Last Updated : 29 Mar, 2021 02:35 PM

1  

Published : 29 Mar 2021 02:35 PM
Last Updated : 29 Mar 2021 02:35 PM

மாநில அந்தஸ்து வரும் வரை தேர்தலில் நிற்க வேண்டாம் என நாராயணசாமியால் சொல்ல முடியுமா? - ரங்கசாமி கேள்வி

ரங்கசாமி: கோப்புப்படம்

புதுச்சேரி

மாநில அந்தஸ்து வந்தபிறகு தேர்தலில் நிற்போம், அதுவரை தேர்தலில் நிற்க வேண்டாம் என நாராயணசாமியால் சொல்ல முடியுமா என்று, என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி கேள்வி எழுப்பியுள்ளார். அத்துடன் பாஜகவுடன் கூட்டணி வைத்தது ஏன் என்றும் விளக்கம் அளித்துள்ளார்.

புதுச்சேரியில் பாஜக தேர்தல் அறிக்கையில் மாநில அந்தஸ்து தொடர்பாக குறிப்பிடாததால் அதை வலியுறுத்தும் கூட்டணிக்கட்சியான என்.ஆர்.காங்கிரஸின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்துமாறும், பாஜகவுடன் என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி தொடர்பாகவும் காங்கிரஸ் கட்சியின் தரப்பில் முன்னாள் முதல்வர் நாராயணசாமி கேள்வி எழுப்பியிருந்தார்.

புதுச்சேரியில் இன்று (மார்ச் 29) ரங்கசாமி இது குறித்து கூறியதாவது:

"என்.ஆர் காங்கிரஸ் தொடங்கிய போது முதல் கோரிக்கையாக அதிகாரமுள்ள மாநில அந்தஸ்து வேண்டும் என வலியுறுத்தினோம். மத்தியில் காங்கிரஸ் ஆண்டபோது நாராயணசாமி இணை அமைச்சராக இருந்தார். அப்போது, மாநில அந்தஸ்து கேட்கும்போது அது கிடைக்காது, சிறப்பு மாநில அந்தஸ்து கேளுங்கள் என போகாத ஊருக்கு வழி சென்னார்.

இன்று அதே நாராயணசாமி எங்களுக்கு அதிகாரமில்லை, எனவே மாநில அந்தஸ்து வேண்டும் என கேட்கிறார். அதிகாரத்தைக் கொடுக்கும் இடத்தில் நாராயணசாமி இருக்கும்போது எங்களை கிண்டல் செய்தார். மேலும், ஆளுநருக்குதான் அதிகாரம் என்று சொன்னார். இன்று என்ன நிலை மாறிவிட்டதா?

நாராயணசாமி: கோப்புப்படம்

நான் இருக்கிற அதிகாரத்தை வைத்துக் கொண்டுதான் காங்கிரஸிஇலும், என்ஆர் காங்கிரஸிலும் முதல்வராக இருந்து பல திட்டங்களை கொண்டு வந்து செயல்படுத்தினேன். எனக்கு அதிகாரம் இல்லை, ஆளுநர் திட்டங்களை தடுக்கிறார் எனக்கூறி சாலையில் படுத்து போராட்டமா செய்து கொண்டிருந்தோம். ஆளும் முதல்வர் சாலையில் படுத்துக் கொண்டு போராட்டம் செய்தால் மக்கள் என்ன ஆவது? அதிகார சண்டையால் 5 ஆண்டுகள் ஓடிவிட்டது. மத்தியில் பாஜகவோ, காங்கிரஸோ யார் ஆட்சியில் இருந்தாலும், எங்களுக்கு மாநில அந்தஸ்து வேண்டும் என்று பல ஆண்டுகளாக கேட்கிறோம்.

மத்தியில் தற்போது பாஜக ஆட்சியில் உள்ளது. அவர்களுடன் என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி வைத்துள்ளது. மாநில அந்தஸ்து கொடுக்காததால் கூட்டணியில் இருந்து என்.ஆர்.காங்கிரஸ் வெளியே வர வேண்டியதானே என்று நாராயணசாமி கூறுகிறார். நான் ஏற்கெனவே மாநில அந்தஸ்து இல்லாமல் ஏன் தேர்தலில் நிற்க வேண்டும் என்று ஒரு கேள்வி கேட்டிருந்தேன். அவருக்கு தைரியம் இருந்தால் தேர்தல் வேண்டாம் என்ற நிலைக்கு வரலாமே?

நாங்கள் இப்போதும் தயாராக இருக்கிறோம். எந்த கட்சியும் தேர்தலில் நிற்க வேண்டாம். மாநில அந்தஸ்து வந்தபிறகு தேர்தலில் நிற்போம். அவரால் இப்படி சொல்ல முடியுமா? நான் தைரியமாக சொல்வேன். ஆனால், அவரோ கட்சி தலைமையிடம் கேட்க வேண்டும் என உட்கார்ந்து கொண்டு இருப்பார். நாம் நிற்கவில்லை என்றால் தனியாக ஆட்சியை பிடிக்கலாம் என்று நினைப்பார்.

நமக்கு மத்திய அரசின் ஒத்துழைப்பு தேவை. திட்டங்களுக்கு நிதி பெற வேண்டும். நிறைய வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும். இவை எல்லாவற்றுக்கும் மத்திய அரசிடம்தான் கேட்க வேண்டும். இதற்கு ஆளுநரின் ஒத்துழைப்பு வேண்டும். ஆனால், வெட்ட வெளிச்சமாக நீதிமன்றம் சென்று ஆளுநருக்குதான் அதிகாரம் என்று சொல்லக்கூடிய நிலையை உருவாக்கிவிட்டார்.

நாராயணசாமியின் ஆட்சி எந்த பயனும் இல்லாத ஆட்சி. பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ள புதுச்சேரியை மீட்போம், காப்போம். மத்திய அரசின் ஒத்துழைப்போடு திட்டங்களை கொண்டு வருவதற்காக மத்தியில் உள்ள பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளோம். நமக்கு முக்கியமானது புதுச்சேரி மாநில வளர்ச்சிதான்".

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x