Published : 30 Mar 2021 03:17 AM
Last Updated : 30 Mar 2021 03:17 AM
2021 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிக பெண் வேட்பாளர்களுடன் குடியாத்தம் (தனி) தொகுதி களம் காணும் நிலையில் மே 2-ம் தேதிக்குப் பிறகு ஒரு பெண் வேட்பாளரே எம்எல்ஏவாக தேர்வாகி சட்டப்பேரவையை அலங்கரிப்பார் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் உள்ள மிகவும் பழமையான தொகுதிகளில் குடியாத்தம் முக்கியமானது. கடந்த 1952 முதல் தேர்தலை சந்திக்கிறது. ஆங்கிலேயர்களிடம் இருந்து நாடு சுதந்திரம் அடைந்தபோது டெல்லி செங்கோட்டையில் ஏற்றப்பட்ட முதல் இந்திய தேசிய கொடி தயாரிக்கப்பட்டது குடியாத்தம் நகரில் தான். கல்விக்கண் திறந்த காமராஜரை இடைத் தேர்தலில் வெற்றிபெற வைத்து முதலமைச்சராக்கி அழகு பார்த்த தொகுதி.
ஏற்றுமதித்தரம் வாய்ந்த கைத்தறி லுங்கி உற்பத்தி, 500-க்கும் மேற்பட்ட குறு, சிறு தீப்பெட்டி தொழிற்சாலைகளால் குட்டி சிவகாசி என்ற அடையாளம், விவசாயிகள், விவசாய கூலி தொழிலாளர்கள் நிறைந்த தொகுதி. தொகுதி மறு சீரமைப்புக்குப் பிறகு பேரணாம்பட்டு தொகுதி கலைக்கப்பட்டு குடியாத்தம் பொது தொகுதியானது. பின்னர் தனித் தொகுதியாக மாற்றப்பட்டது.
தொழிற் பயிற்சி நிலையம்
மிகவும் பின்தங்கியுள்ள பேரணாம்பட்டு பகுதியில் அரசு கலைக் கல்லூரி அல் லது பாலிடெக்னிக் கல்லூரி அல்லது தொழிற் பயிற்சி நிலையம் தொடங்க வேண்டும், போக்குவரத்து நெரிசலில் திணறும் குடியாத்தம் நகருக்கு புறவழிச்சாலை, பேரணாம்பட்டு பேருந்து நிலைய பிரச்சினைக்கு தீர்வு, நலிந்துவரும் கைத்தறி, தீப்பெட்டி, பீடி தொழிலாளர்களுக்கு மாற்று வாழ்வாதாரம், இஎஸ்ஐ மருத்துவமனை, குடியாத்தம் நகரில் காமராஜர் பாலத்து இணையாக மற்றொரு பாலம், கெங்கையம்மன் கோயிலுக்கு அருகில் தரைப்பாலம் கட்டிக் கொடுக்க வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. பத்தலப்பல்லி அணை கட்டுமானப் பணியை நிறைவேற்ற வேண்டும் என்பது விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.
தேர்தல் வரலாறு
கடந்த 1952-ல் நடந்த முதல் தேர்தலில் இரட்டை தொகுதியாக இருந்தது. அப்போது, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஏ.ஜெ.அருணாச்சல முதலியார், ஏ.எம்.ரத்தினசாமி ஆகியோர் வெற்றி பெற்றனர். காமராஜர் முதலமைச்சர் ஆக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதால், அருணாச்சல முதலியார் தனது பதவியை ராஜினாமா செய்தார். இரட்டை தொகுதியில் ஒருவர் பதவியை ராஜினாமா செய்தால் மற்றொரு உறுப்பினர் பதவியும் தானாக ரத்தாகிவிடும் என்பதால் ரத்தினசாமியின் பதவியும் பறிபோனது.
இதையடுத்து, 1954-ல் நடந்த இடைத் தேர்தலில் இரட்டை வாக்குரிமை அடிப்படையில் காமராஜர், டி.மணவாளன் ஆகியோர் வெற்றிபெற்றனர். காம ராஜரும் முதலமைச்சரானார். 1957-ல் நடந்த இரட்டைத் தொகுதி தேர்வில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வி.கே.கோதண்டராமன், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த டி.மணவாளன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இரண்டு இடைத் தேர்தல் மற்றும் 2 முறை இரட்டை உறுப்பினரை தேர்வு செய்யும் தேர்தல் என்ற அடிப்படையில் 17 தேர்தல்களை குடியாத்தம் தொகுதி சந்தித்துள்ளது.
2021 தேர்தல்
இந்த சட்டப்பேரவைத் தேர்தலில் குடியாத்தம் (தனி) தொகுதியில் 15 பேர் போட்டியிடும் நிலையில், இவர்களில் 7 பேர் பெண்கள் என்பது குறிப் பிடத்தக்கது. அதிமுக, திமுக உள்ளிட்ட பிரதான கட்சிகள் சார்பில் இங்கு பெண் வேட்பாளர்களே நிறுத்தப்பட்டுள்ளனர். அதிமுக வேட்பாளராக பரிதா, திமுக வேட்பாளராக அமலு விஜயன், அமமுக வேட்பாளராக ஜெயந்தி பத்மநாபன், நாம் தமிழர் கட்சி வேட்பாளராக கலையேந்திரி, சுயேட்சை வேட்பாளர்களாக வெண்ணிலா, பிரியா, ராதா ஆகிய 7 பேர் போட்டியிடுகின்றனர்.
தேர்தல் பிரச்சார களத்தில் பெண் வேட்பாளர்கள் கடுமையான வெயிலையும் பொருட்படுத்தாமல் நேரத்தை வீணடிக்காமல் தீவிரமாக வாக்குகளை சேகரித்து வருகின்றனர். இவர்களது பிரச் சாரத்தில் சுவாரஸ்யம் குறையாமல் பீடி தொழிலாளர்கள் நிறைந்த பகுதியில் பீடி சுற்றுவதும், கைத்தறி நெசவாளர்கள் நிறைந்த பகுதியில் நெசவு தறியில் வேலை செய்து வாக்குகள் கேட்பதும், வயல் வெளியில் நாற்று நடுவது என வாக்காளர்களிடம் நூதன முறையில் வாக்குகளை சேகரித்து வருகின்றனர். எப்படி இருந்தாலும் மே 2-ம் தேதிக்குப் பிறகு சட்டப்பேரவையில் குடியாத்தம்( தனி) தொகுதியின் எம்எல்ஏவாக அலங் கரிக்கப்போவது ஒரு பெண்தான் என்பது நிச்சயமாகியுள்ளது.
இதற்கு முன்பாக குடியாத்தம் தொகுதி யில் பெண் சட்டப்பேரவை உறுப்பினர்களாக 2001-ல் சூரியகலா (அதிமுக), 2006-ல் ஜி.லதா (மார்க்சிஸ்ட் கம்யூ.,), 2016-ல் ஜெயந்தி பத்மநாபன் (அதிமுக) ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT