Published : 29 Mar 2021 09:55 PM
Last Updated : 29 Mar 2021 09:55 PM
திருப்பத்தூர் அமமுக மாவட்டச்செயலாளரின் செயல்பாடுகள் சரியில்லை என குற்றஞ்சாட்டிய அக்கட்சி நிர்வாகிகள் கூண்டோடு ராஜிமானா செய்துவிட்டு அதிமுகவில் ஐயக்கியமாகி வருகின்றனர்.
இதனால், அக்கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பெரும் கலக்கத்தில் ஆழ்ந்துள்ளனர்.
கடந்த 2016-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் ஆம்பூர் சட்டப்பேரவை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிப்பெற்றவர் ஆர். பாலசுப்பிரமணி.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு டிடிவி தினகரன் பக்கம் தாவியதால் தனது எம்எல்ஏ பதவியை இழந்தார்.
அமைச்சர் கே.சி.வீரமணி மீது இருந்த வெறுப்பால் டிடிவி தினகரன் பக்கம் ஆர்.பாலசுப்பிரமணி சென்று விட்டதாக அதிமுகவினர் கூறினர். இருப்பினும், அவரை மீண்டும் கட்சிக்குள் கொண்டு வர பலர் முயற்சி செய்தும், வீரமணி மீது இருந்த வெறுப்பால் பாலசுப்பிரமணி கடைசி வரை அதிமுக பக்கம் திரும்பவில்லை எனக்கூறப்படுகிறது.
இதற்கிடையே, டிடிவி தினகரன் அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தை தொடங்கினார். அக்கட்சியின் திருப்பத்தூர் மாவட்டச்செயலாளராக ஆர்.பாலசுப்பிரமணி நியமிக்கப்பட்டார். மாவட்டச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்ட பிறகு ஆர்.பாலசுப்பிரமணித்தின் செயல்பாடுகள் வேகமெடுத்தன.
ஆனால், அமைச்சர் கே.சி.வீரமணியின் பணபலம், அரசியல் பலம், அமைச்சர் செல்வாக்கை மீறி பாலசுப்பிரமணியத்தால் கட்சிப்பணியை சரிவர கவனிக்க முடியாத நிலை உருவானது. இதனால், தீவிர அரசியலில் இருந்து பாலசுப்பிரமணி சற்று ஒதுங்கினார்.
இந்நிலையில், ஆம்பூர் தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதில், அதிமுக சார்பில் ஜோதி ராமலிங்க ராஜாவும், திமுக சார்பில் வில்வநாதனும், அமமுக சார்பில் பதவியை இழந்த ஆர்.பாலசுப்பிரமணி ஆகியோர் போட்டியிட்டனர்.
இதில், 2016 தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிப்பெற்ற பாலசுப்பிரமணி தனது பதவியை சரிவர பயன்படுத்தாமல், பதவி இழந்ததால் அவரை மக்கள் தேர்ந்தெடுக்கவில்லை.
இந்தத் தேர்தலில் திமுக வேட்பாளர் வில்வநாதன் வெற்றிப்பெற்று ஆம்பூர் எம்எல்ஏ ஆனார். அமைச்சர் கே.சி.வீரமணியின் செயல்பாட்டால் அதிமுக வசம் இருந்த ஆம்பூர் தொகுதி திமுக பக்கம் திரும்பியது என அதிமுகவினர் குற்றஞ்சாட்டினர்.
இடைத் தேர்தலில் தோல்வியை தழுவியதால் மனமுடைந்த அமமுக மாவட்டச்செயலாளர் ஆர்.பாலசுப்பிரமணி அதன்பிறகு கட்சிப்பணியில் அவ்வளவு ஆர்வம் காட்டவில்லை. கட்சி நிகழ்ச்சிகளில் கூட தலைக்காட்டாமல் ஒதுக்கியே இருந்தார்.
இது அக்கட்சி நிர்வாகிகளிடம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. தற்போது 2021-ம் ஆண்டு தமிழக சட்டப்பேரவை தேர்தலில் அமமுக, தேமுதிக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளுடன் கூட்டணி வைத்து தேர்தலில் போட்டியிடுகிறது. இதில், திருப்பத்தூர் மாவட்டத்தில் அமமுக கூட்டணி கட்சி சார்பில் 4 தொகுதிகளில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ள அமமுக கூட்டணி கட்சி வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் தொடங்கிய தேர்தல் பிரச்சாரம் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளனர். ஆனால், மாவட்டச்செயலாளராக உள்ள ஆர்.பாலசுப்பிரமணி இதில் எதிலும் கலந்து கொள்ளாமல் ஒதுக்கி இருப்பதால் அக்கட்சியைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு அதிமுகவில் இணைந்து வருகின்றனர்.
இது குறித்து அமமுக ஜோலார்பேட்டை ஒன்றியச்செயலாளர் இளங்கோ ‘இந்து தமிழ் திசை நாளிதழிடம்’ கூறியதாவது, ‘‘மாவட்டச்செயலாளர் ஆர்.பாலசுப்பிரமணி கட்சி வளர்ச்சிக்கு எந்த வேலையும் செய்யவில்லை. சட்டப்பேரவை தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகும் கட்சிக்காகவோ, அமமுக கூட்டணி கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் தேர்தல் பிரச்சாரத்துக்கு அவர் இதுவரை வரவில்லை.
இதனால், அமமுக கட்சி திருப்பத்தூர் மாவட்டத்தில் பெரும் பின்னடைவை சந்தித்து வருகிறது. எனவே, மாவட்டச்செயலாளரின் செயல்பாடு சரியில்லை என கட்சித்தலைமைக்கு புகார் கடிதம் கொடுத்துவிட்டு, ஜோலார்பேட்டை, திருப்பத்தூர், ஆம்பூர் மற்றும் வாணியம்பாடி பகுதிகளைச் சேர்ந்த 800-க்கும் மேற்பட்ட அமமுக தொண்டர்கள் அமைச்சர் கே.சி.வீரமணி முன்னிலையில் அதிமுகவில் இணைந்து வருகிறோம்’’. இவ்வாறு அவர் கூறினார்.
இது குறித்து அமமுக கட்சியின் பொறுப்பாளரகளிடம் விசாரித்தபோது, ‘‘ஆளும்கட்சியினர் செய்யும் வேலைகள் இது. கட்சியை விட்டு யார் வெளியேறினாலும் எங்கள் வாக்குகளை பிரிக்க முடியாது. இங்கிருந்து சென்றவர்கள் தானாக செல்லவில்லை, பணம் கொடுத்து விலைக்கு வாங்கப்பட்டுள்ளனர்’’ என்றனர்.
அமமுக கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என 100-க்கும் மேற்பட்டவர்கள் அக்கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்து வருவதால் அமமுக வேட்பாளர்களின் வெற்றி வாய்ப்பு பாதிக்கப்படுவதை எண்ணி அக்கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பெரும் கலக்கத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT