Published : 30 Mar 2021 03:14 AM
Last Updated : 30 Mar 2021 03:14 AM

எம்ஜிஆர், ஜெயலலிதா சின்னம் என நம்ப வேண்டாம்; அதிமுக இப்போது துரோகிகள் கையில் உள்ளது: போடியில் டிடிவி.தினகரன் பிரச்சாரம்

போடியில் நடந்த அமமுக தேர்தல் பிரச்சாரத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் பேசினார்.

எம்ஜிஆர், ஜெயலலிதா சின்னம் என நம்ப வேண்டாம் என போடியில் நடந்த பிரச்சாரத்தில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி. தினகரன் பேசினார்.

தேனி மாவட்டம், போடி தொகுதி அமமுக வேட்பாளர் முத்துச்சாமியை ஆதரித்து அவர் பேசியதாவது: ஜெயலலிதா பெயரிலோ, அவர் படத்தைக் கொடியில் வைத்தோ கட்சி தொடங்குவோம் என்று நாங்கள் நினைக்கவே இல்லை. இதற்குக் காரணம் ஓ.பன்னீர்செல்வம்தான். முதல்வராக சசிகலா இருக்கட்டும் என்று கையெழுத்துப் போட்டுவிட்டு, 2 நாள் கழித்து தர்மயுத்தம் என்று தியானம் செய்தார். அவருக்குப் பல நாக்குகள் உள்ளன. அவை மாறி மாறிப் பேசும்.

தற்போது தேர்தல் வந்ததும், அவருக்கு ஞானோதயம் வந்து, சசிகலா மீது மதிப்பு மரியாதை உண்டு என்று பேசி வருகிறார்.

மாலை, ஆரத்தி, திருஷ்டி பூசணி எதுவும் வேண்டாம். கரோனா குறித்து பயமாக இருக்கிறது. ஆனால், நான் கரோனாவை தவிர யாருக்கும் பயப்பட மாட்டேன். நான் ஓ.பன்னீர்செல்வத்தை சேர்மன் என்றுதான் அழைப்பேன். அவர் மீது இப்போதும் எனக்கு மரியாதை உண்டு.

இன்னாரு நண்பர் தகர தமிழ்ச்செல்வன். இவர் எதற்கு அமமுகவுக்கு வந்தார். எதற்காக திமுகவுக்குச் சென்றார் என்று அவருக்கும் தெரியவில்லை. நமக்கும் தெரியவில்லை.

எம்ஜிஆர், ஜெயலலிதா யாரை தமிழினத் துரோகிகள் என்று அழைத்தார்களோ, அவர்களிடமே சென்று தற்போது வேட்பாளராக இருக்கிறார். அம்மா கட்சியை அமமுக கண்டிப்பாக மீட்டெடுக்கும். எம்ஜிஆர் சின்னம், ஜெயலலிதா சின்னம் என்று அதிமுகவை நம்பி வாக்களித்து விடாதீர்கள். இப்போது அக்கட்சி துரோகிகள் கையில் உள்ளது.

தீயசக்திக்கு ஓட்டு போடாதீர்கள். பண மூட்டையுடன் வரும் அதிமுகவுக்கும் வாக்களிக்காதீர்கள். கருத்துக் கணிப்பு என்ற பெயரில் கருத்துகள் திணிக்கப்படுகின்றன. பொதுமக்கள் உங்களுக்குத்தான் வாக்களிப்பார்கள் என்றால், ஏன் காவல்துறைக்கு பணம் கொடுத்து ஓட்டு போடச் சொல்ல வேண்டும். கருணாநிதி சொந்த ஊரில் இருந்து கொண்டு வந்த பணமா இது?

நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் மக்கள் தொகை கணக்கெடுப்பு, கருத்துக் கேட்பு அடிப்படையில் உள்ஒதுக்கீட்டை அமல்படுத்துவோம். அனைத்து சமுதாயத்தினருக்கும் சம உரிமை, அங்கீகாரம் கிடைக்க வழிவகை செய்வோம் இவ்வாறு டிடிவி.தினகரன் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x