Published : 30 Mar 2021 02:11 PM
Last Updated : 30 Mar 2021 02:11 PM
தேர்தல் களத்தில் அதிருப்தியில் உள்ள அதிமுகவினர் போட்டி வேட்பாளர்களாகக் களத்தில் குதிப்பதால் அதிர்ச்சியடைந்த அதிமுக தலைமை முன்னாள் எம்.பி. உள்ளிட்ட 6 பேரை அதிரடியாகக் கட்சியிலிருந்து நீக்கியுள்ளது.
இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் ஆகிய இருவரும் இன்று கூட்டாக வெளியிட்ட அறிவிப்பு:
“கட்சியின் கொள்கை, குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கட்சியின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கட்சிக் கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கே களங்கமும், அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைப் பொதுத்தேர்தலில் கட்சியின் அதிகாரபூர்வ வேட்பாளர்கள் மற்றும் கூட்டணிக் கட்சியின் வேட்பாளரை எதிர்த்துத் தேர்தல் பணியாற்றி வந்த காரணத்தாலும் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் எம்.பி. ஏழுமலை (மேல்மலையனூர் தெற்கு ஒன்றியச் செயலாளர்), திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த ஈஸ்வரி சாமி (பொள்ளாச்சி தெற்கு கிழக்கு ஒன்றிய துணைச் செயலாளர்), நாகராஜ் (குடிமங்கலம் ஒன்றிய எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர்) ரங்கசாமி ஆத்துகிணத்துப்பட்டி ஊராட்சி ஒன்றியச் செயலாளர்), கமல்ஹாசன் (சோமவாரப்பட்டி குடிமங்கலம் ஒன்றியம்), ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த ஸ்ரீதர் (கண்டிகை கிளை செயலாளர்) ஆகியோர் இன்று முதல் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்கள்.
கட்சி உடன்பிறப்புகள் யாரும் இவர்களுடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என்று கேட்டுக் கொள்கிறோம்”.
இவ்வாறு ஓபிஎஸ்- ஈபிஎஸ் தெரிவித்துள்ளனர்.
அண்மையில், பெருந்துறை அதிமுக வேட்பாளரை எதிர்த்து சுயேச்சையாக வேட்பு மனுத் தாக்கல் செய்த காரணத்துக்காக, ஈரோடு புறநகர் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம், கட்சி வேட்பாளரை எதிர்த்து சுயேச்சையாகப் போட்டியிட வேட்புமனுத் தாக்கல் செய்த தற்போதைய எம்எல்ஏ சந்திரசேகரனைக் கட்சியிலிருந்து அதிமுக நீக்கியது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT