Published : 29 Mar 2021 02:57 PM
Last Updated : 29 Mar 2021 02:57 PM

முதல்வர் பழனிசாமி எடப்பாடி தொகுதியில் டெபாசிட் கூட வாங்க முடியாது: ஸ்டாலின் பேச்சு

தேர்தல் பிரச்சாரத்தில் ஸ்டாலின்.

ஜோலார்பேட்டை

முதல்வர் பழனிசாமி எடப்பாடி தொகுதியில் டெபாசிட் கூட வாங்க முடியாது என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று (மார்ச் 29), ஜோலார்பேட்டையில் பிரச்சாரத்தின்போது பொதுமக்களிடையே வாக்கு சேகரித்துப் பேசியதாவது:

"இந்த மாவட்டத்தில் அமைச்சர் ஒருவர் இருக்கிறார், வீரமணி. பழனிசாமி அமைச்சரவையில் மூன்று அருமையான மணிகள் இருக்கின்றனர். வேலுமணி, தங்கமணி, வீரமணி.

வேலுமணி அப்பட்டமாக ஊழல் செய்பவர். எதைப்பற்றியும் கவலைப்பட மாட்டார். தங்கமணி மறைமுகமாக ஊழல் செய்வார். வீரமணி எப்படி ஊழல் செய்வார் என்பது உங்களுக்கு தெரியும். ஏன் என்றால் எல்லோருடைய பெயரிலும் 'மணி' இருக்கிறது, அதனால் அவர்கள் 'மணி'யில் தான் குறிக்கோளாக இருப்பார்கள். கரெப்ஷன் - கமிஷன் - கலெக்ஷன் இதுதான் அவர்களுடைய கொள்கை.

தன்னுடைய அமைச்சர் பதவியைப் பயன்படுத்தி இந்தப் பகுதியில் இருக்கும் மக்களுக்கு, இந்த மாவட்டத்தில் இருக்கும் மக்களுக்கு அவர் எதுவும் செய்யவில்லை. கொள்ளையடிப்பதுதான் அவருடைய தொழிலாக, அதில் மட்டுமே மும்மரமாக இருப்பவர்தான் வீரமணி.

நான்கு வருடத்திற்கு முன்பு வருமான வரித் துறையினர் வீரமணி வீட்டிலும், வீரமணியின் பினாமிகள் வீட்டிலும் சோதனை நடத்தினார்கள். அதில் என்ன நடந்தது? அதில் என்ன நடவடிக்கை? என்பது யாருக்கும் தெரியாது.

மத்தியில் மோடியின் தலைமையில் இருக்கும் பாஜக அரசு, ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு பன்னீர்செல்வம், பழனிசாமி ஆகியோரின் பினாமிகள், உறவினர்கள் வீட்டில் சோதனை நடத்தினார்கள்.

அவ்வாறு சோதனை நடத்தி அங்கிருந்த ஆதாரங்களைக் கைப்பற்றிக் கொண்டு அவர்களைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டார்கள். அதேபோல, சோதனை செய்து சில அமைச்சர்களையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டார்கள். அதில் ஒருவர்தான் வீரமணி.

வீரமணியினுடைய வேலை, இடங்களை வளைத்து உரியவர்களை மிரட்டி, அதை அடிமாட்டு விலைக்கு வாங்குவது. அதில் மிகவும் கெட்டிக்காரர் அவர். பகுதிநேர வேலையாக அல்லாமல் முழுநேர வேலையாக அவர் அதைத்தான் செய்து கொண்டிருக்கிறார்.

வேலூரில் மையமான ஒரு இடத்தை வளைக்கும் தகராறில் இவரே நேரடியாக சம்பந்தப்பட்டார். அது சம்பந்தமாக, வழக்குப் பதியப்பட்டு உயர் நீதிமன்றம் வரைக்கும் அந்தப் பிரச்சினை சென்றது. அதை விசாரித்த நீதிபதிகள், 'நிலம் தொடர்பான விவகாரத்தில் அமைச்சர் வீரமணியின் தலையீடு தனிப்பட்டமுறையில் இருப்பதாலும், அமைச்சர் என்ற முறையில் இல்லை என்பதாலும் அவருக்கு எதிரான புகாரில் நடவடிக்கை எடுக்க அரசின் அனுமதி தேவையில்லை' என்று தீர்ப்பு வழங்கிய வரலாறு தான், அமைச்சராக இருக்கும் வீரமணியின் வரலாறு. அந்த நில விவகாரத்தில் சிக்கிய வீரமணியின் வீடியோ வெளியானது.

தன்னுடைய கல்லூரிக்காக மணல் கொள்ளை, ஏலகிரி பெப்சி குடோன், சட்ட மீறல்கள் என்று பட்டவர்த்தனமாக எதையும் செய்வதில் கைதேர்ந்தவர்தான் வீரமணி. அப்படிப்பட்ட வீரமணியை இந்தத் தேர்தலில் நீங்கள் நிராகரிக்க வேண்டுமா, வேண்டாமா? இந்தத் தேர்தலில் அவரைத் தோற்கடிக்க வேண்டுமா, வேண்டாமா?

மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம்.

தேர்தல் நேரம் வந்துவிட்ட காரணத்தால் ஏதேதோ வேஷம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். சிறுபான்மையினர் மீது மிகவும் அக்கறை எடுத்துக் கொண்டவர்கள் போல நடித்துக் கொண்டிருக்கிறார்கள். தயவு செய்து சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

உண்மை நிலை என்னவென்றால் காஷ்மீருக்கான சிறப்பு உரிமை ரத்து செய்யும் சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தவர்கள் இவர்கள். அதேபோல, முத்தலாக் தடை சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தவர்கள் இவர்கள்.

இதற்கெல்லாம் ஆதரவு தெரிவித்தது மட்டுமல்லாமல் நாடாளுமன்றத்தில் ஓட்டும் போட்டிருக்கிறார்கள். ஆனால், இப்போது சிறுபான்மையினரின் பாதுகாவலர் நாங்கள்தான் என்று ஒரு நாடகத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

அதுமட்டுமல்ல, குடியுரிமைத் திருத்தச் சட்டம், சிஏஏ நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்புக்கு வந்தபோது, அதற்கு ஆதரவு தெரிவித்தவர்கள்தான் அதிமுகவினர். ஆனால், இப்போது தேர்தல் அறிக்கையில், அந்தச் சட்டத்தை நீக்குவதற்கு நாங்கள் வலியுறுத்துவோம், வற்புறுத்துவோம் என்று தேர்தலில் மக்களை ஏமாற்றுவதற்காகச் சொல்லி இருக்கிறார்கள். இது எவ்வளவு பெரிய நாடகம்?

மாநிலங்களவையில் அதிமுக, பாமக உறுப்பினர்கள் இருக்கிறார்கள். அவர்கள் அதை எதிர்த்து வாக்களித்து இருந்தால் அந்த சட்டமே நிறைவேறி இருக்காது.

மாநிலங்களவையில் அந்தச் சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்த அதிமுக எம்.பி-க்கள், எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம், என்.சந்திரசேகரன், முகமது ஜான், ஏ.கே.முத்துக்கருப்பன், ஏ.நவநீதகிருஷ்ணன், ஆர்.சசிகலா புஷ்பா, ஏ.கே.செல்வராஜ், ஆர்.வைத்திலிங்கம், ஏ.விஜயகுமார், விஜிலா சத்யானந்த் என்ற பத்து பேர். ஒரே ஒரு பாமக எம்.பி. அன்புமணி ராமதாஸ்.

இந்த பதினோரு பேரும் மத்திய அரசு கொண்டு வந்த சிஏஏ சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்த காரணத்தினால் இந்தச் சட்டம் நிறைவேறிவிட்டது.

திமுக எம்.பி-க்கள் அனைவரும் அதை எதிர்த்து வாக்களித்தார்கள். குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை மாநிலங்களவையில் ஆதரித்தவர்கள் 125 பேர். அதை எதிர்த்தவர்கள் 105 பேர்.

இந்த அதிமுக, பாமகவை சேர்ந்த பதினோரு பேரும் எதிர்த்து வாக்களித்திருந்தால் இந்தச் சட்டமே நிறைவேறி இருக்காது.

இன்று நாடு முழுவதும் சிறுபான்மையினர் துன்பப்படுவதற்குக் காரணம் இந்த அதிமுகவும் பாமகவும் என்பதைப் பகிரங்கமாகக் குற்றம்சாட்டுகிறேன். எனவே, பழனிசாமியும் ராமதாஸும் தான் இந்த சட்டம் நிறைவேறுவதற்கு காரணமாக இருந்திருக்கிறார்கள்.

ஆனால், இப்போது தேர்தலுக்காக நாடகம் போடுகிறார்கள். அவ்வாறு நாடகம் போடும் அவர்களை நீங்கள் நம்புகிறீர்களா?

இந்தச் சட்டத்தை எதிர்த்து திமுக பல முறை போராட்டம் நடத்தியது. அதுமட்டுமல்லாமல், இரண்டு கோடி பேரிடம் கையெழுத்து வாங்கி குடியரசுத் தலைவரிடம் கொடுத்திருக்கிறோம்.

எனவே, இப்போது நான் உறுதியாக சொல்கிறேன். நாம்தான் ஆட்சிக்கு வரப் போகிறோம். அதில் எந்தச் சந்தேகமும் இல்லை. எனவே, நாம் ஆட்சிக்கு வந்தவுடன், இந்த சிஏஏ சட்டத்தை தமிழ்நாட்டில் அனுமதிக்க மாட்டோம். இது ஸ்டாலின் தரும் உறுதிமொழி.

சிறுபான்மையினருடனான உறவு என்பது திமுகவின் தொப்புள்கொடி உறவு. எனவே, எப்போதும் சிறுபான்மையினர் சமுதாயத்திற்காக திமுக குரல் கொடுக்கும்.

அதே போல, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழித்து ஒழிக்க வேண்டும், கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு துணை நிற்க வேண்டும் என்பதற்காக 3 வேளாண் சட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்தது.

அதையும் ஆதரித்தவர்கள் தான் அதிமுக, பாமக. இப்போது தேர்தல் அறிக்கையில், வேளாண் சட்டத்தை நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்று தேர்தலுக்காக பொய் சொல்கிறார்கள்.

இவர்கள் மட்டும் வாக்களிக்கவில்லை என்றால் அந்த சட்டமே நிறைவேறி இருக்காது. ஆனால், இப்போது தேர்தல் வந்த காரணத்தால் நாங்கள் அதை அனுமதிக்க மாட்டோம் என்று ஒரு பொய்யான வாக்குறுதியைச் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். இந்த மூன்று வேளாண் சட்டத்தை ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்று பஞ்சாப் மாநிலம் சட்டப்பேரவையில் தீர்மானம் போடுகிறது. பக்கத்தில் இருக்கும் கேரள மாநிலம் சட்டப்பேரவையில் தீர்மானம் போடுகிறது. மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி சட்டப்பேரவையில் தீர்மானம் போடுகிறார்.

ஆனால், தமிழ்நாட்டில் இதுவரைக்கும் பழனிசாமி தீர்மானம் போடவில்லை. அதனால் நாம் ஆட்சிக்கு வந்தவுடன், முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடரிலேயே இதை அனுமதிக்க மாட்டோம் என்ற தீர்மானத்தைத்தான் போடப்போகிறோம்.

நான் நேற்றைக்கு எடப்பாடி சென்றிருந்தேன். அங்கு வீதி வீதியாக சென்றேன். இப்போது சொல்கிறேன். அவர் அங்கு டெபாசிட் கூட வாங்க முடியாது. அதுதான் நிலை.

இந்தத் தமிழ் மண்ணில், தமிழுக்கு ஆபத்தை ஏற்படுத்த இந்தியைத் திணித்து, நீட் தேர்வைக் கொண்டு வந்து நுழைத்து, நம்முடைய உரிமைகளைப் பறித்து, மதவெறியைத் தூண்டி நாட்டைப் பிளவுபடுத்த வேண்டும் என்ற முயற்சியில் மோடி தலைமையில் இருக்கும் பாஜக ஆட்சி முயன்று கொண்டிருக்கிறது".

இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x