Published : 30 Mar 2021 03:14 AM
Last Updated : 30 Mar 2021 03:14 AM
கரோனா ஏற்படுத்திய பொருளாதார இழப்பால் தேர்தல் பிரச்சாரத்தில் சுயேச்சை வேட்பாளர்கள் ஆர்வம் காட்டாமல் இருக்கின்றனர். பெட்ரோல், டீசல் விலை உயர்வால் வாகனச் செலவு அதிகமாகிவிட்டதும் காரணமாகக் கூறப்படுகிறது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்.6-ம் தேதி நடைபெறுகிறது. தேர்தல் பிரச்சாரம் முடிவதற்கு இன்னும் 5 நாட்களே இருக்கின்றன. ஒவ்வொரு தேர்தலிலும் பிரதான கட்சிகளின் வேட்பாளர்களைவிட சுயேச்சை வேட்பாளர்களின் எண்ணிக்கையும், அவர்களது பிரச்சாரமும் மும்முரமாக இருக்கும். ஆனால், இத்தேர்தலில் நிலைமை தலைகீழாக இருக்கிறது.
இத்தேர்தலில், அதிமுக, திமுக, மக்கள் நீதி மய்யம், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், நாம் தமிழர் கட்சி போன்ற கட்சிகளின் வேட்பாளர்களுடன் சுயேச்சை வேட்பாளர்களும் கணிசமான எண்ணிக்கையில் போட்டியிடுகின்றனர்.
பொதுவாக பிரதான அரசியல் கட்சிகளுக்கு உதவுவதற்காக (பூத் ஏஜென்ட்) பலர் சுயேச்சை வேட்பாளர்களாகப் போட்டியிடுவதுண்டு. சிலர் பெரிய கட்சிகளிடம் பணத்தைப் பெற்றுக் கொண்டு கடைசி நேரத்தில் வாபஸ் பெறுவதும் நடக்கத்தான் செய்கிறது.
ஒரு கட்சியில் சீட் கிடைக்காமல் சுயேச்சையாகப் போட்டியிட்டு வென்றவர்களும் இருக்கிறார்கள். கடந்த தேர்தல்களில் சுயேச்சை வேட்பாளர்கள் வீடு, வீடாக சென்று துண்டுப்பிரசுரம் வழங்கியும், இருசக்கர வாகனம், ஆட்டோ, திறந்த வேன் என்பன போன்ற வாகனங்களில் பிரச்சாரம் செய்ததைக் காண முடிந்தது. ஆனால் இத்தேர்தலில் சுயேச்சை வேட்பாளர்கள் பிரச்சாரத்தைக் காண்பதே அரிதாக இருக்கிறது. தமிழகம் முழுவதும் அங்கொன்றும் இங்கொன்றுமாகத்தான் சுயேச்சை வேட்பாளர்களின் பிரச்சாரம் நடைபெறுகிறது.
இதுகுறித்து சென்னை மாதவரம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர் ஏ.ஜெ.சக்திவேல் (வயது 48) கூறியதாவது:-
திராவிடக் கட்சிகளுக்கு மாற்று வேண்டும் என்றும், பணம் வாங்கிக் கொண்டு வாக்களிக்கக்கூடாது என்றும் வீடு, வீடாகச் சென்று பிரச்சாரம் செய்கிறோம். கரோனாவால் பணக் கஷ்டம் ஒருபுறம், பெட்ரோல், டீசல் விலை உயர்வால் வாகனச் செலவு மிகவும் அதிகமாகவிட்டது. ஆட்டோ போன்ற வாகனத்தில் பிரச்சாரம் செய்தால் தினமும் ரூ.10 ஆயிரம் வரை செலவாகிறது. அதனால்தான் பெரும்பாலும் நடந்து சென்றே பிரச்சாரம் செய்கிறேன்.
பெரிய கட்சிகள் மக்களுக்கு பணம் கொடுத்து பிரச்சாரத்துக்கு அழைத்துச் செல்கின்றனர். பணம் கொடுத்தால்தான் ஓட்டுப்போடுவோம் என்று பலரும் வெளிப்படையாகவே கூறுவது வேதனையாக இருக்கிறது.மாற்றம் தேவை என்ற கருத்தை வெகுசிலரே கூறுகின்றனர். இருப்பினும், வெற்றி, தோல்வியைப் பற்றி கவலைப்படாமல் வீதி, வீதியாகச் சென்று மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம். என்னைப் போலவே ஏராளமான சுயேச்சைகளின் நிலையும் இதுதான் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT