Published : 30 Mar 2021 02:36 PM
Last Updated : 30 Mar 2021 02:36 PM

50 ஆண்டுகால அதிமுக, திமுக ஆட்சியில் தொலைநோக்குத் திட்டங்களே இல்லை: சீமான்

சென்னை

50 ஆண்டுகால அதிமுக, திமுக ஆட்சியில் தொலைநோக்குத் திட்டங்களே இல்லை என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், திமுக, அதிமுக உள்ளிட்ட பிரதானக் கட்சிகளோடு, அமமுக, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகளும் கூட்டணி அமைத்துத்தான் போட்டியிடுகின்றன. ஆனால் சீமானின் நாம் தமிழர் கட்சி, தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்துக் களம் காண்கிறது.

சென்னை, போரூரில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அக்கட்சியின் வேட்பாளருக்காக இன்று பிரச்சாரம் செய்தார்.

அப்போது அவர் பேசுகையில், ''தமிழகத்தை மாறி மாறி ஆட்சி செய்த திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் இலவசங்களைக் கொடுத்தே மக்களை அடிமையாக்கி வைத்திருக்கின்றன. 10 ஆண்டுகளுக்கு அல்லது 20, 25 ஆண்டுகளுக்கு இந்தத் திட்டம். இதனால் இது சரியாகும் என்று எந்தத் தொலைநோக்குத் திட்டமாவது அதிமுக, திமுக ஆட்சியில் வந்திருக்கிறதா?

இதற்குப் பதிலாக பணம், சலுகை, மானியம், இலவசம்தான் அறிவிக்கப்படுகிறது. இந்த நான்கைத் தவிர ஐம்பதாண்டுகளில் ஏதாவது திட்டம் இருக்கிறதா? ஒன்றுகூட இல்லை. வீட்டுக்கு வீடு மழைநீர் சேகரிக்க வேண்டும் என்கிறீர்கள், சரி வீட்டில் சேகரிக்கிறோம். நாட்டில் எவ்வளவு நீரைச் சேமிக்கிறீர்கள்?

வெறும் 150 டிஎம்சி தண்ணீருக்குக் கர்நாடகாவிடம் கையேந்தி நிற்கிறோம். இறைவன் அருளால் தமிழகத்துக்கு 4 ஆயிரம் டிஎம்சி மழை நீர் கிடைக்கிறது. இதில் 1,500 டிஎம்சி தண்ணீர் மட்டும்தான் சேமிக்கப்படுகிறது. மீதமுள்ள நீர் கடலில் கலக்கிறது. அந்த நீரைக் கூடுதலாகச் சேமிக்க, இந்த நாட்டில் என்ன திட்டம் இருக்கிறது'' என்று சீமான் கேள்வி எழுப்பினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x