Published : 29 Mar 2021 03:15 AM
Last Updated : 29 Mar 2021 03:15 AM
மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத் தலைவர் மருத்துவர் மகேந்திரன். கோவை சிங்காநல்லூர் தொகுதியில் போட்டியிடுகிறார். பரபரப்பான தேர்தல் பிரச்சாரத்துக்கு இடையே, அவர் ‘இந்து தமிழ்’ நாளிதழுக்கு அளித்த சிறப்புப் பேட்டி வருமாறு:
கடந்த மக்களவைத் தேர்தலில் அதிக ஓட்டுகள் வாங்குவோம் என நினைத்தீர்களா?, உங்கள் அரசியல் அனுபவம் என்ன?
நான் அரசியல் சார்ந்தோ, அரசியல் கட்சியிலோ இருந்தது இல்லை. வாழ்க்கையில் மருத்துவராக, விவசாயியாக, விவசாயத்தில் ஒரு தொழில் செய்பவராக இருக்க ஆசைப்பட்டேன். அதைத்தான் செய்து கொண்டிருக்கிறேன். இதில் அரசியல் திட்டமிடாமல் வந்தது. அரசியல் பக்கம் செல்லக்கூடாது என்று இருந்தேன். ஆனால், கமல்ஹாசனுடைய அரசியல் நோக்கம், விடாமுயற்சி, நேர்மை ஆகியவற்றால், நான் அரசியலுக்கு வந்தேன். கோவை எனது சொந்த ஊர் என்பதால், மக்களவைத் தேர்தலில் கோவையில் போட்டியிட்டேன்.
கமல்ஹாசன் அறிமுகமானது எப்போது, எப்படி?
எதேச்சையாக என் நண்பர்கள் மூலம் அவர் அறிமுகமாகி ஆறேழு மாதம் தொடர்ந்து உரையாடிய போது, அவர் தனது குறிக்கோளில் விடாமுயற்சியுடன் இருப்பார்; உண்மையாக இருப்பார் என்று முழுமையாக நம்பினேன். நம்ம எதெல்லாம் ஆசைப்படறோமோ, அதே மாதிரி ஆசையைத்தான் அவரும் வைத்துள்ளார் என்றும், மக்களுக்கு இதெல்லாம் செய்யணும்ன்னு பொதுநோக்கம் வைத்திருக்கார்ன்னும் தெரிந்து கொண்டேன். அப்புறம்தான் அவருடன் இணைந்து அரசியலுக்குள் நுழைந்தேன்.
கோவை மக்களவைத் தேர்தலில் அவ்வளவு வாக்குகள் (1,45,104 வாக்குகள், 11.6 சதவீதம்) வாங்குவோம்ன்னு முதலில் நினைத்தீர்களா?
முதலில் நினைக்கவில்லை. ஆனால் தேர்தலுக்கு கடைசி மூன்று நாள் இருக்கும்போது இவ்வளவு ஓட்டுக்கள் வாங்குவோம்ன்னு உறுதியாகத் தெரிந்தது.
இரண்டு பெரிய கட்சிக் கூட்டணிகளை மீறி, மக்கள் நீதி மய்யத்துக்கு வாக்களிக்க வேண்டிய அவசியம் என்ன?
ஒரு மாற்றம் வேண்டுமென்பது , வாக்காளர்கள் மனதில் நீண்ட நாட்களாக உள்ளது. வேட்பாளர்கள் பிடிக்கவில்லை என்றால், நோட்டாவுக்காவது வாக்களியுங்கள் என்று நான் கடந்த தேர்தலில் கூறினேன். இப்ப நீங்க நோட்டாவுக்கு போட வேண்டிய தேவை இருக்காது. ஏனெனில் நாங்கள் களத்தில் உள்ளோம் என்று கூறுகிறேன்.
உங்களிடம் வாக்கு சேகரிக்க போன தேர்தலில் எத்தனை தன்னார்வலர்கள் இருந்தனர்?
கடந்த மக்களவைத் தேர்தல் சமயத்தில் 500 பேர் மட்டுமே வேலை செய்தார்கள். கட்சி ஆதரவாளர்களா நிறைய பேர் இருப்பாங்க. ஆனா, கட்சி வேலைஎன்றால் பிரச்சாரத்துக்கு வரத் தயங்கினர். ஆனால் தற்போது, அப்படியே நிலைமை மாறிவிட்டது. ஒரு தொகுதிக்கு மூவாயிரம் பேர் கூட வர்றாங்க. எல்லாமே இளைஞர்கள்தான்.
‘கமல்ஹாசன் தனி ஹெலிகாப்டர்ல போகிறார். போற இடத்தில் மக்கள் கூட்டம் இல்லை. திரும்பி வந்துட்டார்..’ இப்படிப்பட்ட செய்திகளை எப்படிப் பார்க்கிறீர்கள்?
பொய்ப் பிரச்சாரம் என்பது அரசியலில் ஓர் அணுகுமுறையாக உள்ளது. நாங்கள் பணம் கொடுத்து மக்களை கூட்டத்துக்கு அழைத்து வருவது கிடையாது. எங்க நிகழ்ச்சி நிரல் எப்பவும் திட்டமிட்டபடி போகாது. உதாரணமாக, 2 மணிக்கு ஓரிடத்துக்கு தலைவர் கமல்ஹாசன் போகிறார் என்றால், நாங்க12 மணிக்கு மக்கள்கிட்ட சொல்லுவோம். அவ்வளவுதான். அப்படி வந்த கூட்டம்தான் எல்லாமே.
சில சமயங்களில் தாமதமாயிடுச்சுன்னா, அந்த மக்கள் வரலைன்னு நினைச்சுட்டு போயிருப்பாங்க. சரி, அதுக்குள்ளே நம்ம இன்னொருஇடத்துக்கு போயிட்டு வந்துடலாம்ன்னு நிகழ்ச்சியை மாற்றி அமைத்துக் கொள்வோம். இப்படி 234 தொகுதிகளையும், தேர்தல் பிரச்சாரத்துக்கு இருக்கும் குறைந்த காலத்தில் சுற்றுப்பயணம் செய்வது எப்படி இருக்கும்? தொகுதிக்கு ஒரு மனுசன் சுத்திச் சுத்தி போவது சாதாரண வேலையில்லை.
உங்கள் வேட்பாளர்களின் படித்தவர்கள், மென்மையான நீங்களோ பொள்ளாச்சியில் டாக்டர். கமல்ஹாசன் பிரபல நடிகர். சென்னையில் வசிப்பவர். கோவையில் போட்டியிட்டு ஜெயித்து எம்.எல்.ஏவாகி விட்டால் தொகுதிக்குள் வரமாட்டீர்கள் என எதிரணி பிரச்சாரம் செய்கிறது. இது தொடர்பாக உங்களது கருத்து?
ஒரு எம்.எல்.ஏ., மக்கள் நீதி மய்யத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டால் அவரோட குடியிருப்பு அந்த தொகுதியில்தான் இருக்கும். மக்கள் பிரச்சனைகளுக்கு குரல் கொடுக்க சட்டப்பேரவைக்குப் போக வேண்டியது அவரது கடமை. அது கமல் சாருக்கும், எனக்கும், இன்னமும் எல்லோருக்கும் பொருந்தும். அப்படிப் பார்த்தால் எனக்கும், கமல் சாருக்கும் இதுதான் எங்க ஊரு. இனி கோவையில் தான் வீடு.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT