Last Updated : 29 Mar, 2021 07:13 PM

 

Published : 29 Mar 2021 07:13 PM
Last Updated : 29 Mar 2021 07:13 PM

கோவை அரசு மருத்துவமனையில் இளம்பெண்ணின் 1.80 கிலோ கர்ப்பப்பை கட்டியை அகற்றி சீரமைத்த மருத்துவர்கள்

கர்ப்பப்பை கட்டியை அகற்றி, சீரமைத்த கோவை அரசு மருத்துவமனை மருத்துவர்களுடன் சிகிச்சை பெற்றுக்கொண்ட பெண்.

கோவை அரசு மருத்துவமனையில் இளம்பெண்ணின் 1.80 கிலோ கர்ப்பப்பை கட்டியை அகற்றி மருத்துவர்கள் வெற்றிகரமாகச் சீரமைத்துள்ளனர்.

இது தொடர்பாக மருத்துவமனையின் டீன் டாக்டர் நிர்மலா கூறியதாவது:

''கோவைப்புதூரைச் சேர்ந்த 27 வயதுப் பெண், 3 மாதங்களாக இருந்த வயிற்று வலி, வீக்கத்துடன் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரைப் பரிசோதித்த மகப்பேறு, பெண்கள் நலப் பிரிவு மருத்துவர்கள் மிகப்பெரிய கர்ப்பப்பை கட்டி இருப்பதைக் கண்டறிந்தனர்.

குழந்தையின்மைக்கு அதுவும் ஒரு காரணம் எனத் தெரியவந்தது. பின்னர் அந்தப் பெண், அவரது கணவரிடம் அறுவை சிகிச்சை செய்து கட்டியை அகற்ற வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது. கட்டியை அகற்றும்போது அதிக ரத்த இழப்பு ஏற்படலாம். எனவே, உயிர் காக்கும் வகையில் தேவை ஏற்பட்டால் கர்ப்பப்பையையும் அகற்ற நேரலாம் என எடுத்துக் கூறி அவர்களின் சம்மதத்துடன் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

மகளிர், மகப்பேறு மருத்துவத்துறைத் தலைவர் மனோன்மணி, மயக்கவியல் துறைத் தலைவர் கல்யாண சுந்தரம் ஆகியோரது ஆலோசனையின்படி, டாக்டர்கள் திலகவதி, முருகலட்சுமி, ஜெனிதா, நக்கீரன் அடங்கிய மருத்துவக் குழுவினர் அறுவை சிகிச்சை மேற்கொண்டனர்.

அப்போது, சுமார் 1.80 கிலோ எடையுடைய கர்ப்பப்பை கட்டி, கர்ப்பப்பைக்கு ஆபத்தில்லாமல் அகற்றப்பட்டது. இதன்மூலம் குழந்தை உண்டாவதற்கான வாய்ப்புடன் கர்ப்பப்பை சீரமைக்கப்பட்டது. சிகிச்சைக்குப் பின் அந்தப் பெண் நலமுடன் வீடு திரும்பியுள்ளார்.

தனியார் மருத்துவமனையில் இதே சிகிச்சையை மேற்கொண்டால் ரூ.3 லட்சம் வரை செலவாகும்''.

இவ்வாறு டாக்டர் நிர்மலா கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x