Published : 29 Mar 2021 07:41 AM
Last Updated : 29 Mar 2021 07:41 AM
‘‘இருபது தொகுதிகளிலும் பாஜக கால் சுண்டுவிரலை கூட பதித்துவிட கூடாது,’’ என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.
காரைக்குடி தொகுதி சாக்கோட்டை ஒன்றியம் மணக்குடியில் காங்கிரஸ் வேட்பாளர் மாங்குடியை ஆதரித்து அவர் பேசியதாவது:
அதிமுக தூக்குகிற பல்லக்கில் ஒருவர் (ஹெச்.ராஜா)பவனி வருகிறார். தூக்குகிறவர்கள் கையை விட்டுவிட்டால் பல்லக்கு கீழே விழுந்துவிடும். பல்லக்கை தூக்க கூட பாஜகவில் ஆள் கிடையாது. அதில் பவனி வரக்கூட பாஜகவிற்கும், தமிழகத்திற்கும் என்ன தொடர்பு.
சுதந்திர போராட்டத்தில் பாஜக, ஆர்எஸ்எஸ் இயக்கம் எதுவும் பாடுபட்டதா? இல்லை. ஆர்எஸ்எஸ் வெள்ளைக்காரர்கள் ஆட்சி தொடர வேண்டும் என்று சொன்னது. காங்கிரஸ் தலைவர்கள் சிறைக்கு போன காலத்தில், ஆர்எஸ்எஸ் தலைவர்கள் யாரும் சிறைக்குப் போகவில்லை.
பாஜக தமிழ் மொழி, கலாச்சாரம், இனத்திற்கு பகை. பாஜக முதல் ஆதாரக்கொள்கை இந்தி மட்டுமே ஆட்சி மொழியாக இருக்க வேண்டும். இந்தி தெரியாத அமைச்சர், அதிகாரி பேச முடியாது. அவர்களின் 2-வது ஆதாரக் கொள்கை இந்தியா இந்து நாடு. மற்றவர்கள் 2-ம் தர குடிமக்கள். அனைத்து மதத்தினருக்கும் சிவப்பு ரத்தம் தான் ஓடுகிறது. அனைத்து மதத்தினரும் சேர்ந்து வாழ்வது தான் இந்தியா.
பாஜகவின் மூன்றுவது ஆதாரக் கொள்கை சனாதன தர்மம் தான் மீண்டும் இந்தியாவை ஆள வேண்டும் என நினைக்கின்றனர். ஆனால் தமிழக வரலாறு சனாதன தர்மத்தை எதிர்த்து வந்தது. சனாதனத்தை ஒழிக்க 100 ஆண்டுகள் பெரியார், காமராஜர் போராடினர்.
தமிழ் இனத்திற்கு ஒரு சவால் வந்துள்ளது. மிகுந்த எச்சரிக்கையோடு வாக்களியுங்கள். இந்தத் தேர்தலில் திமுக, அதிமுகவிற்கு தான் யுத்தம். அந்த யுத்தத்திற்கு பிறகு மிகப்பெரிய நிழல் யுத்தம் இருக்கிறது. இருபது தொகுதிகளிலும் பாஜக கால் சுண்டுவிரலைக் கூட பதித்துவிடக் கூடாது.
பாஜக தோற்க வேண்டும். 100 நாள் வேலை திட்டத்தில் அரசு விதிப்படி சம்பளம் படிப்படியாக உயர்ந்திருக்க வேண்டும். தற்போது நாள் ஒன்றுக்கு ரூ.250 ஊதியம் தர வேண்டும். ஆனால் ரூ.150 தான் தருகின்றனர். மத்திய அரசு ஏழை, எளிய மக்கள் ரத்தத்தை உறிஞ்சும் அரசு, என்று பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT