Published : 03 Nov 2015 05:57 PM
Last Updated : 03 Nov 2015 05:57 PM
திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்டுள்ள, 'நமக்கு நாமே விடியல் மீட்பு' பயணத்தை தமிழக உளவுப்பிரிவு போலீஸார் தீவிரமாக காண்காணித்து வருவதோடு, மக்கள் மன ஓட்டம் எப்படி உள்ளது என்பதையும் கண்காணித்து அரசுக்கு தகவல் அளித்து வருகின்றனர்.
திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் வரும் 2016 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக 'நமக்கு நாமே விடியல் மீட்பு' பயணம் மூலம் 234 தொகுதிகளில் பலதரப்பட்ட மக்களை சந்தித்து குறைகளைக் கேட்டறிந்து வருகிறார். மூன்று கட்ட சுற்றுப்பயணத்தை முடித்துள்ளார்.
மனுக்கள் சேகரிப்பு
ஒவ்வொரு தொகுதிக்கும் தேவையான திட்டங்கள், அங்குள்ள குறைபாடுகள், நிவர்த்தி செய்ய வேண்டிய பணிகளை தனித்தனியாக பட்டியலிட்டு, கோரிக்கை மனுக்களாகவும் ஸ்டாலின் சேகரித்து வைத்துள்ளார்.
வரும் சட்டப்பேரவைத் தேர்தலை குறி வைத்தே ஸ்டாலின் பயணம் உள்ளதாக மக்களும், திமுகவினரும் கூறிவருகின்றனர். இதற்கிடையில், ஸ்டாலின் பயணத்தை ஆளும் அதிமுக அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது.
தமிழக முதல்வர் ஜெயலலிதா கொடநாட்டில் ஓய்வெடுக்க சென்றுள்ள நிலையில், திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகளின் நடவடிக் கைகள், அவர்களின் அடுத்தடுத்த தேர்தல் சார்ந்த நகர்வுகளை உளவுப்பிரிவு அதிகாரிகள் கண்காணித்து தகவல் சேகரித்து, அரசுக்கு அனுப்பி வருகின்றனர்.
உளவு பிரிவு கண்காணிப்பு
ஸ்டாலின் பங்கேற்கும் நிகழ்ச்சியில் மாநகர பகுதிகளில் நுண்ணறிவு பிரிவும், மாவட்டம் முழுவதும் தனிப்பிரிவைச் சேர்ந்த உளவுப்பிரிவு போலீஸார் ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் பின் தொடர்ந்து கண்காணிக்கின்றனர்.
ஸ்டாலின் நிகழ்ச்சியில் அவரை சந்திக்கும் நபர்கள் மற்றும் செய்தியாளர்கள் மட்டுமே அரங்கத்துக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். கட்சியின் முக்கிய பிரமுகர்கள் கூட அரங்கத்துக்கு வெளியே காத்திருக்கின்றனர். இதனால், கூட்ட அரங்கத்துக்குள் உளவுப்பிரிவு போலீஸார் என்ன நடக்கிறது என்பதை செய்தியாளர்கள் மூலம் கேட்டறிந்து வருகின்றனர்.
நிகழ்ச்சி நடக்கும் இடத்துக்கும், அங்கு கூடியுள்ள கூட்டம் குறித்தும், அவரை சந்திக்கும் நபர்கள் பற்றிய விவரம், அவர்கள் முன் வைக்கும் பிரச்சினைகள் உள்ளிட்ட தகவல்களை உளவுப்பிரிவு போலீஸார் சேகரித்து வருகின்றனர்.
மேலும், ஸ்டாலின் பங்கேற்கும் கூட்டத்தில் கூடுகின்ற பொதுமக் களின் கூட்டம் குறித்தும், அவர்களிடம் எழுச்சி காணப்படுகிறதா?, ஆளும் அரசு மீதான அதிருப்தியை காண்பிக்கின்றனரா? என்ற மக்களின் மன ஓட்டத்தையும் கண்காணித்து உயர் அதிகாரி களுக்கு அனுப்பி வைக்கின்றனர்.
இந்த சுற்றுப்பயணத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்களை சந்திப்பதை ஸ்டாலின் வழக்கப்படுத்தி கொண்டதைத் தொடர்ந்து, மகளிர் குழுக்களுக்கு செல்போன் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.
போட்டா போட்டி
மேலும், தொகுதிவாரியாக உள்ளூர் அமைச்சர்கள் முகாம்களை நடத்தி மக்களின் பிரச்சினைகள் குறித்து மனுக்களை பெற்று நடவடிக்கை எடுக்கும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
வரும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாகவே ஆளும் கட்சி மற்றும் எதிர்கட்சிகள் மக்களிடையே தங்களது செல்வாக்கை நிலை நிறுத்திக் கொள்ள போட்டா போட்டி நடத்தி பலப்பரீட்சையில் ஈடுபட்டு வருவதை மக்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT