Published : 30 Mar 2021 03:15 AM
Last Updated : 30 Mar 2021 03:15 AM
நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த உடுமலைப்பேட்டை நகராட்சி, திருப்பூர் மாவட்டத்திலுள்ள 8 தொகுதிகளில் முக்கியத்துவம் வாய்ந்தது. 33 வார்டுகளை கொண்டது உடுமலை நகராட்சி. உடுமலை சட்டப்பேரவைத் தொகுதியில் உடுமலை ஒன்றியத்துக்கு உட்பட்ட சின்னவீரம்பட்டி, பெரியகோட்டை, குறிஞ்சேரி, குடிமங்கலம் ஒன்றியத்துக்கு உட்பட்ட கொசவம்பாளையம், மூங்கில்தொழுவு, ஆமந்தக்கடவு, குப்பம்பாளையம், பெரியபட்டி, பூளவாடி, ஆத்துக்கிணத்துப்பட்டி, கொண்டம்பட்டி, குடிமங்கலம், இலுப்பநகரம், அனிக்கடவு, வாகத்தொழுவு, வீதம்பட்டி, விருகல்பட்டி, சோமவாரப்பட்டி, வடுகபாளையம், கோட்டமங்கலம், பொன்னேரி, புக்குளம், தொட்டம்பட்டி, கொங்கல்நகரம், புதுப்பாளையம், பண்ணைக்கிணர் உள்ளிட்ட 23 ஊராட்சிகள் இடம்பெற்றுள்ளன.
தொகுதி மறுசீரமைப்புக்குப் பின், கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட சோளபாளையம், நல்லாம்பள்ளி, கோமங்கலம், எஸ்.மலையாண்டிபட்டினம், கோலார்பட்டி, கஞ்சம்பட்டி, தென்குமாரபாளையம், கூலநாய்க்கன்பட்டி, கோமங்கலம்புதூர், சிஞ்சுவாடி, விரல்பட்டி, தாளவாய்ப்பாளையம், தொண்டாமுத்தூர், எஸ்.பொன்னாபுரம், ஊஞ்சவேலாம்பட்டி, ஜாமீன்கோட்டம்பட்டி, கள்ளிப்பட்டி, கொண்டகவுண்டன்பாளையம், மூலனூர், ஆவலப்பம்பட்டி, கொல்லம்பட்டி, ஏ.நாகூர், பூசாரிப்பட்டி, போலிகவுண்டன்பாளையம், ஏரிப்பட்டி, திப்பம்பட்டி, மக்கினாம்பட்டி, நாட்டுக்கல்பாளையம் மற்றும் பழையூர் உள்ளிட்ட 29 ஊராட்சிகளும், ஜமீன் ஊத்துக்குளி, சின்னம்பாளையம், குளேஸ்வரன்பட்டி, சமத்தூர் ஆகிய 4 பேரூராட்சிகளும் உடுமலை சட்டப்பேரவைத் தொகுதியுடன் இணைக்கப்பட்டுள்ளன.
விவசாயம், கால்நடை வளர்ப்பு, கோழிப்பண்ணை, காற்றாலை, பஞ்சாலைகள், தென்னை வளர்ப்பு, தென்னை நார் தொழிற்சாலைகள் நிறைந்த பகுதியாக உள்ளது. கொங்கு வேளாளர்கள் 25 சதவீதம், தாழ்த்தப்பட்டோர் 17.5 சதவீதம், கம்மவார், நாயுடு 10 சதவீதம், செட்டியார்கள் 4.5 சதவீதம், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் அடங்கிய சிறுபான்மையினர் 11 சதவீதம் பேர் உள்ளனர்.
கோரிக்கைகள்
63 ஆண்டுகளாக கிடப்பில் கிடக்கும் ஆனைமலையாறு - நல்லாறு அணை திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும். அரசு பாலிடெக்னிக், அரசு பொறியியல் கல்லூரி உருவாக்கப்பட வேண்டும். அனைத்து விரிவாக்கப் பகுதிகளுக்கும் திருமூர்த்தி அணை கூட்டுக் குடிநீர் கிடைக்க வேண்டும். நூற்றாண்டுகளை கடந்த உடுமலை நகராட்சியுடன், அருகாமை ஊராட்சிகளை இணைத்து பேரூராட்சிக்கு இணையான தரத்துக்கு கொண்டு செல்ல வேண்டும். பல ஆண்டுகளாக நிலவும் போக்குவரத்து பிரச்சினைக்கு ரவுண்டானா அமைக்க வேண்டும், ஆக்கிரமிப்பு அகற்றுவது, இணைப்புச் சாலை அமைப்பது, நகரச் சாலைகள் விரிவாக்கம் செய்வதுடன், கிராம சாலைகள் பராமரிப்பு, ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கியும் பணிகள் முழுமையடையாமல் இருக்கும் மாதிரி நூலகத்தையும் மேம்படுத்த வேண்டும்.
பழமை வாய்ந்த குட்டைத்திடலை மீண்டும் தூர்வாரி, மழை நீர் சேகரிக்கும் குளமாக மாற்ற வேண்டும். நேதாஜி விளையாட்டு மைதானத்தில் உள் விளையாட்டரங்கம், சந்தை விரிவாக்கம், நகராட்சி பள்ளிகளை மேம்படுத்த வேண்டும். பொழுதுபோக்கு பூங்காக்களை முறையாக பராமரிக்க வேண்டும்.
பலம், பலவீனம் - வெற்றி யாருக்கு?
மீண்டும் போட்டியிடும் அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் கடந்த 5 ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்டுள்ள திட்டங்களை பட்டியிலிட்டு மக்களிடையே வாக்கு கேட்டு வருகிறார். இவரது பதவி காலத்தில் ஆனைமலையாறு - நல்லாறு அணை திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்காதது பிஏபி விவசாயிகளிடையேயும், நேதாஜி மைதானத்தில் உள் விளையாட்டரங்கம் அமைக்கப்படும் எனவும், அதற்கான ஆய்வு நடத்த உத்தரவிட்ட பின்னரும் நடவடிக்கை எடுக்காதது விளையாட்டு ஆர்வலர்களுக்கிடையேயும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. முதியோர் உதவித்தொகை, ஆடு, கோழி வளர்ப்பு திட்டத்தில் பலர் பயனடைந்திருப்பதால், அவர்களின் வாக்குகள் கிடைக்கும் என்று அதிமுகவினர் கணக்கு போட்டுள்ளனர்.
திமுகவை சேர்ந்தவருக்குதான் சீட் என உடன்பிறப்புகள் எண்ணிய நிலையில், கோஷ்டி பூசலால் யாரும் எதிர்பாராத வகையில் காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டது. தாராபுரத்தைச் சேர்ந்த வழக்கறிஞரும், காங்கிரஸ் புறநகர் மாவட்ட செயலாளருமான தென்னரசு போட்டியிடுகிறார். இவர், உடுமலைக்கு புதிய வரவு. மக்களிடையே அறிமுகம் இல்லாதவர். ஆனால், இவரது மனைவியின் சொந்த ஊர் உடுமலை என்பதால், தனக்கு புகுந்த வீடு எனக் கூறி வாக்கு கேட்டு வலம் வருகிறார். காங்கிரஸ் கட்சிக்கு வலுவான கட்டமைப்பு இல்லை. ஆனால் திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் கட்டமைப்பும் வலுவாக உள்ளதால், வெற்றி பெற்ற ஓராண்டில் ஆனைமலையாறு - நல்லாறு திட்ட பணிகள் தொடங்குவேன். இல்லாவிடில், அடுத்த நாளே பதவியை ராஜினாமா செய்துவிடுவேன் என்பது இவரது பிரச்சாரமாக இருந்து வருகிறது.
களம் காணும் வேட்பாளர்கள்
இதுவரை நடைபெற்ற தேர்தல்களில் அதிமுக 7 முறையும், திமுக 4 முறையும், காங்கிரஸ் 3 முறையும், சுயேட்சை வேட்பாளர் ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளனர். அதிமுக சார்பில் அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் மீண்டும் போட்டியிடுகிறார். திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் தென்னரசு, அமமுக சார்பில் பழனிசாமி, நாம் தமிழர் கட்சி சார்பில் பாபு ராஜேந்திரபிரசாத், மநீம சார்பில் நிதி மற்றும் சுயேச்சைகள் போட்டியிடுகின்றனர். அதிமுக - திமுக-காங் கூட்டணி இடையேதான் நேரடி போட்டி நிலவுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT