Published : 25 Nov 2015 03:19 PM
Last Updated : 25 Nov 2015 03:19 PM

வசந்தகுமாரின் பதவி பறிப்பைக் கண்டித்து இளங்கோவனுக்கு எதிராக திரண்ட காங்கிரஸார்

தமிழக அளவில் காங்கிரஸ் கட்சி வலுவாக உள்ள ஒரே மாவட்டம் கன்னியாகுமரி. அக்கட்சியில் இருந்து தமாகா பிரிந்துள்ள நிலையில், இப்போது மீண்டும் இளங்கோவனுக்கு எதிராக கண்டன குரல்கள் எழுந்துள்ளன.

தமிழகத்தில் கடந்த மக்களவைத் தேர்தலின் போது தமிழகம் முழுவதும் 37 தொகுதிகளை அதிமுக வென்றாலும், நாகர்கோவில் தொகுதியில் அக்கட்சிக்கு மூன்றாவது இடமே கிடைத்தது. பாஜக வென்றது. 2-வது இடத்தை காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமார் பெற்றார்.

அந்தளவுக்கு காங்கிரஸ் கட்சி குமரி மாவட்டத்தில் வலுவாக இருந்த நிலையில், தமாகா(மூ) தொடங்கியதும், ஏராளமானோர் காங்கிரஸில் இருந்து தாவினர். குறிப்பாக கிள்ளியூர் எம்எல்ஏ ஜான் ஜேக்கப் தமாகாவுக்கு தாவினார். இக்காரணங்களால் சுணக்க நிலையில் இருந்த கன்னியாகுமரி மாவட்ட காங்கிரஸ் கட்சி அடுத்த பிரச்சினையில் சிக்கியுள்ளது.

எதிர்ப்பு கூட்டம்

வசந்தகுமாரிடம் இருந்த வர்த்தக காங்கிரஸ் தலைவர் பொறுப்பு நேற்று முன்தினம் பறிக்கப்பட்டது. மாநில துணைத்தலைவர் பதவியில் மட்டும் அவர் நீடிக்கிறார். இதை எதிர்த்து நேற்று நாகர்கோவிலில் உள்ள வர்த்தக காங்கிரஸ் அலுவலகத்தில் வர்த்தக காங்கிரஸ் அணியினர் ஏராளமானோர் குவிந்தனர். அக்கூட்டத்துக்கு குமரி முருகேசன் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர்கள் சிவகுமார், ஜான்சன், மீனவரணி செயலாளர் ஆரோக்கிய ராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர். காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ பாலையா பேசினார்.

இளங்கோவனுக்கு கண்டனம்

அவர் கூறும்போது, `தமிழக வர்த்தக காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து வசந்தகுமாரை பதவி நீக்க, மாநில காங்கிரஸ் தலைவர் இளங்கோவனுக்கு அதிகாரம் இல்லை. இதை நாங்கள் ஏற்க மாட்டோம். இளங்கோவன் தன்னிச்சையாக இந்த முடிவை எடுத்துள்ளார். இளங்கோவன் குற்றவழக்கில் கையெழுத்திட்டு வருபவர். அவர் தலைமையை நாங்கள் ஏற்கவில்லை. இளங்கோவனை பதவி நீக்கம் செய்ய வேண்டும்’ என்றார்.

படம் கிழிப்பு

கூட்டம் முடிந்ததும், அவர்கள் இளங்கோவனைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். அங்கிருந்த பேனர்களில் இளங்கோவனின் படத்தை கிழித்தனர். இத்தகவல் அறிந்த வசந்தகுமார் இதுபோன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது என தொண்டர்களை எச்சரித்து, சமாதானப்படுத்தினார்.

சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், காங்கிரஸ் கட்சி வலுவாக உள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் அதன் தலைமைக்கு எதிரான கோஷம் அக்கட்சிக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என கட்சியின் மூத்த நிர்வாகிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x