ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி தந்தது பாஜக அரசு. அதற்காக பிரதமர் மோடிக்கு கோடானுகோடி நன்றி.
என்னை 'ஜல்லிக்கட்டு நாயகன்' என்கின்றனர். காங்கிரஸ் - திமுக ஆட்சியில் இருந்த போதுதான் காளை, விலங்குகள் பட்டியலில் சேர்க்கப்பட்டது. அதன்காரணமாகத்தான் நீதிமன்றம் ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்தது. மெரினா கடற்கரையில் 15 லட்சம் மக்கள் போராட்டம் நடத்தினார்கள். அப்போது, நான் தமிழக முதல்வராக இருந்தேன். பிரதமர் மோடியை சென்று சந்தித்தேன். இதுகுறித்து எடுத்துச் சொல்லி தடையை நீக்க வலியுறுத்தினேன். 24 மணிநேரத்தில் 4 துறைகளுக்கான அரசாணையை தந்து, ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கிய பெருமை பிரதமர் மோடியையே சாரும்.
ஜெயலலிதா நல்ல பல திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்த முதல்வர். அவை தொலைநோக்கு திட்டங்கள். ஜெயலலிதா நல்லாட்சியை தந்தார். 20 கிலோ அரிசியை இலவசமாக கொடுத்தார். வீடற்றவர்களுக்கு தரமான கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்படும் என்ற ஜெயலலிதாவின் வாக்குக்கு ஏற்ப இதுவரை 6 லட்சம் வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன. 2023-ம் ஆண்டுக்குள், வீடற்ற அனைவருக்கும் மத்திய அரசின் துணையுடன் வீடுகள் கட்டித்தரப்படும்.
சமூகப் பாதுகாப்பு திட்டங்களை ஜெயலலிதா செயல்படுத்தினார். திருமண உதவித்தொகை ரூ.25 ஆயிரம் முதல் ரூ. 50 ஆயிரம் வரையிலும், 4 கிராம் தங்கமும் வழங்கப்படுகிறது. இப்போது, 8 கிராம் தங்கமாக உயர்த்தி வழங்கப்படுகிறது.
2016-ல் ஜெயலலிதா சொன்ன அத்தனை வாக்குறுதிகளையும் நலத்திட்டங்களாக கொடுத்துக்கொண்டிருக்கிறோம். 2006-ல் திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்ட திட்டங்களை அக்கட்சி செயல்படுத்தவில்லை. 2 ஏக்கர் நிலம் தருவதாக சொன்னார்களே, தந்தார்களா? அதனை அப்போதைய முதல்வர் கருணாநிதியிடம் கேட்டபோது கோபமடைந்தார்.
திருமண உதவித்தொகை ரூ.35 ஆயிரமாக உயர்த்தி வழங்குவோம் என அறிவித்துள்ளோம். ரூ.50 ஆயிரம் உதவித்தொகை 60 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.
அதிமுக, பாஜக, பாமக, தமாகா என, நாடு போற்றும் நல்ல கூட்டணியை அமைத்துள்ளோம். எங்களை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்யுங்கள்".
இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT