Published : 29 Mar 2021 05:58 PM
Last Updated : 29 Mar 2021 05:58 PM
1996, 2001, 2006 என மூன்று சட்டப்பேரவைத் தேர்தல்களில் சேப்பாக்கம் தொகுதியில் 'ஹாட்ரிக்' அடித்தவர் மறைந்த திமுக தலைவர் கருணாநிதி. தொடர்ந்து திமுகவே ஜெயித்துவரும் இந்தத் தொகுதியில், 1991-ல் மட்டும் காங்கிரஸ் வெற்றி பெற்றது. 2011-ம் ஆண்டு சேப்பாக்கம் தொகுதியுடன் திருவல்லிக்கேணியும் இணைக்கப்பட்டது. கருணாநிதியால் நட்சத்திர அந்தஸ்து பெற்ற சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி, தற்போது திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் போட்டியிடுவதால் மீண்டும் நட்சத்திர அந்தஸ்தைப் பெற்றிருக்கிறது.
2016-ல் தனித்துக் களம் கண்ட பாமகவின் ஏ.வி.ஏ.கஸ்ஸாலி 2,511 வாக்குகள் மட்டுமே பெற்று 6-ம் இடத்தைப் பிடித்தார். அவர் தற்போது, அதிமுகவின் கூட்டணி வேட்பாளராகக் களம் காண்கிறார். சேப்பாக்கம் தொகுதியில் சிறிது நாட்கள் மட்டுமே உதயநிதி பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில், கஸ்ஸாலி தினந்தோறும் அங்கு பிரச்சாரம் செய்கிறார். 'பிஸி'யான பிரச்சாரத்துக்கு நடுவே 'இந்து தமிழ் திசை' சார்பாக கஸ்ஸாலியிடம் பேசினோம்.
பாமகவுக்குச் சிறிதும் வாக்கு வங்கி இல்லாத சேப்பாக்கம் தொகுதியை நீங்கள் கேட்டு வாங்கினீர்களா? அல்லது அதிமுக கொடுத்ததா?
பாமக கேட்டு வாங்கிய தொகுதி இது. கடந்த முறை தனித்து நின்றபோது எங்கள் கொள்கைகளை எடுத்துச் சொன்னோம். மக்களைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. மக்களின் பிரச்சினைகளை நான் முழுமையாக அறிந்திருந்தேன். காலங்காலமாக திமுகவிலிருந்து எம்எல்ஏக்களாக வந்தவர்கள் நுழையாத பகுதிகளுக்குக் கூட நான் சென்றிருக்கிறேன். இந்தப் பகுதி மக்கள் என்ன மனநிலையில் உள்ளனர் என்பதுகூட அப்பகுதி திமுக வேட்பாளருக்குத் தெரியாது.
தொகுதிக்கு வராத எம்எல்ஏக்களாகத்தான் இதுவரை இத்தொகுதி திமுக எம்எல்ஏக்கள் இருந்தனர். மக்களின் வாழ்வாதாரத்துக்காக யாருமே போராடவில்லை. மின்சாரம், சாக்கடை வசதி, சாலை வசதி இல்லை. சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளன. மக்களின் பிரச்சினைகளை நான் நேருக்கு நேர் சந்தித்தவன். மக்களும் பல கோரிக்கைகளை வைத்துள்ளனர். இவற்றை நிறைவேற்றிக் கொடுப்பதாக நான் வாக்கு கொடுத்திருக்கிறேன்.
திமுகவின் கோட்டையில் உதயநிதியை எதிர்ப்பது சவாலானதாகவோ, பதற்றமாகவோ இல்லையா?
கொஞ்சம் கூட எனக்குப் பதற்றமே கிடையாது. மிகவும் லேசாக உணர்கிறேன். இது கோட்டை என்று திமுகதான் சொல்கிறது. மக்களா சொன்னார்கள்? மக்களை ஏமாற்றி ஏமாற்றித்தான் இந்த நிலைக்கு வைத்திருக்கின்றனர். நமக்கு இவர்தான் சரியானவர் என என்னை மக்கள் உணர்கின்றனர். இதுதான் எனக்கான 'ப்ளஸ்'. மக்கள் தெளிவாக உள்ளனர். மக்கள் பலத்தை நம்பித்தான் நான் களத்தில் நிற்கிறேன். எங்களுக்கு பலமான சக்தியாகக் கூட்டணியும், கூட்டணிக் கட்சித் தொண்டர்களும் உள்ளனர். அதனால் நாங்கள் இன்றைக்கு பலமான சக்தியாக இருக்கிறோம்.
சிறிது நாட்கள்தான் இங்கு பிரச்சாரம் செய்திருக்கிறார் உதயநிதி. அவருக்கு அதிக நம்பிக்கை இருப்பது போலிருக்கிறதே?
திமுகவினர்தானே இங்கு ஆண்டாண்டுகாலமாக ஜெயித்துக் கொண்டிருந்தனர். மக்கள் நம்மை இன்னும் நம்புகிறார்கள், ஓட்டுப் போட்டு விடுவார்கள் என்கிற மமதையில் இருக்கின்றனர், இறுமாப்பில் இருக்கின்றனர். ஆனால், மக்கள் மாற்றத்தைக் கையில் எடுத்துள்ளனர். அது அவர்களுக்குத் தெரியாது. வாரிசு அரசியலுக்கும் மக்கள் அரசியலுக்கும் நடக்கும் பிரச்சினை இது.
நான் ஒரு விவசாயக் குடும்பத்திலிருந்து வந்தவன். எனக்கு மக்களின் வலி, பிரச்சினைகள், மக்களை எப்படி அணுகுவது என்பது தெரியும். ஆனால், உதயநிதிக்கு என்ன தெரியும்? ஆனால், பாவம், அவரை ஒன்றும் சொல்ல முடியாது. அவர் சின்ன குழந்தை மாதிரி 'மெச்சூரிட்டி' இல்லாமல் ஆங்காங்கே பிரச்சாரம் செய்துகொண்டிருக்கிறார். ஆனால், அவை மக்கள் பிரச்சினைக்குத் தீர்வு தருமா? அவர் சினிமாவில் நடிப்பது ஓகே. நான் அவர் படத்தைப் பார்க்கவில்லை. இருந்தாலும் சொல்கிறேன். சினிமா ஓகே, ஆனால், அரசியல் கடுமையான வேலை. மழை, வெயில் பார்க்காமல் மக்களுக்காக நிற்க வேண்டும். அது அவரால் முடியாது. உதயநிதியிடம் அரசியலை ஸ்டாலின் திணிக்கிறார். அரசியலுக்கு வந்தாக வேண்டும் என்று நிர்பந்தம் செய்கிறார். அரசியலில் ஆர்வம் இல்லை என உதயநிதி ஏற்கெனவே சொல்லியிருக்கிறார்.
ஆனால், பல பகுதிகளில் பிரச்சாரம் செய்யும்போது உதயநிதிக்கு மக்கள் ஆதரவு இருக்கிறதே?
சினிமா நடிகர்கள் கூட பிரச்சாரம் செய்கின்றனர். ஆனால், அவர்கள் அரசியல்வாதியாக மாற முடியுமா? எம்ஜிஆர் ஏழையாக இருந்து வந்தவர், பசியை உணர்ந்திருந்தார். ஏழைகளின் சிரிப்பில் இறைவனைக் காணலாம் என மக்களோடு மக்களாகவே வாழ்ந்தவர். தன் உடமைகளை மக்களுக்காகவே கொடுத்துச் சென்றவர். அதுபோல் இப்போது யாரையாவது காட்ட முடியுமா? சினிமாவிலிருந்து அரசியலுக்கு வந்தால் எம்ஜிஆர் மாதிரி முதல்வராகிவிட முடியும் எனக் கனவு கண்டால் எப்படி? அவரைத் தோற்கடிப்பது சவால் கிடையாது.
மக்கள் பலத்தை நம்பி நிற்கிறேன். மக்கள் பலம் எப்பேற்பட்ட கோட்டையையும் தகர்த்துவிடும். உதயநிதி சினிமாவில் நடிக்கிறார், சம்பாதிக்கிறார், சந்தோஷம். அவருக்கும் எனக்கும் என்ன இருக்கிறது? அவரை நான் பார்த்தது கூட கிடையாது. ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் சம்பாதிக்கிறார். சினிமாவிலேயே சேவை செய்ய நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன. மக்களுக்காக அவர் சேவை செய்யவில்லை.
விஜய், அஜித், சூர்யா, லாரன்ஸ் போன்றவர்கள் கூட ஏதோ ஒன்றை மக்களுக்காகச் செய்கின்றனர். அவர்களை நாங்கள் மனதார ஏற்கிறோம். அதுதான் மனித நேயம். ஆனால், உதயநிதி மக்களுக்காக ஏதேனும் செய்துள்ளாரா? கரோனா, வெள்ளக் காலங்களில் நிவாரணம் கொடுத்திருக்கிறாரா? ஒன்றும் செய்யவில்லை. 'ஒன்லி இன்கமிங், நோ அவுட்கோயிங்'.
திமுக இத்தனை ஆண்டுகாலமாக என்ன செய்யவில்லை என நினைக்கிறீர்கள்? நீங்கள் என்ன செய்வீர்கள்?
திமுக ஒன்றுமே செய்யவில்லை. திமுக செய்யாதவற்றை நான் செய்வேன். பிரச்சினைகள் தீர்க்கப்பட்டிருந்தால் மக்கள் ஆதங்கமாகச் சொல்ல மாட்டார்களே? தேவையான வசதிகளை திமுக செய்துகொடுக்கவில்லை. அதனால், மக்கள் கோபத்துடனும் ஆத்திரத்துடனும் உள்ளனர். மக்களிடம் வந்து கேட்டால் நான் சொல்வது உண்மையா? பொய்யா என்பது தெரியும். சிந்தாதிரிப்பேட்டை குடிசைப் பகுதிகள் அவலமான நிலையில் அப்படியே இருக்கின்றன. அவர்களுக்கு அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டிக்கொடுக்க வேண்டும்.
மக்கள் கோபமாக இருக்கிறார்கள் என்றால், கருத்துக்கணிப்புகள் திமுகவுக்குச் சாதகமாக இருக்கிறதே?
கருத்துக்கணிப்புகளை அவர்களே போலியாக உருவாக்குகின்றனர். பேருந்தில் நிற்பவர்கள், டீக்கடைகளில் நிற்பவர்கள் என 4 பேரிடம் கேட்டு, கருத்தைக் கணிக்க முடியாது. அடிப்படை வசதிகள் இல்லாத மக்களிடம் கேட்டால்தான் அவர்கள் தங்கள் வலியைச் சொல்வார்கள்.
பாஜகவுக்கு கொடுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட தொகுதி இது. பாஜகவினர் ஆதரவு உங்களுக்கு இருக்கிறதா?
பாஜகவினர் மிகவும் வேகமாக இருக்கின்றனர். என்னை ஜெயிக்க வைத்துக் காட்டுவோம் என என்னுடனான பயணத்தில் ஆர்வமாக இருக்கின்றனர்.
தொகுதியில் கணிசமாக உள்ள சிறுபான்மையினர் வாக்குகளை உதயநிதி அறுவடை செய்வார் என சொல்லப்படுகிறதே?
மதச்சார்பற்ற கூட்டணி என சொன்னாலும் ஆரம்பத்தில் பாஜகவுடன் திமுக கூட்டணி வைத்திருக்கிறது. திமுக ஆட்சிக் காலத்தில் முஸ்லிம்கள் தீவிரவாதிகள் என முத்திரை குத்தப்பட்டனர். இன்னும் முஸ்லிம்கள் பலர் சிறைவாசிகளாக உள்ளனர். திமுகவின் மீது முஸ்லிம்களுக்கு இருந்த நம்பிக்கையை கருணாநிதி அன்றே உடைத்துவிட்டார். முஸ்லிம்களுக்கு திமுக செய்த துரோகங்கள் பல. முஸ்லிம்களுக்குப் பல களங்கங்களை விளைவித்தது திமுக. முஸ்லிம் மதக்கலவரங்கள் பல திமுக ஆட்சிக்காலத்தில் நிகழ்ந்தவைதான்.
அதிமுக ஆட்சிக்காலத்தில் ஒன்றும் நடக்கவில்லை. எடப்பாடி பழனிசாமி ஆட்சியிலும் ஒன்றும் இல்லை. சிறுபான்மை மக்கள் யோசிக்க ஆரம்பித்துவிட்டனர். நான் சமூகம் சார்ந்து பல சேவைகளைச் செய்துள்ளேன். அதனால்தான் நான் பாமக, ராமதாஸுடன் பயணிக்கிறேன். இட ஒதுக்கீட்டுக்காகப் போராடியிருக்கிறேன். தமிழகம் முழுவதும் அதிகமாக வாக்கு உள்ள சமுதாயமாக முஸ்லிம் சமுதாயம் இருக்கிறது. அந்த வாக்குகளை திமுக அறுவடை செய்தது. கவர்ச்சியானவற்றை சொல்லி முஸ்லிம் மக்களை ஏமாற்றியது திமுக. இப்போது நான் சொல்வதுதான் சரி என, மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர்.
ஆனால், மாநிலங்களவையில் சிஏஏவுக்கு ஆதரவு தெரிவித்து வாக்களித்தது அதிமுகவும், பாமகவும் தானே?
தமிழ்நாட்டில் அந்தச் சட்டங்களை அமல்படுத்த மாட்டோம் என முதல்வர் கூறியுள்ளார். அச்சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்துவோம் என அதிமுக சொல்லியிருக்கிறது. திமுகதான் அதனை அரசியல் ரீதியாக எதிர்த்தது. ஒன்றும் நடக்காது. திமுக யாரையும் சும்மா இருக்கவிடாது. திமுக உதட்டளவில் மேம்போக்காகத்தான் சொல்லும். ஆனால், செய்யாது.
பாஜகவுக்கு எதிராக தமிழகத்தில் நிலவும் மனநிலை, உங்களுக்குப் பாதகமில்லையா?
தமிழ்நாட்டில் பாஜகவுடன் இணக்கமான சூழல் ஏற்படுகிறது. நான் அவர்களுடன் இப்போதுதான் பயணிக்கிறேன். எல்லோரும் ஒன்றாக இருந்த மக்கள்தானே. அவர்களிடம் மத நல்லிணக்கத்தைக் கொண்டு வர முடியும் என்ற நம்பிக்கை எனக்கு வந்திருக்கிறது. பிரச்சினையை ஊதிப் பெரிதாக்காமல் இணக்கத்தைக் கொண்டு வர வேண்டும்,. தமிழகம் பக்குவப்படுத்தப்பட்ட மண். அதனால் 'ஈஸி'யாகச் சரிசெய்துகொள்ளலாம்.
பாமக - அதிமுக கூட்டணி சந்தர்ப்பவாதக் கூட்டணி என்ற விமர்சனம் மேலோங்கி இருக்கிறதே?
அப்படியெல்லாம் கிடையாது. 4, 6 மாதங்களில் ஆட்சி முடிந்துவிடும் என்றனர். 4 ஆண்டுகளை எடப்பாடி பழனிசாமி நிறைவு செய்துள்ளார். 4 ஆண்டுகளாக ஏதாவது பிரச்சினை நடந்ததா? சட்டம் - ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டதா? நன்றாக ஆட்சி நடத்துகிறார். நல்லாட்சி நடக்க வேண்டும் என்பதுதான் எங்கள் கட்சியின் கொள்கை.
வன்னியர் உள் ஒதுக்கீடு தற்காலிகமானது என அதிமுக அமைச்சர்களே கூறுகின்றனர். ஆனால், உள் ஒதுக்கீட்டைக் கூறி வன்னியர் மக்களை பாமக ஏமாற்றுவதாக விமர்சனம் உள்ளதே?
அதனை திமுகதான் அரசியலாக்குகிறது. 40 வருடப் போராட்டம் இது. எத்தனை போராட்டங்கள், கைதுகள். அந்தப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தக் கூடாது, கொச்சைப்படுத்தவும் முடியாது. திமுக எல்லாவற்றையும் வயிற்றெரிச்சலில் சொல்கிறது. வன்னியர் மக்களின் வாக்கு எனக்கு அதிகமாக கிடைக்கும். வன்னியர் மக்கள் எங்களுக்கு முழு ஆதரவுடன் உள்ளனர்.
உங்களுக்கு ஆதரவாக தொகுதியில் பணப் பட்டுவாடா நடப்பதாக திமுக புகார் எழுப்பியிருக்கிறதே?
அப்படியான செய்திகளை நானும் தொலைக்காட்சிகளில் பார்த்தேன். ஆனால், அவை நம்பத்தகுந்ததாக இல்லை. பணம் விநியோகம் செய்தவர்கள் யார் என்று தெரியவில்லை. நாங்களே பணம் இல்லாமல் சிரமப்படுகிறோம்.
தொடர்புக்கு: nandhini.v@hindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT