Published : 29 Mar 2021 09:32 PM
Last Updated : 29 Mar 2021 09:32 PM
திமுக ஆட்சிக்கு வந்தால் ஏலகிரி மலையும், ஜவ்வாது மலையும் சூறையாடப்படும் என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் திருப்பத்தூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் கூறினார்.
திருப்பத்தூர் தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் பாமக வேட்பாளர் டி.கே.ராஜாவை ஆதரித்து அக்கட்சியின் நிறுவனர் மருத்துவர்.ராமதாஸ் திருப்பத்தூர் - வாணியம்பாடி பிரதான சாலையில் இன்றிரவு தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசும்போது, ‘‘திருப்பத்தூர் தொகுதியில் வேட்பாளராக களம் இறக்கப்பட்டுள்ள டி.கே.ராஜா ஏற்கனவே 2 முறை எம்எல்ஏவாக இருந்தவர்.
இப்பகுதி மக்களுக்கு நன்கு அறிமுகம் ஆனவர். உதவி செய்யும் மனபாங்கு உள்ளவர். திருப்பத்தூர் தனி மாவட்டமாக உருவாக சட்டப்பேரவையில் பலமுறை குரல் கொடுத்தவர். மக்களிடம் சகஜமாக பழக்கூடியவர். அவரை யார் வேண்டுமானாலும் எளிதாக அணுகலாம். அவர் வெற்றிப்பெற்றால் இந்தத் தொகுதிக்கு மேலும் பல வளர்ச்சித் திட்டங்களை நிச்சயம் கொண்டு வருவார்.
வேலூர் மாவட்டம் 13 சட்டப்பேரவை தொகுதிகளை கொண்டிருந்தது. இதனால், நிர்வாக வசதிகள் சரிவர மேற்கொள்ள முடியவில்லை.
எனவே, வேலூர் மாவட்டத்தை 3-ஆக பிரிக்க வேண்டும் என பாமக சார்பில் பல கட்ட போராட்டங்களை நடத்தினோம். திருப்பத்தூரில் மட்டும் 10-க்கும் மேற்பட்ட போராட்டங்களை பாமக நடத்தியுள்ளது.
அதன் விளைவு, கடந்த 2019-ம் ஆண்டு திருப்பத்தூர் மாவட்டம் உதயமானாது. புதிய மாவட்டத்தால் இப்பகுதி மக்களின் பல்வேறு தேவைகள் உடனுக்குடன் நிறைவேற்றப்பட்டு வருகிறது.
இதற்கெல்லாம் மக்கள் நன்றிக்கடன் செலுத்த வேண்டாமா ? அதை எப்படி செய்வது என்றால் அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னத்திலும், பாமகவுக்கு மாம்பழச்சின்னத்திலும் பொதுமக்கள் வாக்களிக்க வேண்டும்.
அதிமுக தேர்தல் அறிக்கை என்பது அட்சயபாத்திரம். ஆட்சிக்கு வந்ததும் அனைத்தும் நிறைவேற்றப்படும். திமுக ஆட்சிக்கு வந்தால் எதுவுமே மிஞ்சாது. இங்குள்ள ஏலகிரி மலையும், ஜவ்வாதுமலையையும் திமுகவினர் சூறையாடிவிடுவார்கள்.
இதுமட்டுமா? திமுக ஆட்சிக்கு வந்தால் சட்டம் - ஒழுங்கு கெடும், நில அபகரிப்பு அதிகரிக்கும், வியாபாரிகள் பாதிக்கப்படுவார்கள், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாமல் போகும் இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.
இது போன்ற அவல நிலை வராமல் தடுக்க ஏப்ரல் 6-ம் தேதி வாக்காளர்கள் அதிமுக கூட்டணியை ஆதரிக்க வேண்டும்’’. இவ்வாறு அவர் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT